டட்சன் ரெடி கோ மாடலில் உள்ள நிறை - குறைகள் என்னென்ன?

Written By: Krishna

எத்தனை மாடல்களில் சொகுசு கார்கள் இருந்தாலும், ஆரம்ப நிலை கார்களான ஏ - செக்மெண்ட் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். இந்திய அளவில் அதிகம் விற்பனையாவது அந்த மாடல் கார்கள் மட்டும்தான். அந்த செக்மெண்டில் தனிக் காட்டு ராஜாவாக இத்தனை காலம் இருந்து வந்தது மாருதி ஆல்ட்டோ. அதற்கு சரியான போட்டியாக களத்தில் தற்போது இறங்கியுள்ளது ரெனால்ட் க்விட். ஆல்ட்டோவை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது க்விட்.

இவை இரண்டும் ஒரு புறமிருக்க சத்தமில்லாமல் மறுபக்கத்தில் சாதனை படைத்துக் கொண்டிருப்பது டட்சன் ரெடி கோ. அண்மையில் மார்க்கெட்டுக்கு அறிமுகமான இந்த மாடல், வந்தவுடனேயே ஏகப்பட்ட லைக்குகளை அள்ளியது. சில வாரங்களுக்குள் அந்த மாடலுக்கு 10,000 புக்கிங்குகள் வந்திருப்பதே அதற்கு சாட்சி. அதன் விற்பனை எண்ணிக்கை விரைவில் 65 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த மாடலில்?.... வாருங்கள் டட்சன் ரெடி கோ மாடலின் சாதக - பாதக அம்சங்களைப் பற்றி அலசலாம்...

நிறைகள்...

ரெடி கோ மாடல் எஸ்யூவி ரக வடிவமைப்புடன் இருப்பதால், அதற்கென தனி ஆடியன்ஸ் உருவாகியிருக்கிறார்கள். அதேவேளையில் க்விட் மாடலில் இருந்து சற்று வேறுபட்டு பக்கா ஹேட்ச்பேக் டிசைனாக அது இருக்கிறது.

799 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார், 53 பிஎச்பி திறன், 72 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 கியர்கள் உள்ளன.

உடைமைகளை எடுத்துச் செல்லும் பூட்ஸ்பேஸ் வசதி ரெடி கோவில் 222 லிட்டராக உள்ளது கூடுதல் சிறப்பு. ஆல்ட்டோவில் இவ்வளவு அதிகமான பூட்ஸ்பேஸ் வசதி இல்லை.

கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி 185 மில்லி மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், சைல்ட் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை ரெடி கோ மாடலில் உள்ளன. மைலேஜ் லிட்டருக்கு 25.17 கி.மீ கொடுக்கும் என டட்சன் நிறுவனம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. ஏ - செக்மெண்ட் ஹேட்ச்பேக் கார்களில் இது நல்ல மைலேஜ் மாடல்தான் என்பதில் சந்தேகமில்லை..

குறைகள்...

நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப்போல நிறைகள் என்று இருந்தால் குறைகளும் சேர்ந்து இருந்துதானே ஆக வேண்டும். அப்படி சில மைனஸான விஷயங்கள் என எடுத்துக் கொண்டால் எஞ்சின் அதிர்வை கண்கூடாக இந்தக் காரில் உணர முடிகிறது.

வாகனம் செல்லும்போது இண்டீரியர் கேபினில் அது நன்றாகவே தெரிகிறது.

இது டட்சன் ரெடி கோ வாடிக்கையாளர்களை நிச்சயம் அதிருப்திக்கு உள்ளாக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று.

க்விட் மாடலில் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதே விலைக்கு விற்பனை செய்யப்படும் ரெடி கோ காரில் அந்த அம்சம் இல்லை. இதைத் தவிர, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சாதாரண காரைப் போன்றே டட்சன் ரெடி கோவின் செயல்பாடுகளும் உள்ளன. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக காரை இயக்கினால், எந்த விதமான அதிர்வுகளும் இல்லாமல் பயணிக்கலாம். அதைத் தாண்டினால், உங்களது பயணம் அவ்வளவு சுகமானதாக இருக்காது.

இது மட்டுமன்றி வாடிக்கையாளர்கள் சலித்துக் கொள்ளும் மற்றொரு விஷயம் எரிபொருள் டேங்கின் கொள்ளளவு. க்விட் மற்றும் ஆல்ட்டோ 800-இல் 32-லிருந்து 35 லிட்டர் கொள்திறன் கொண்ட டேங்குகள் இருக்கும்போது டட்சன் ரெடி கோவில் அதன் அளவு வெறும் 28 லிட்டராக மட்டுமே உள்ளது.

மேலும், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக ரெடி கோ மாடலில் ஒரே ஒரு துடைப்பான் (வைப்பர்) மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பது மற்றொரு குறை.

மொத்தத்தில் சில அதிருப்திக்குரிய விஷயங்கள் இருந்தாலும், அதைக் காட்டிலும் அதிகமான நிறைகள் இருப்பதால் டட்சன் ரெடி கோ வாடிக்கையாளர்களின் டெஸ்டில் பாஸ் ஆகிவிடுகிறது. மேற்கூறிய சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய மாடல் வருமாயின் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கும் என்பது நிதர்சனம்.

English summary
Looking To Book The Datsun Redi-GO? Let’s Look At Some Of The Pros & Cons.
Please Wait while comments are loading...

Latest Photos