மாருதி இக்னிஸ் Vs ஸ்விஃப்ட்.... உள்ளம் கவர் கள்வன் யார்?

Written By: Krishna

மாருதி 800-க்குப் பிறகு பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய ஒரு மாடல் ஸ்விஃப்ட். அதன் அட்டகாசமான லுக், மைலேஜ், மாடல் என அனைத்து அம்சங்களும் வாடிக்கையாளர்களை மயக்கின. இதன் காரணமாக அந்த மாடல், கபாலி டீஸர் மாதிரி செம ஹிட்டானது. அதில் பல வெர்சன்கள் வந்தாலும், அனைத்துக்கும் மக்கள் மத்தியில் மவுசு இருந்தது.

சாலையில் செல்லும் 10 கார்களில் 3 கார்கள் ஸ்விஃப்ட்டாக இருப்பதே அதற்கு சாட்சி. ப்ரீமியம் மாடல் காரான அந்த மாடல், அப்பர் மிடில் கிளாஸ் எனப்படும் உயர் நடுத்த மக்களின் கனவு வண்டி.

இந்த நிலையில் பதிய காம்பேக்ட் சியூவி ரக காரான இக்னிஸ் மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் மார்க்கெட்டில் களமிறக்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் மாருதி இக்னிஸ் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டபோதே, பரவலான வரவேற்பை அது பெற்றது.

கிராஸ்ஓவர் யுடிலிட்டி வெய்க்கில் எனப்படும் சியூவி ரக கார்களில் தற்போது மகிந்திரா கேயூவி 100 மாடல் மட்டுமே சந்தையில் உள்ளது. அந்த மாடல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக வரவுள்ளது மாருதி இக்னிஸ்.

குஜராத்தில் உள்ள சனாந்த் பகுதியில் அமைந்திருக்கும் மாருதி தொழிற்சாலையில் அந்தக் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாருதியின் தயாரிப்புகளில் பெரும்பாலனவை ஹிட்டடித்துள்ளன. ஒவ்வொன்றிலும் சில புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை வசப்படுத்தி வருகிறது மாருதி நிறுவனம். அந்த வகையில் இக்னிஸ் மாடலிலும் பல சிறப்பம்சங்கள்ள புகுத்தப்படவுள்ளன.

ஸ்விஃப்ட் மற்றும் இக்னிஸ் ஆகிய இரண்டில் எந்த வடிவமைப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கப் போகிறது? அதற்கான சிறிய ஒப்பீடைப் பார்க்கலாம்.

இக்னிஸ் காரின் முற்பகுதி மிகவும் இலகுவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேஸா மற்றும் வேகன் ஆர் மாடலைப் போலவே பாக்ஸ் வடிவிலான முகப்பை இக்னிஸ் கொண்டுள்ளது. இதைத் தவிர பகல் வேளைகளில் ஒளிரக்கூடிய விளக்குகளும் முகப்பு விளக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு.

அதே ஸ்விஃப்டை எடுத்துக் கொண்டால், அதன் டிசைன்தான் வண்டியில் ஹைலைட். அதற்காகவே அந்த மாடல் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டது. சொல்லப்போனால் ஸ்போர்டியான டிசைனில் வெளியான மாடல் கார்களிலேயே அதிக மாஸ் ஆடியன்ஸைக் கொண்டது ஸ்விஃப்ட் மாடல்தான் எனலாம். அப்படி ஒரு நேர்த்தியான வடிவமைப்பு அதில் உள்ளது.

உள்புற வடிவமைப்பை எடுத்துக் கொண்டால், இக்னிஸில் விசாலமான, கிளாஸான இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. மினி - கிராஸ் ஓவர் போல அதன் டிசைன் ட்ரெண்டியாக உள்ளது ஒரு சிறப்பம்சம்.

ஸ்விஃப்ட் மாடலைப் பொருத்தவரை ப்ரீமியமான லுக் இன்டீரியரில் உள்ளது. இரண்டு டோன் கலர்களிலான வடிவமைப்பு, ஸ்டீயரிங், ஏ.சி., டேஷ்போர்டு ஆகியவற்றின் டிசைன் உள்ளிட்டவை அட்ராக்ஷன் தரக்கூடியவை.

மொத்தத்தில் டிசைனைப் பொருத்தவரை இக்னிஸ் மாடல் 10-க்கு 8 மதிப்பெண்களையும், ஸ்விஃப்ட் மாடல் 7.5 மதிப்பெண்களையும் பெறுகின்றன.

எஞ்சின் மற்றும் கியர்....

எஞ்சின் திறனைப் பொருத்தவரை இக்னிஸில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீடல் எஞ்சினும் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. இரண்டிலும் 5 கியர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனும் உள்ளது.

மாருதி ஸ்விஃப்டிலும் இதே திறன் கொண்ட எஞ்சின்களும், கியர் சிஸ்டமுமே உள்ளன.

அதனால், எஞ்சின் திறனைப் பொருத்தவரை இரண்டு மாடல்களுக்கு 8 மதிப்பெண்களைப் பெறுகின்றன.

கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும் காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி இக்னிஸில் 180 மில்லி மீட்டராக உள்ளது. 258 லிட்டர் கொள்ளளவு வரையில் உடைமைகளை வைத்துச் செல்வதற்கான வசதி இக்னிஸில் உள்ளது (பூட்ஸ்பேஸை 415 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு).

இதைத் தவிர 2 ஏர் பேக்-கள், யுஎஸ்பி, புளூடூத், பவர் விண்டோ, ஆகிய சிறப்பம்சங்கள் இக்னிஸில் உள்ளன. ஸ்விஃப்டை எடுத்துக் கொண்டால், பவர் விண்டோ, ஆட்டோமேடிக் டெம்பரேச்சர் கன்ட்ரோல், ஏர் பேக்-கள், போன், ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

சிறப்பம்சங்களைப் பொருத்தவரை இக்னிஸ் 8 மதிப்பெண்களும், ஸ்விஃப்ட் 7 மதிப்பெண்களும் பெறுகின்றன.

விலையை எடுத்துக் கொண்டால், இரண்டு கார்களுமே ரூ.4.7 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது இரண்டு மாடல்களிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சிறப்பம்சங்கள் இருப்பதை மறுக்க இயலாது.

மாருதி ஸ்விஃப்ட் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதாநாயகன். அதன் வெற்றியை கண்கூடாகப் பார்த்தாகிவிட்டது. அதேவேளையில், அந்த சாதனையை முறியடித்து இக்னிஸும் புதிய உச்சத்தைத் தொடும் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.

English summary
Maruti Ignis vs Swift — Designed To Enthrall.
Please Wait while comments are loading...

Latest Photos