செம சூப்பர்... எலெக்ட்ரிக் கார்னா இப்படிதான் இருக்கணும்... ஆடி இ-ட்ரான் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

வாகன பெருக்கம் அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாக இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை தொட்டு வருகிறது. எனவே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் பல்வேறு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கியமானவையாக உள்ளன.

இந்திய சந்தையை பொறுத்தவரை ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து விட்டன. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் தற்போது சூடுபிடித்து வருகிறது. இந்த வரிசையில் ஆடி நிறுவனம் தனது இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை காட்சிப்படுத்தியது.

இதை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டே இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி போய் கொண்டே வந்தது. ஆனால் தற்போது இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஆடி நிறுவனம் தயாராகி விட்டது. அதற்கு முன்னதாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

டிசைன்

நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாங்கோ ரெட் மெட்டாலிக் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த வண்ணம் காரை ஸ்போர்ட்டியாக காட்டுகிறது. அத்துடன் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற வேலைப்பாடுகள் காருடன் நன்றாக பொருந்தி போகின்றன.

இந்த காரின் முன் பகுதியில் நேர்த்தியான தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே பகல் நேர விளக்குகள் தனித்துவமான வகையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஹெட்லேம்ப்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன. சுமார் 500 மீட்டர்கள் வரை ஒளியை பாய்ச்சுவது போல் தெரிகிறது. ஆனால் லைட்டின் ரேஞ்ச் ஒரு கிலோ மீட்டருக்கு நெருக்கம் என ஆடி நிறுவனம் கூறுகிறது.

அதே சமயம் இந்த கார் ஸ்போர்ட்டியான பம்பரை பெற்றுள்ளது. இதன் இருபுறமும் கருப்பு நிற வேலைப்பாடுகளை காண முடிகிறது. அத்துடன் பம்பரின் ஏர் வெண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இது சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்குகிறது.

ஆனால் முன் பகுதியில் க்ரோம் வழங்கப்படவில்லை. முன் பக்க க்ரில் அமைப்பை சுற்றி இருப்பது க்ரோம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சில்வர் ஆகும். அதே சமயம் க்ரில் அமைப்பின் நடுவே உள்ள ஆடி லோகோவிற்கு கீழே ஃப்ரண்ட் பார்க்கிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை ஃபெண்டரின் இரு பக்கமும் வழங்கப்பட்டுள்ள இ-ட்ரான் பேட்ஜ்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். இந்த பேட்ஜூக்கு அருகே பட்டன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதனை 2 வினாடிகள் அழுத்தி பிடித்தால், இந்த காரின் சார்ஜிங் சாக்கெட் திறக்கிறது. சார்ஜ் ஏற்றி முடித்த பின் மீண்டும் 2 வினாடிகள் அந்த பட்டனை அழுத்தி பிடித்தால், சார்ஜிங் சாக்கெட் மூடி கொள்ளும். சிங்கிள் டச்சில் சார்ஜிங் யூனிட் ஓபன் ஆகாது. சார்ஜிங் யூனிட் தவறுதலாக திறந்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் நீக்கப்பட்டுள்ளது.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

அதே நேரத்தில் பெரிய 20 இன்ச் ட்யூயல் டோன் 5-ஸ்போக் அலாய் வீல்களும் ஒருவரின் கவனத்தை உடனடியாக ஈர்த்து விடும். அதேபோல் பெரிய பிரேக் காலிபர்களையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இ-ட்ரான் பேட்ஜ் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் அலாய் வீல்களும், பிரேக் காலிபர்களும் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஸ்போர்ட்டியாக காட்டுகின்றன.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

பின் பகுதியை பொறுத்தவரை நேர்த்தியான டெயில் லைட் யூனிட்களை இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. அவற்றை எல்இடி பார் இணைக்கிறது. அதே நேரத்தில் பூட் லிட்டின் இரு பக்கம் இ-ட்ரான் மற்றும் 55 க்வாட்ரோ பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரியர் பார்க்கிங் கேமராவையும் பெற்றுள்ளது. நெருக்கமான இடங்களில் பார்க்கிங் செய்வதை இது எளிதாக்குகிறது. அத்துடன் 360 டிகிரி பார்க்கிங் கேமரா வசதியையும் இந்த எஸ்யூவி ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

இன்டீரியர்

இனி காரின் உள்ளே செல்வோம். இங்கே பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர காரின் கேபினில் அலுமினிய பாகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

டேஷ்போர்டின் மைய பகுதியில் 2 டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மேலே இருப்பது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 10.1 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட் ஆகும். அதே சமயம் கீழே இருப்பது 8.8 இன்ச் யூனிட் ஆகும். இது கார் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குவதுடன், ஏர் கண்டிஷன் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல் பேனலாகவும் செயல்படும். இந்த காரில் நான்கு ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் இதனை விர்ச்சூவல் காக்பிட் என அழைக்கிறது. கார் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த ஸ்க்ரீன் வழங்குகிறது. ஸ்டியரிங் வீலில் உள்ள 'View' பட்டன் மூலம், க்ளஸ்ட்டரை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ள முடியும்.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்களை பயன்படுத்துவது எளிமையாக உள்ளது. ஃபேன்ஸியான 2 ஸ்போக் ஸ்டியரிங் வீலை இந்த கார் பெற்றுள்ளது. அத்துடன் நல்ல க்ரிப் கிடைப்பதால், பிடித்து ஓட்டுவதற்கும் நன்றாக உள்ளது. எலெக்ட்ரானிக் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜெஸ்மெண்ட் வசதியை ஸ்டியரிங் வீல் பெற்றுள்ளது.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

இனி இருக்கைகளை பற்றி பார்க்கலாம். முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளையும் மின்னணு முறையில் 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் ஓட்டுனரின் இருக்கைக்கு மட்டுமே மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் தொலை தூர பயணங்களின்போதும் சௌகரியமான பயணத்தை வழங்கும்.

அதேபோல் பின் இருக்கைகளிலும் தொடை மற்றும் முதுகுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. பின் இருக்கையில் 3 பேர் சௌகரியமாக அமர முடியும். 2 பேர் மட்டும் அமர்வதாக இருந்தால், சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். பின் இருக்கை பயணிகளுக்கு 2 டைப்-சி சார்ஜிங் சாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி & கையாளுமை

மூன்று பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் ஆடி இ-ட்ரான் கிடைக்கிறது. இதில், 50 க்வாட்ரோ ஒன்று. 71.2kWh பேட்டரி தொகுப்புடன் இது வருகிறது. 312 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் 55 க்வாட்ரோ மற்றும் எஸ் வேரியண்ட்கள் ஒரே மாதிரியான 95kWh பேட்டரி தொகுப்புடன் வருகிறது.

ஆனால் இதில் எஸ் வேரியண்ட் 435 பிஎச்பி பவரையும், 808 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். பூஸ்ட் மோடில் இது 503 பிஎச்பி பவரையும், 973 என்எம் டார்க் திறனையும் வழங்கும். நாங்கள் ஓட்டியது 55 க்வாட்ரோ வேரியண்ட் ஆகும். இது 360 பிஎச்பி பவரையும், 561 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. பூஸ்ட் மோடில் 408 பிஎச்பி பவரையும், 664 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

ஆடி இ-ட்ரான் காரில், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 125kW மோட்டார் முன் பகுதியிலும், 140kW மோட்டார் பின் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளன. ஆடி நிறுவனத்தின் க்வாட்ரோ AWD சிஸ்டம் மூலமாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தி செலுத்தப்படுகிறது.

இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 441 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என ஆடி நிறுவனம் கூறுகிறது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் இந்த காரின் ரேஞ்ச் எவ்வளவு? என்பதை எங்களால் சோதனை செய்ய முடியவில்லை.

150Kw DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். ஆனால் 11Kw AC சார்ஜரை பயன்படுத்தினால், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆவதற்கு 8.5 மணி நேரம் ஆகும்.

ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும். டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிலோ மீட்டர்கள். இந்த காரில் 6 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஸன் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது. ஆன்-ரோடு, ஆஃப்-ரோடு, கம்ஃபோர்ட் அல்லது டைனமிக் என எந்த மோடை நீங்கள் தேர்வு செய்தாலும், காரின் உயரம் அதற்கு ஏற்ப தானாகவே அட்ஜெஸ்ட் ஆகி கொள்ளும். இந்த காரில் இருப்பதிலேயே கம்ஃபோர்ட் மோடுதான் மிகவும் சிறப்பானது. இந்த மோடில், த்ராட்டில் ரெஸ்பான்ஸ், ஸ்டியரிங் வீல் செயல்பாடு மற்றும் சஸ்பென்ஸன் என அனைத்தும் நன்றாக உள்ளன. இதன் மூலம் உங்களுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும்.

அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஸன் காரணமாக இந்த காரின் ரைடு குவாலிட்டி சிறப்பாக உள்ளது. இந்தியாவில் உள்ள மோசமான சாலைகளை இந்த கார் மிக எளிதாக எதிர்கொள்ளும். அதேபோல் வெளிப்புற சத்தம் ஒரு துளி கூட கேபினுக்கு உள்ளே கேட்பதில்லை என்பது இந்த காரின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

இது எலெக்ட்ரிக் கார் என்பதால், ஐசி இன்ஜின் இருக்காது. எனவே இன்ஜின் பே-வில் இருந்து அதிர்வுகளோ அல்லது சத்தமோ வருவதில்லை. அதிவேகத்தில் செல்லும்போது டயர் சத்தம் மட்டுமே கேட்கிறது. அதையும் கூட பாடல்கள் மூலம் கேட்காமல் செய்து விடலாம்.

அதேபோல் இந்த காரின் கையாளுமையும் நன்றாக உள்ளது. குறிப்பாக ஸ்டியரிங் வீலை பாராட்டியே ஆக வேண்டும். டிரைவிங் மோடுகளுக்கு ஏற்ப இலகுவாகவோ அல்லது இறுக்கமானதாகவோ ஸ்டியரிங் வீல் மாறி கொள்கிறது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் கையாளுமை நன்றாக இருப்பதும், பாடி ரோல் மிகவும் குறைவாக இருப்பதும் சிறப்பான விஷயம்.

ஆடி இ-ட்ரான் ரிவியூ!

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

ஆடி இ-ட்ரான் 55 க்வாட்ரோ காரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இதுதான். இந்திய சந்தையில் மெர்சிடிஸ் இக்யூசி400 மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் ஆகிய கார்களுடன் ஆடி இ-ட்ரான் போட்டியிடும்.

இந்த காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், கையாளுமையும் நன்றாக உள்ளது. ஒரு ஃபேன்ஸியான காரை வாங்கும் அதே நேரத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வமும் கூடவே நிறைய பணமும் இருந்தால், ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வாங்குவது குறித்து நீங்கள் யோசிக்கலாம். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1 கோடி ரூபாய்க்கு சற்று அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-Tron Quattro 55 First Drive Review: Design, Range, Performance, Handling, Features. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X