Subscribe to DriveSpark

ஆல்ட்டோ 800 Vs இயான் Vs க்விட் Vs ரெடி கோ .... மக்கள் ஆதரவு எந்த மாடலுக்கு?

Written By: Krishna

கார் வாங்க வேண்டும் என நினைக்கும் மிடில் கிளாஸ் மக்களின் கனவுகளை நனவாக்கிய பெருமை ஏ-செக்மெண்ட் (ஆரம்ப நிலை) கார்களையே சேரும். இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மற்றும் சராசரி வருமான விகிதம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள்தான் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர்.

கார் வாங்க விரும்பினால், அவர்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் ஆரம்ப நிலை கார்கள்தான். விலை குறைவு, பராமரிப்பு செலவு குறைவு, சமாளிக்கக்கூடிய மைலேஜ் என நடுத்தர வர்க்கத்தினருக்காகவே பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டவை அந்த கார்கள். அதனால்தான் பிற ரகங்களுடன் ஒப்பிடும்போது ஏ-செக்மெண்ட் கார்களின் விற்பனை எப்போதுமே உச்சத்தில் இருக்கின்றன.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
கார்கள் ஒப்பீடு

மாருதி நிறுவனத்தின் மிகப் பெரிய சேல்ஸ் வால்யூமாக இருப்பது இந்த ரக கார்கள்தான். அதற்குப் போட்டியாக ரெனால்ட் நிறுவனம், க்விட் என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்தி விற்பனையில் வளர்ந்து வருகிறது.

ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள ஹுண்டாய் இயான் மாடலும் கணிசமான விற்பனையைக் கொண்டுள்ளது. ஏ-செக்மெண்ட் மார்க்கெட்டில் புதிதாகக் களமிறங்கத் தயாராகியுள்ள மற்றொரு கார் டட்சன் ரெடி கோ. விற்பனையில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் மாருதி நிறுவனத்துக்கு ஆல்ட்டோவுக்கு பயம் காட்டும் வகையில் ஏற்கெனவே க்விட் மாடல் வளர்ந்து வருகிறது.

தற்போது டட்சன் ரெடி கோவும் வந்துவிட்டால், மார்க்கெட்டில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆல்ட்டோ 800, இயான், க்விட், ரெடி கோ ஆகிய நான்கு மாடல்களிலும் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றிய சிறு ஒப்பீடைப் பார்க்கலாம்...

டிசைனைப் பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ 800, கிட்டத்தட்ட அதன் பழைய மாடலின் சாயலில்தான் உள்ளது. முன்பகுதி கிரில் மற்றும் முகப்பு விளக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இயான் மாடலில் நேர்த்தியான டிசைன் உள்ளது. மாடர்னாகவும், ஸ்டைலாகவும் முன்பக்கம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லேம்புகள் (பின்புற விளக்குகள்) ஆகியவை வித்தியாசமானதாகவும், ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளன.

சமீபத்தில் அறிமுகமான க்விட் மாடலின் டிசைன், ரெனால்ட் டஸ்டரைப் போல உள்ளது. எஸ்யூவி ரக வடிவமைப்புடன் அந்த மாடல் இருப்பதால், அதற்கென தனி ஆடியன்ஸ் உருவாகியிருக்கிறார்கள்.

ரெடி கோ மாடலும் கிட்டத்தட்ட எஸ்யூவி ரக வடிவமைப்பில்தான் உள்ளது. அதேவேளையில் க்விட் மாடலில் இருந்து இது சற்று வேறுபடுகிறது. பக்கா ஹேட்ச்பேக் டிசைனாக அது இருக்கும் என்று டட்சன் நிறவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சின்....

ஆல்ட்டோ 800 - 796 சிசி எஞ்சின், 48 பிஎச்பி திறன், 69 என்எம் டார்க்

இயான் - 814 சிசி எஞ்சின், 55 பிஎச்பி திறன், 75 என்எம் டார்க்

க்விட் - 799 சிசி எஞ்சின், 53 பிஎச்பி திறன், 72 என்எம் டார்க்

ரெடி கோ - 799 சிசி எஞ்சின், 53 பிஎச்பி திறன், 72 என்எம் டார்க்

இந்த நான்கு மாடல்களிலும் 5 கியர்கள் உள்ளன. உடைமைகளை எடுத்துச் செல்லும் பூட்ஸ்பேஸ் வசதி ஆல்ட்டோ 800 -இல் 177 லிட்டரும், இயானில் 215 லிட்டரும், க்விட்டில் 300 லிட்டரும், ரெடி கோவில் 222 லிட்டரும் உள்ளன.

கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி ஆல்ட்டோ 800 -இல் 160 மில்லி மீட்டரும், இயானில் 170 மில்லி மீட்டரும், க்விட்டில் 180 மில்லி மீட்டரும், ரெடி கோவில் 185 மில்லி மீட்டரும் உள்ளன.

இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், சைல்ட் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை இந்த நான்கு மாடல்களிலும் உள்ளன.

விலை மற்றும் மைலேஜ்....

ஆல்ட்டோ 800 - ரூ.2.75 லட்சம், மைலேஜ் லிட்டருக்கு 24.7 கி.மீ

இயான் - ரூ.3.53 லட்சம், மைலேஜ் லிட்டருக்கு 21.1 கி.மீ

க்விட் - ரூ.2.87 லட்சம், மைலேஜ் லிட்டருக்கு 25.17 கி.மீ

ரெடி கோ - விலை நிர்ணயிக்கப்படவில்லை, மைலேஜ் லிட்டருக்கு 25.17 கி.மீ

மொத்தத்தில் நான்கு மாடல்களிலும் வாடிக்கையாளர்களின் அதிக நம்பிக்கையை பெற்றிருப்பது மாருதி ஆல்ட்டோ 800தான். ஹுண்டாய் இயானைப் பொருத்தவரை விலை சற்று அதிகம். ரெனால்ட் க்விட் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது. டட்சன் ரெடி கோ இன்னும் அறிமுகமாகததால், அதன் செயல்பாடு பற்றி தெளிவாக அறிய முடியவில்லை.

பாதுகாப்பு வசதிகள், வடிவமைப்பு, விலை, மைலேஜ் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கார் நிச்சயம் மக்களின் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில் இந்த நான்கு மாடல்களில் முதலிடம் பிடிக்கப் போவது எது? என்பது விரைவில் தெரியவரும்.

English summary
New Maruti 800 vs Hyundai Eon vs Renault Kwid vs Datsun redi-GO.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark