மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது... 24.7 கிமீ மைலேஜ்!
பெட்ரோல் செலவைக் குறைக்க விரும்பும் கார் வாங்குவோருக்கு சிஎன்ஜி கார்கள் நல்ல தேர்வாக உள்ளன. அதே நேரத்தில் எஸ்யூவி காரின் தோற்றம், செயல்திறன் மற்றும் நவீன வசதிகளையும் எதிர்பார்ப்பவர்களைக் கவரும் வகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO சிஎன்ஜி கார் அறிமுகமாகி உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு நேற்றுமுதல் தொடங்கி உள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO சிஎன்ஜி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய ரூ.21,000 செலுத்த வேண்டும். மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த காரின் டெலிவரியும் தொடங்கி உள்ளது.

சிஎன்ஜி விலை விபரம்
இந்த கார் நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. MX Edge வேரியண்ட் ரூ.9.99 லட்சத்திலும், RevX Edge (O) வேரியண்ட் ரூ.10.79 லட்சத்திலும், AX5 வேரியண்ட் ரூ.11.19 லட்சத்திலும், RevX A வேரியண்ட் ரூ.12.27 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் சிஎன்ஜி எஸ்யூவி வாங்க விரும்புவோர் MX Edge வேரியண்ட்டை பரிசீலிக்கலாம். கூடுதல் வசதிகளை எதிர்பார்ப்பவர்கள் AX5 அல்லது RevX A வேரியண்ட்டுகளை தேர்வு செய்யலாம்.
எஞ்சின் திறனில் வித்தியாசம் இல்லை
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு எரிபொருள் தேர்வுகளிலுமே இதன் எஞ்சின் அதிகபட்சமாக 111 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். பொதுவாக சிஎன்ஜி மாடலானது பெட்ரோல் மாடலைவிட பவர் குறைவாக இருப்பது வழக்கம். ஆனால், இந்த மாடலில் இரண்டிலும் ஒரே பவரை வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.
சிஎன்ஜி தேர்வில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. சிஎன்ஜி முறையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 11.8 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டதாகவும், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 24.7 கி.மீ மைலேஜ் வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரட்டை சிலிண்டர்களுடன் சிஎன்ஜி டேங்க்
இந்த சிஎன்ஜி காரின் வெளிப்புறத் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. பின்புறத்தில் இடம்பெற்றுள்ள ZNG பேட்ஜ் இதன் சிஎன்ஜி பதிப்பு என்பதை காட்டுகிறது. சிஎன்ஜி சிலிண்டர்களால் காரின் பொருட்களை வைக்கும் இடம் அதிகமாகப் பாதிக்கப்படாமல் இருக்க, அடிப்பகுதியில் இரட்டை சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. வழக்கமான எக்ஸ்யூவி 3XO மாடலில் 364 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ள நிலையில், சிஎன்ஜி மாடலில் இடவசதி குறைவாக உள்ளது.
முக்கிய வசதிகள்
விலை உயர்ந்த வேரியண்ட்டான RevX A மாடலில் பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. 10.25 அங்குல அளவிலான இரண்டு திரைகள், பனோரமிக் சன்ரூஃப், செயற்கை லெதர் இருக்கைகள், 6 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மற்றும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஆகிய கார்களுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO சிஎன்ஜி கார் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


