புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மாருதி டிசையர் உள்ளிட்ட காம்பேக்ட் செடான் கார்களுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை பார்த்து, கடந்த 2015ம் ஆண்டு ஃபோர்டு கார் நிறுவனம் ஃபிகோ ஆஸ்பயர் என்ற புத்தம் புதிய காம்பேக்ட் ரக செடான் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் மாடல் என்ற பெருமையுடன் விற்பனையில் ஓரளவு வரவேற்பை பெற்றது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், புதிய மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களின் வருகையால் கடும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, புதுப்பொலிவுடன் அண்மையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஆஸ்பயர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மாடல்களை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தது. அதில், கிடைத்த சாதக, பாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிசைன்

முன்புறத்தில் க்ரில் அமைப்பில் இருந்த படுக்கை வாட்டு க்ரோம் சட்டங்களுக்கு பதிலாக, திசுவில் செல் அமைந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் க்ரோம் வில்லைகளுடன் பிணைக்கப்பட்ட க்ரில் அமைப்பு வசீகரத்தை கூட்டுகிறது. பனி விளக்குகள் அறையின் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்ட க்ரோம் சட்டம் பதிக்கப்பட்டு கவர்ச்சி கூட்டப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் வடிவமைப்பில் மாற்றம் தெரியவில்லை. எனினும், கருப்பு பின்னணி கொடுக்கப்பட்டு இருப்பது கவர்ச்சி. பழைய டிசையர் கார் சாயலில், பம்பர் அமைப்பு மாற்றப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் கார் சற்று கூடுதல் உயரம் கொண்டதாக தோற்றமளிக்கிறது. முன்புற ஃபென்டர் பகுதியில் க்ரோம் அலங்கார வில்லை பதிக்கப்பட்டு இருப்பதுடன், அங்கு துவங்கும் பாடி லைன், பின்புறத்தில் டெயில் லைட் வரை நீள்கிறது. அதனூடாக கதவு கைப்பிடிகளும் பொருத்தப்பட்டுள்ளது ஒரு நேர்த்தியான தோற்றத்தை தருகிறது. 4 மீட்டர் நீளமுடைய இந்த காரின் பின்புற பூட் ரூம் பகுதி ஒட்ட வைத்தது போல அல்லாமல், சி பில்லர் பகுதியில் கூரை அமைப்பு மிக அழகாக இணைக்கப்பட்டுள்ளது இந்த காரின் முக்கிய அம்சம்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த புதிய மாடலில் 15 அங்குல மல்டி- ஸ்போக் அலாய் வீல்கள் காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது. இந்த சக்கரங்களின் டிசைன் மிக அழகாகவும், பிசிறு இல்லாத வகையிலும் இருக்கிறது. இந்த கார் 174 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புற டிசைன்

பின்புறத்தில் முக்கிய மாற்றமாக டெயில் லைட்டுகளை இணைப்பது போல, ஃபோர்டு பிராண்டு சின்னத்துடன் கூடிய வலிமையான க்ரோம் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் பம்பர் அமைப்பு புதிதாக இருப்பதுடன், இரண்டு வென்ட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பது தனித்துவமாக இருக்கிறது. மொத்தத்தில் ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டிசைன் 4 மீட்டர் நீளத்திற்குள் மிக நேர்த்தியான செடான் கார் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பூட்ரூம்

இந்த காரில் 359 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. போட்டியாளர்களைவிட சற்று குறைவாக இருந்தாலும், 5 பேருக்கு தேவையான உடைமைகளை இதில் அடக்க முடியும். இந்த பூட் ரூமிலேயே ஸ்டெப்னி டயருக்கான இடவசதியும் உள்ளது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்டீரியர்

உட்புறத்தில் சென்ட்ரல் கன்சோல் பகுதி தவிர்த்து, மற்ற பகுதிகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது சென்ட்ரல் கன்சோல் பகுதியை தனித்து காட்டும் விதமாக, பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃப்ளோட்டிங் திரை அமைப்பு கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கிய அம்சமாகவும், மாற்றமாகவும் கூறலாம்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய ஆஸ்பயர் காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். நேவிகேஷன் வசதியை வழங்குவதுடன், திசைக்காட்டும் காம்பஸ் வசதியையும் பெற்றிருக்கிறது. அடுத்து ஒரு முக்கிய அம்சம், சிங்க்- 3 சாஃப்ட்வேருடன் வந்திருப்பது அதிக வசதிகளை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூன்று டயல்கள் மற்றும் சிறிய மின்னணு திரையுடன் வந்துள்ளது. இதில், நடுவில் உள்ள ஸ்பீடோமீட்டருக்கு கீழாக டிஜிட்டல் திரை அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. ஆர்பிஎம் மீட்டர் மற்றும் எரிபொருள் அளவு மானி ஆகியவை இருபுறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்துகள் பார்ப்பதற்கு தெளிவாக இருப்பதால், கார் ஓட்டும்போது ஓட்டுனர்களுக்கு சிறப்பானதாக இருக்கிறது. கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், காரின் சராசரி வேகம், வெளிப்புற வெப்பநில்லை, நிகழ்நேர எரிபொருள் செலவு குறித்த தகவல்களை பெற முடிகிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டோரேஜ் வசதிகள்

இந்த காரில் இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் 12V சார்ஜர் வசதியும் உள்ளது. டேஷ்போர்டில் சிறிய ஸ்டோரேஜ் இடவசதியும் உண்டு. மொபைல்போன் மற்றும் பர்ஸ் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும். இதுதவிர, கியர் லிவருக்கு பின்னாலும், கதவுகளிலும் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளதுடன், க்ளவ் பாக்ஸ் சிறப்பான இடவசதியுடன் இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கைகள்

இந்த காரின் இருக்கைகள் நல்ல குஷனுடன் சொகுசான உணர்வை தருகிறது. பீஜ் வண்ணத்திலான இருக்கைகள் காரின் உட்புறத்தை பிரிமீயமாகவும் காட்டுகிறது. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இருப்பதும் ஓட்டுனர் தனக்கு தகுந்தவாறு இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கை

பின் இருக்கை அமைப்பு நன்றாக இருந்தாலும், ஓஹோ என்று சொல்ல முடியாது. மூன்று பெரியவர்கள் அமரும்போது மிக நெருக்கடியாகவும், அசவுகரியமான உணர்வை ஏற்படுத்துகிறது. எனினும், இதன் ரகத்தில் மிக அதிக வீல் பேஸ் கொண்ட கார் மாடல் என்பதால், லெக்ரூம் சிறப்பாக இருக்கிறது. இதன் தாழ்ந்த கூரை அமைப்பு காரணமாக, பின் இருக்கையில் உயரமானவர்களுக்கு ஹெட்ரூம் போதுமானதாக இல்லை. பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருந்தாலும், கப் ஹோல்டர்கள் இல்லை, கைப்பிடிகள் இல்லை. ஒரே ஒரு கேபின் லைட் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, புதிய பெட்ரோல் எஞ்சினை குறிப்பிடலாம். ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் பயன்படுத்தப்படும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த 3 சிலிண்டர் எஞ்சின் 2,000 ஆர்பிஎம் வரை செயல்திறன் குறைவாக இருந்தாலும், நடுத்தர மற்றும் அதிக வேகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதால் நெடுஞ்சாலை பயணங்களில் உற்சாகமூட்டுகறது. ஆரம்ப நிலையில் அதிர்வுகள் குறைவாக இருப்பது இதன் முக்கிய சிறப்பாக கூறலாம். இந்த காரில் 110 எச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. ஆனால், இந்த எஞ்சின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ்

இந்த காருக்கு கெட்ராக் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் குறைவான கியர் ரேஷியோவை கொண்டிருப்பதால், கார் எஞ்சினை எளிதாக கைக்குள் வைத்திருக்க முடிகிறது. ஆனால், கியர் லிவர் எனப்படும் பிடி அமைப்பு கைக்கு உறுத்தலாக இருப்பது அசவுகரியமான உணர்வை தருகிறது. தடாலடியாக மாற்றி ஓட்டுபவர்களுக்கு இதன் கியர்பாக்ஸ் இயைந்து இயங்காது என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டீசல் எஞ்சின்

இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் இந்த டீசல் எஞ்சின் சீரான பவர் டெலிவிரியை வழங்குவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் நெடுஞ்சாலை பயணங்களை ஓட்டுனர் அலுப்பில்லாமல் நிறைவு செய்ய உதவிகரமாக இருக்கிறது. இதன் எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருப்பதால், டாப் கியரில் கூட கியர் மாற்றும் அவசியத்தை குறைக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கியர்பாக்ஸ்

இதன் கியர் ரேஷியோவும் சிறப்பாக இருப்பதால், ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகிறது. எனினும், ஆரம்ப நிலையில் சிறிதளவு டர்போ லேக் இருப்பதை மறுக்க இயலாது என்றாலும், பெரிய குறையாக கூறமுடியாது. பெட்ரோல் மாடலில் பயன்படுத்தப்படும் அதே கெட்ராக் டிரான்மிஷன்தான் இந்த டீசல் மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், ரிவர்ஸ் கியர் போடும்போது, லிவரை சற்று தூக்கி பின்னர் ரிவர்ஸ் கியரை தட்ட வேண்டும் என்பது இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஸ்டீயரிங் சிஸ்டம்

ஃபோர்டு கார்களின் ஸ்டீயரிங் சிஸ்டம் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்களால் நம்பப்படும் விஷயம். இந்த காரின் ஸ்டீயரிங் வீல் சற்று பெரிதாகவும், பிடித்து ஓட்டுவதற்கு லாவகமாகவும் கொடுக்கப்பட்டு இருப்பது கார் பிரியர்களை கவரும் முக்கிய விஷயமாக கூறலாம். ஆனால், தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் சிஸ்டத்தைவிட, பழைய மாடலில் இருந்த ஹைட்ராலிக் ஸ்டீயரிங் சிஸ்டம் சிறப்பானதாகவே கருத முடியும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கையாளுமை

இந்த காரின் சாஸியும், கட்டமைப்பும் மிகச் சிறப்பானதாக கூறலாம். அதேபோன்று, கடினமான சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருப்பதால், அதிவேகத்தில் மிகச் சிறப்பான நிலைத்தன்மையுடன் செல்கிறது. அதேபோன்று, ஸ்டீயரிங் சிஸ்டமும், சஸ்பென்ஷன் மற்றும் சாஸி இணைந்து சிறந்த கையாளுமையை வழங்குகிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த காரில் புதிய ஆன்ட்டி ரோல் பார் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுடன், சரியான விகிதாச்சாரத்தில் எடை விரவல் கொடுக்கப்பட்டு இருப்பதால், அதிவேகத்தில் வளைவுகளில் கூட அதிகம் பாடி ரோல் தெரியவில்லை. இந்த கார் வெறும் 4.90 மீட்டருக்குள் திரும்பும் திறன் பெற்றிருப்பதால், பார்க்கிங் செய்வது எளிதாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சப்த தடுப்பு அமைப்பு

காரின் உட்புறத்தில் NVH எனப்படும் அதிர்வுகள் மற்றும் சப்த தடுப்பு அமைப்பு சற்று ஏமாற்றம்தான். குறிப்பாக, டீசல் மாடலில் எஞ்சின் மற்றும் வெளிப்புற சப்தம் அதிகமாக உணர முடிகிறது. பெட்ரோல் மாடலில் அதிவேகத்தில் செல்லும்போது இறைச்சல் சப்தம் உள்ளே வருவதை உணர முடிகிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்படுகிறது. டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிரேக் சிஸ்டம்

பழைய மாடலின் பிரேக் சிஸ்டத்தின் செயல்திறனும், செயல்பாடும் ஏமாற்றத்தை கொடுத்து வந்தது. இந்த குறையை புதிய ஆஸ்பயர் காரில் ஃபோர்டு சரிசெய்துள்ளதை நன்கு உணர முடிகிறது. மேலும், டயர்களும் மிகச் சிறந்த தரைப் பிடிப்பை வழங்குகின்றன.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முக்கிய வசதிகள்

  • ரிமோட் மூலமாக பூட் ரூம் திறக்கும் வசதி
  • ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள்
  • ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்
  • புஷ் பட்டன் ஸ்டார்/ ஸ்டாப் சிஸ்டம்
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள்
  • ஆட்டோமேட்டிக் வைப்பர்கள்
  • எஞ்சின் இம்மொபைலைசர்
  • 6 ஏர்பேக்குகள்
  • இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் ஒயிட் கோல்டு, மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் கிரே, அப்சொலூட் பிளாக், டீப் இம்பேக்ட் புளூ, ரூபி ரெட் மற்றும் ஆக்ஸ்போர்டு ஒயிட் ஆகிய 7 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வேரியண்ட்டுகள் மற்றும் விலை விபரம்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் 5 பெட்ரோல் வேரியண்ட்டுகள், 5 டீசல் வேரியண்ட்டுகள் மற்றும் ஒரு பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் என 11 விதமான தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.5.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.8.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Variant Petrol Diesel
Ambiente Rs 5.55 Lakh Rs 6.45 Lakh
Trend Rs 5.99 Lakh Rs 6.89 Lakh
Trend+ Rs 6.39 Lakh Rs 7.29 Lakh
Titanium Rs 6.79 Lakh Rs 7.69 Lakh
Titanium+ Rs 7.24 Lakh Rs 8.14 Lakh
Titanium (Automatic) Rs 8.49 Lakh N/A
புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

போட்டியாளர்கள்

காம்பேக்ட் செடான் ரகத்தில் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா டீகோர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் உள்ளிட்ட கார் மாடல்களுடன் வலுவான சிறப்பம்சங்களுடன், சிறந்த தேர்வாக புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் வந்துள்ளது.

Data (Petrol/Diesel) Ford Aspire Maruti Dzire Honda Amaze
Displacement (cc) 1194/1498 1197/1248 1199/1498
No. Of Cylinders 3/4 4/4 4/4
Power (bhp) 95/99 82/74 89/99
Torque (Nm) 120/215 113/190 110/200
Mileage (km/l) 20.4/26.1 22.1/28.4 19.5/27.4
Boot Space (Litres) 359 378 420
Starting Price Rs 5.55 Lakh Rs 5.60 Lakh Rs 5.59 Lakh
புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

வாரண்டி

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு 2 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், கூடுதலாக 3 நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் கொடுக்கப்படுகிறது. இதனால், 5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டியை பெற முடியும். ஃபோர்டு ஆஸ்பயர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு கிலோமீட்டருக்கு 38 பைசாவும், டீசல் மாடலுக்கு 46 பைசாவும் செலவீனமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு செலவீனம் குறித்தும் முழுமையான விபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது ஃபோர்டு.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிரைவ்ஸ்பா்க் தீர்ப்பு

சிறந்த பொறியியல் நுட்பத்துடன் கூடிய சாஸியில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அதிக சிறப்பம்சங்கள், புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் பழைய மாடலைவிட குறைவான விலையில் வந்துள்ளது நிச்சயம் இந்த ரகத்தில் டிசையர், அமேஸ் கார்களைவிட்டு மாற்றை விரும்புபவர்களுக்கு புதிய ஆஸ்பயர் சிறந்த தேர்வாக சொல்ல முடியும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அபினந்த் வேணுகோபால் கருத்து

இந்த காரை ஓட்டி அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அபினந்த் வேணுகோபால் கூற்றுப்படி, இந்த கார் ஓட்டுனருக்கான சிறப்பான அம்சங்களை பெற்றிருப்பதாக கூறி இருக்கிறார். எரிபொருள் சிக்கனம், வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பான மாடலாக இருக்கிறது என்று தனது இறுதி கருத்தை பதிவு செய்துள்ளார்.

Tamil
மேலும்... #ஃபோர்டு
English summary
We drive the 1.2-litre petrol and 1.5-litre diesel variants of the new Ford Aspire in the lands of Jodhpur, Rajasthan, to see how much of a fun-to-drive compact-sedan, it is. But in a quick sum-up, if you have the love for driving, is space-conscious but has the budget to settle for a 'smaller' sedan, the new Aspire is definitely the way to go.
Story first published: Wednesday, October 24, 2018, 17:46 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more