மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் LWB காரின் டெஸ்ட் டிரைவ் அனுபவம்!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு கார் இந்திய கோடீஸ்வரர்களின் முதல் சாய்ஸாக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதுவரை 34,000க்கும் அதிகமான மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதே இதற்கு சான்றாக இருக்கிறது.

இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் கூடுதல் வீல் பேஸ் கொண்ட மாடல் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய கோடீஸ்வரர்களை கவர்ந்திழுக்கும் பல சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த காரை கோவாவில் வைத்து டிரைவ்ஸ்பார்க் தளம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

அதிக இடவசதி

அதிக இடவசதி

பொதுவாக மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் டிரைவர்களை பணி அமர்த்திதான் கோடீஸ்வரர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, பின்புற இருக்கையில் உரிமையாளர் அமர்வதை மனதில் கொண்டு அதிக இடவசதி, சிறப்பம்சங்கள் கொண்டதாக இதன் லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த கார் எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து காணலாம்.

இன்டீரியர்

இன்டீரியர்

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடலின் சொகுசு எவ்வாறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்காக, ஓட்டுனர்களை அமர்த்தி கொடுத்திருந்தது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். காரின் பின் இருக்கையில் அமர்ந்தவுடன் விசாலமான இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தந்தது. இருக்கைகள், உட்புற பாகங்கள் உயர்தர அனுபவத்தை தந்தது.

சாதாரண இ க்ளாஸ் காரைவிட இந்த லாங் வீல் பேஸ் மாடலானது 140மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது. இதனால், கால்களை சாவகாசமாக வைத்துக் கொண்டு அமர்ந்து செல்வதற்கு சிறப்பாக இருக்கிறது. மேலும், கைகளை ஓய்வாக வைத்துக் கொள்வதற்கு ஆர்ம் ரெஸ்ட்டும் இருக்கிறது.

கவரும் உட்புற வடிவமைப்பு

கவரும் உட்புற வடிவமைப்பு

இந்த காரில் 12.3 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் டச் சென்சிடிவ் பட்டன்கள் மூலமாக சாதனங்களை கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கிறது. முதல்முறையாக பின் இருக்கைக்கு மெமரி வசதியும் இருக்கிறது.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

  1. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் பானோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  2. பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டம் உள்ளது
  3. 64 விதமான வண்ணங்களில் மெல்லிய ஒளியை வழங்கும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளது.
  4. பின் இருக்கையை 37 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளும் வசதி உள்ளது.
  5. பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் முன் இருக்கைகையை முன்னோக்கி தள்ளி இடவசதியை அதிகரித்துக் கொள்ளலாம்.
எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 184 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா டெஸ்ட் டிரைவ் செய்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் இ350டீ மாடல். இந்த மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 258 எச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 9ஜி ட்ரோனிக் கியர்பாக்ஸ் உள்ளது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

சிறந்த செயல்திறன் மிக்க எஞ்சின், அதற்கு ஏற்றாற்போல் மென்மையான கியர்பாக்ஸ் பற்றி உதாரணம் கேட்டால், இந்த மாடலை கூறலாம். இந்த மாடலின் வேகம் அதிகரிக்கும் விதம் மிக சீராக இருக்கிறது. ஆரம்ப நிலையில் மிகச் சிறப்பான டார்க் திறனையும் இந்த காரின் எஞ்சின் சக்கரங்களுக்கு தருகிறது. அதிவேகத்தில் மிக விரைவான செயல்திறனை காட்டுகிறது இந்த டீசல் எஞ்சின்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த காரின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று ஏர் பாடி கன்ட்ரோல் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு. சாலை நிலைகளுக்கு தக்கவாறு இந்த காரின் டேம்பர் அமைப்பு மாற்றிக் கொள்ளும். அதிவேகத்தில் இந்த காரின் சஸ்பென்ஷன் காரின் உயரத்தை தாழ்வாக மாற்றிக் கொள்கிறது.

அத்துடன், இந்த சஸ்பென்ஷனில் மற்றொரு தொழில்நுட்ப சிறப்பும் உள்ளது. அதாவது, காரின் எடை அதிகரித்தாலும், குறைந்தாலும் ஒரே நிலையை இந்த சஸ்பென்ஷன் பராமரித்துக் கொள்ளும். இதனால், அதிக நிலைத்தன்மையை வழங்குகிறது.

எஞ்சின் இயக்கத்தை மாற்றும் வசதி

எஞ்சின் இயக்கத்தை மாற்றும் வசதி

இந்த காரில் கம்போர்ட், ஈக்கோ, ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் மற்றும் இன்டிவிஜுவல் என எஞ்சின் இயக்கத்தை 5 விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ள முடியும். கம்போர்ட் மோடில் வைத்து இயக்கும்போது ஸ்டீயரிங் சிஸ்டம் மிக இலகுவான உணர்வை தருகிறது. தினசரி பயன்பாட்டிற்கும், நீண்ட தூர பயணத்திற்கும் இந்த கம்போர்ட் மோடு சிறப்பாக இருக்கும்.

ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மோடில் வைத்தால் எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. அத்துடன், ஸ்டீயரிங் சிஸ்டமும், சஸ்பென்ஷனும் வேகத்துக்கு தக்கவாறு கடினமான தன்மைக்கு மாறிக் கொள்கின்றன.

வளைவுகளில் திரும்பும்போது, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் அதிக நிலைத்தன்மையையும், சிறப்பான பிரேக்கிங் திறனையும் வழங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த நீளமான காரை ஓட்டுவதை உற்சாகமானதாக மாற்றுகிறது இதன் தொழில்நுட்ப வசதிகள்.

டிசைன்

டிசைன்

ஒவ்வொரு நிறுவனத்தின் தனித்துவமான வடிவமைப்புக்கு ஒரு கார் முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஹால் மார்க் முத்திரை பெற்ற கார் என்பதை இதன் டிசைன் பரைசாற்றுகிறது.

சற்றே நீளமான பானட் அமைப்பு, எல்இடி ஹெட்லைட், வசீகரிக்கும் நட்சத்திர லோகோவுடன் கூடிய க்ரில் அமைப்பு, அழகாக சரிந்து செல்லும் கூரை அமைப்பு, அழகான பின்புற வடிவமைப்பு போன்றவை இந்த காருக்கான ரசிகர்களை அதிகப்படுத்துகிறது. மொத்தத்தில், மிக சிறந்த டிசைனுடன் கவர்கிறது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடல்.

பார்க்கிங் பைலட் வசதி

அடுத்ததாக, இந்த காரில் இருக்கும் பார்க்கிங் பைலட் என்ற தானியங்கி முறையில் காரை நிறுத்தும் வசதி. இந்த நீளமான காரை கைதேர்ந்த ஓட்டுனர்கள் கூட பார்க்கிங் செய்வதற்கு சிரமமப்படுவார்கள். அந்த சிரமத்தை போக்கும் விதத்தில், வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் செயல்பாட்டை வீடியோவில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் LWB டெஸ்ட் டிரைவ் அனுபவம்!

இந்த காரின் தானிங்கி பார்க்கிங் பைலட் வசதி மிக துல்லியமாக இருக்கிறது. இதனை சோதித்த போது அருகில் நின்ற கார் மீது மோதி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், மிக துல்லியமாக அந்த இடத்தில் பார்க்கிங் செய்து அசத்துகிறது பார்க்கிங் பைலட் வசதி.

அடுத்ததாக, கார் முழுவதும் கண்காணிக்கும் விதத்தில் 360 டிகிரி கோணத்தில் காட்டும் வசதி கொண்ட கேமரா உள்ளது. கார் எவ்வாறு பார்க்கிங் செய்கிறது என்பதை இந்த கேமரா மூலமாக தரும் படத்தை வைத்து கணித்துக் கொள்ள முடியும்.

ஏர்பேக்குகள்

ஏர்பேக்குகள்

இந்த காரில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள், பக்கவாட்டு மோதல்களை தடுக்கும் திரை சீலை போன்று விரியும் ஏர்பேக்குகள், முழங்கால்களை பாதுகாக்கும் ஏர்பேக்குகள் என நிரம்பிய பாதுகாப்பு அம்சத்தை பெற்றிருக்கிறது.

அடாப்டிவ் எல்இடி பிரேக் லைட்

அடாப்டிவ் எல்இடி பிரேக் லைட்

அடாப்டிவ் எல்இடி பிரேக் லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், கார் 50 கிமீ வேகத்தை தாண்டும்போது, பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கும் விதமாக ஹசார்டு லைட்டுகள் ஒளிர துவங்கிவிடும். இதனால், பின்புற மோதல்களை தவிர்க்கவும், திடீரென பிரேக் பிடித்தாலும், பின்னால் வரும் ஓட்டுனர்கள் கவனமாக வருவதற்கும் உதவி செய்கிறது.

அட்டென்ஷன் அசிஸ்ட்

அட்டென்ஷன் அசிஸ்ட்

நீண்ட தூர பயணங்களின்போது ஓட்டுனர் அயர்ந்துவிடுவதை கண்டுபிடித்து எச்சரிக்கும் வசதி இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது. ஸ்டீயரிங் வீல் மூலமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழப்பதை இந்த அட்டென்ஷன் அசிஸ்டம் சிஸ்டம் கண்டுபிடித்துத எச்சரிக்கும்.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்

அதிவேகத்தில் செல்லும்போது ஸ்டீயரிங் வீலை திடீரென வேகமாக திருப்பினால் கார் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், கார் வழுக்கிச் சென்று விபத்தில் சிக்காமல் நிலைத்தன்மையுடன் செலுத்தும் தொழில்நுட்ப வசதியும் இந்த காரில் இருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் ரூ.56.15 லட்சம் முதல் ரூ.69.47 லட்சம் வரையிலான மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மிகச் சிறப்பான இடவசதி, அதிக சொகுசு வசதிகள் நிரம்பி வழியும் இந்த கார் மிகச் சிறப்பான விலையில் வந்துள்ளது. நிச்சயம் இது இந்திய கோடீஸ்வர வாடிக்கையாளர்களுக்கு சரியான சாய்ஸாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புதிய மெர்சிடிஸ்  இ க்ளாஸ் LWB காரின் படங்கள்!

புதிய மெர்சிடிஸ் இ க்ளாஸ் LWB காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
The 2017 Mercedes E-Class LWB model is a game changer. What does the new E-Class offer? Read our Mercedes-Benz E-Class long-wheelbase first drive review to learn more.
Story first published: Monday, March 13, 2017, 17:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark