மாருதி இக்னிஸ் Vs மகேந்திரா கேயூவி 100 சியூவி ரேஸில் முந்தப் போவது எது?

Posted By: Gopi

எஸ்யூவி வசதிகள் மற்றும் ஹேட்ச்பேக் (சிறிய ரக பயணிகள் கார்) அம்சங்களுடன் ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் காம்பேக்ட் ரக சியூவி மாடல் கார்கள்.

பார்க்க சற்று பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும், விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சியூவி கார்கள்.

மஹிந்திரா கேயூவி100 Vs மாருதி இக்னிஸ்

காம்பேக்ட் சியூவி மாடலில் தற்போது மகேந்திரா கேயூவி 100 மட்டுமே சந்தையில் விற்பனைக்கு உள்ளது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரைக் கவரும் வகையிலான அம்சங்களுடன் அந்தக் கார்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஆளே இல்லாத கிரவுண்டில் தனியாக சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும் கேயூவி 100-க்கு சவால் கொடுக்க புதிதாக வருகிறது மாருதி சுஸூகி நிறுவனத்தின் இக்னிஸ். காம்பேக்ட் சியூவி மாடலில் மகேந்திரா நிறுவனத்துக்கு கடும் போட்டியாக விளங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் களமிறங்குகிறது இக்னிஸ் மாடல்.

இந்த இரண்டில் வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளையடிக்கப் போவது எது? என்பது விற்பனையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

முன்னதாக இரண்டு மாடல்களிலும் உள்ள சிறப்பம்சங்களை பார்க்கலாம்...

கடந்த ஆண்டில் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் மாருதி இக்னிஸ் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டபோது, பரவலான வரவேற்பை அது பெற்றது.

இக்னிஸ் காரின் முற்பகுதி மிகவும் இலகுவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேஸா மாடலைப் போலவே பாக்ஸ் வடிவிலான முகப்பை இக்னிஸ் கொண்டுள்ளது. இதைத் தவிர பகல் வேளைகளில் ஒளிரக்கூடிய விளக்குகளும் முகப்பு விளக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு.

மகேந்திரா கேயூவி 100 மாடலை எடுத்துக் கொண்டால், எக்யூவி 500 மாடலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மோனோகோக் சேஸ் மற்றும் சுற்றியும் பிளாஸ்டிக் பிளேட் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின் செயல்பாடு...

எஞ்சின் திறனைப் பொருத்தவரை இரண்டு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.

இக்னிஸில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீடல் எஞ்சினும் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது.

அதே கேயூவி 100-இல் 1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்கள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் எஞ்சினில் 77 பிஎச்பி 190 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும் காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி இக்னிஸில் 180 மில்லி மீட்டராகவும், கேயூவி 100-இல் 170 மில்லி மீட்டராகவும் உள்ளது.

குடும்பத்துடன் பயணிக்கும்போது, சில உடைமைகளை எடுத்துச் செல்லும் வசதி காரில் இருக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. அதற்கான பூட்ஸ்பேஸ் வசதி காரில் இருப்பது அவசியம்.

அந்த அம்சத்தை எடுத்துக் கொண்டால், இக்னிஸில் 258 லிட்டர் கொள்ளளவு வரையில் உடைமைகளை வைத்துச் செல்வதற்கான வசதி உள்ளது (பூட்ஸ்பேஸை 415 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு). கேயூவி 100-இல் 243 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய பூட்ஸ்பேஸ் வசதி இருக்கிறது.

பாதுகாப்பு....

கேயூவி 100 ஹை எண்டு மாடலில் 4 ஏர் பேக் இருப்பது அதன் கூடுதல் சிறப்பம்சம். அதேவேளையில் இக்னிஸில் தற்போதைக்கு 2 ஏர் பேக் மட்டுமே உள்ளன.

இதைத் தவிர யுஎஸ்பி, புளூடூத், பவர் விண்டோ, இருக்கை வசதிகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இக்னிஸிலும், கேயூவி 100-இலும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் எதுவுமில்லை.

மைலேஜ் மற்றும் விலை....

ஒரு காரை வாங்குவதற்கான காரணமாக வாடிக்கையாளர்கள் கூறும் இரண்டு விஷயங்கள் மைலேஜ் மற்றும் அதன் விலை.

மைலேஜைப் பொருத்தவரை, இக்னிஸில் பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று மாருதி உத்தரவாதம் அளிக்கிறது.

அதே மகேந்திரா கேயூவி 100-இல் பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 18.1 கிலோ மீட்டரும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25.3 கிலோ மீட்டரும் தரும் எனக் கூறப்படுகிறது.

விலையை எடுத்துக் கொண்டால், இரண்டு கார்களுமே ரூ.4.5 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது இரண்டு மாடல்களிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சிறப்பம்சங்கள் இருப்பதை மறுக்க இயலாது.

முடிவாக, மகேந்திரா கேயூவி 100-இன் விற்பனைக்கு சவால் கொடுக்குமா? அல்லது அதை முறியடிக்குமா? என்ற கேள்விக்கான விடை இக்னிஸ் காரின் செயல்பாட்டில் மட்டுமே ஒளிந்துள்ளது.

English summary
Maruti Suzuki Ignis vs Mahindra KUV100 - Compact Crossover Comparison.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark