விற்பனையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஓவர்டேக் செய்த மஹிந்திரா டியூவி 300: ஒப்பீடு!

Posted By:

அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே, விற்பனையில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டின் லீடரான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி வகை மார்க்கெட்டில் இதுவரை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இந்தநிலையில், விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு தலைவலியை கொடுத்திருக்கிறது மஹிந்திரா டியூவி 300. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை விட்டுவிட்டு, மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு கூடுதல் ஆதரவு ஏன் கிடைத்திருக்கிறது என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

டீசல் மாடல்கள் ஒப்பீடு

டீசல் மாடல்கள் ஒப்பீடு

புதிய மஹிந்திரா டியூவி 300 காம்பேக்ட் எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. எனவே, இந்த ஒப்பீட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டீசல் மாடலுடன் அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

வீல் பேஸ் அதிகம்

வீல் பேஸ் அதிகம்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி 3,995 மிமீ நீளமும், 1,835மிமீ அகலமும், 1,839மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவி 2,680மிமீ வீல் பேஸ் கொண்டது. அதேசமயத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 3,999மிமீ நீளமும், 1,765மிமீ அகலமும், 1,708மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,520மிமீ. எனவே, இந்த இரண்டில் கூடுதல் வீல் பேஸ் கொண்ட மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி உட்புறத்தில் அதிக இடவசதியை கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் மஹிந்திரா டியூவி 300 சிறப்பானதாக இருக்கிறது.

டிசைன்: மஹிந்திரா டியூவி 300

டிசைன்: மஹிந்திரா டியூவி 300

சிறுத்தையை மனதில் வைத்து எக்ஸ்யூவி500வை வடிவமைத்ததாக சொன்ன மஹிந்திரா நிறுவனம், இந்த முறை பீரங்கியை மனதில் வைத்து இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை வடிவமைத்ததாக தெரிவித்தது. அனைத்து தரப்பினரையும் கவரும்படியான தோற்றமாக கூற முடியாது. மேலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற நவ நாகரீக தோற்றமாகவும் கூற முடியாது. ஆனால், எஸ்யூவி காதலர்களை வசீகரிக்கும் அம்சங்களுடன் கம்பீரமாக இருக்கிறது. குறிப்பாக, மஹிந்திரா குவான்ட்டோ எஸ்யூவியை போன்று தூங்கி வழியாமல், பன்மடங்கு சிறப்பான தோற்றம் கொண்ட எஸ்யூவி மாடலாகவே கூறலாம். இந்த எஸ்யூவியின் வடிவமைப்பில் இத்தாலியை சேர்ந்த பிரபல பினின்ஃபரீனா நிறுவனமும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. மேலும், பார்த்து பழகிவிட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு மாற்று தேடும் மனம் கொண்ட வாடிக்கையாளர்கள் அதிகம்.

டிசைன்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

டிசைன்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

நவநாகரீக தோற்றம்தான் பெரிய ப்ளஸ். கார் போன்ற ஒரு மாயத் தோற்றம் கொண்ட எஸ்யூவி மாடல் என்பதால், நகர்ப்புற வாடிக்கையாளர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு விட்டது. டிசைனில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்தான் மிகச்சிறந்ததாக கூறலாம். முகப்பில் பெரிய க்ரில் அமைப்பு, கச்சிதமான ஹெட்லைட், பின்புறத்தில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்ட டெயில்கேட் என்று நம்மை மெய்மறக்க செய்கிறது. நாம் சில ஆண்டுகளுக்கு முன் கூறியது போல, சாமுத்ரிகா லட்சணம் கொண்ட கார் மாடல் என்பதில் மறுப்பேதும் இருக்காது. ஆனால், கொஞ்சம் மிரட்டலான எஸ்யூவியை விரும்புபவர்களுக்கு மஹிந்திரா டியூவி 300 சிறப்பானதாக அமைந்துள்ளது.

எஞ்சின்: மஹிந்திரா டியூவி 300

எஞ்சின்: மஹிந்திரா டியூவி 300

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் 84 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு நிலையில் ஆற்றலை வழங்கும் டர்போசார்ஜர் உதவியுடன் இயங்கும் இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும். ஆனால், டியூவி 300 சிறப்பானது என்பதற்கான காரணத்தை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

அதேநேரத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டீசல் மாடலில் 90 பிஎச்பி பவரையும், 203 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. எஸ்யூவி மற்றும் டீசல் வகை வாகனங்களில் டார்க் வெளிப்படுத்தும் திறன் முக்கியமானதாக பார்க்கப்படும். அந்த வகையில், மஹிந்திரா டியூவி 300 மிகச்சிறப்பான டார்க்கை வழங்கும் மாடலாக முன்னிலை பெறுகிறது.

குறிப்பு: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோ்ல எஞ்சின் மாடல்களிலும் கிடைப்பது கூடுதல் வலுசேர்க்கிறது. பெட்ரோல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைப்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

மைலேஜ்

மைலேஜ்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் டீசல் மாடல் லிட்டருக்கு 18.49 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டீசல் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிதான் மிகச்சிறப்பானது. ஏனெனில், கார் வாங்கிய பின்னர், எரிபொருள் சிக்கனம் தரும் மாடல்களால் நமது மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அளவு மிச்சப்படுத்த முடியும்.

வசதிகள்

வசதிகள்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் இன்டிரியர் மிகச்சிறப்பாக இருக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது, பாதையை தெளிவாக காட்டும் ஸ்டேடிக் பென்டிங் ஹெட்லைட் சிஸ்டம், புளூடூத், ஆக்ஸ் இணைப்பு வசதியுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம், மஹிந்திரா புளூ சென்ஸ் அப்ளிகேஷன், ரிவர்ஸ் அசிஸ்ட், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற வசதிகள் இருக்கின்றன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ரம்மியமான இன்டிரியர், லெதர் இருக்கைகள், எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் ஃபோர்டு எமர்ஜென்சி அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன. பிற மஹிந்திரா மாடல்களை காட்டிலும், மிகச்சிறப்பான உட்புற வடிவமைப்பை பெற்றிருக்கிறது. மேலும், பட்ஜெட் விலையிலான இந்த எஸ்யூவியில் இந்த இன்டிரியர் கவர்ச்சி மிக்கதாகவே உள்ளது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதியுடன் வருகிறது. ஆனால், மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் 7 பேர் வரை பயணிக்கும் வசதியை அளிக்கிறது. பின்புறத்தில் இரண்டு ஜம்ப் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மிக முக்கியமான அம்சம். ஏனெனில், பல வீடுகளில் ஒருவர் அல்லது, இருவருக்காக பெரிய கார்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதை இந்த பட்ஜெட் எஸ்யூவி மாடல் தவிர்க்கிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 362 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது. ஆனால், மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில், குவான்ட்டோ எஸ்யூவியில் பின்புற ஜம்ப் இருக்கைகளை மடக்கினால், 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதியை அளிக்கிறது. அதிக பூட் ரூம் வசதியும் வாடிக்கையாளர்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பு. அதிலும், மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி நிறைவை தருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மஹிந்திரா எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டில் கூட ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் எனப்படும் பிரேக் பவரை சீராக செலுத்தும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஈக்கோஸ்போர்ட்டின் உயர் வகை மாடல்களில்தான் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், உயர் வகை மாடலில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதுடன், விபத்துக்களின்போது அவசர மையங்களுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பும் வசதி ஈக்கோஸ்போர்ட்டிற்கு மிகப்பெரிய வலு சேர்க்கிறது. இருப்பினும், பட்ஜெட் விலையிலான டீசல் மாடலில், ஆரம்ப நிலை வேரியண்ட்டிலேயே சிறப்பான பாதுகாப்பு வசதி கொண்ட மாடல் மஹிந்திரா டியூவி 300.

 விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.7.98 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அதேநேரத்தில், மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.6.98 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் பேஸ் மாடலின் விலை சரியாக ஒரு லட்சம் வரை குறைவு. இதுதான் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டை வெகுவாக குறைக்க உதவியிருக்கிறது.

தீர்ப்பு

தீர்ப்பு

டிசைன், வசதிகள், மைலேஜ், எஞ்சின் ஆப்ஷன்கள், விலை என்று அனைத்திலும் மிகச்சிறப்பான மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்தான். மறு விற்பனையிலும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிறந்ததாக இருக்கும். ஆனால், குறைவான விலை என்ற ஒற்றை அஸ்திரத்தை வைத்து மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற்றிருக்கிறது. மேலும், வித்தியாசமான தோற்றம், 7 பேர் பயணிப்பதற்கான இடவசதி, பேஸ் மாடலில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆகியவையும், மஹிந்திரா டியூவி 300க்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் உயர் வேரியண்ட்டை வாங்கும்போது, பட்ஜெட் 10 லட்சத்தை தாண்டி செல்கிறது. ஆனால், 8 லட்சம் பட்ஜெட்டில் சிறப்பான பேக்கேஜை தரும் மாடல் மஹிந்திரா டியூவி 300தான் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவே, பட்ஜெட்டையும், தனி விருப்பத்தின் அடிப்படையிலும் இரண்டு மாடல்களும் சிறந்தவையாகவே உள்ளன. வரும் மாதங்களில் இந்த விற்பனை எண்ணிக்கை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 
English summary
The latest to join this battle is the Mahindra TUV300—Mahindra's newest sub-4 metre SUV that was launched. Mahindra has invested a lot for this SUV and has big plans with it. So how does it fare against the segment leader, the EcoSport? Let's find out:
Please Wait while comments are loading...

Latest Photos