ஹோண்டா சிட்டியில் உள்ள நிறை - குறைகள் என்ன?

Written By: Krishna

ஹோண்டா நிறுவனத்துக்கு மகுடம் சூட்டிய மாடல் சிட்டி. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செடான் காரான ஹோண்டா சிட்டி, விற்பனையிலும் அதே அளவு தெறி காட்டியது.

கிட்டதட்ட 5 லட்சம் சிட்டி மாடல் கார்கள் விற்பனையாகியுள்ளதாகக் கூறுகிறது ஹோண்டா நிறுவனம். இந்த மாடலில் உள்ள சாதக, பாதக அம்சங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.

ஹோண்டா சிட்டி
 

நிறைகள்....

சிட்டியில் கிளாஸான லுக், முகப்பு மற்றும் டெய்ல் லேம்ப்கள் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளன. 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஹோண்டா சிட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. அலாய் வீல், வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதி, 2 ஏர் பேக்-கள், பின்புற பார்க்கிங் கேமரா, கீ லெஸ் என்ட்ரி (ரிமோட்டில் இயங்கும் சாவிகள்) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மைலேஜைப் பொருத்தவரை, சிட்டி மாடல் பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று ஏஆர்ஏஐ சான்று அளித்துள்ளது.

ஹோண்டா சிட்டி கார்
 

இடவசதி, சொகுசு ஆகியவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிட்டி மாடலில் தரப்பட்டுள்ளன. அதேபோல் வடிவமைப்பும் செடான் காருக்குத் தகுந்த டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது.

நீளம் - 4,440 மி.மீ. உள்ளது. அதேபோல், அகலம் - 1,695 மி.மீட்டராகவும், உயரம் - 1,495 மி.மீட்டராகவும், வீல்பேஸ் - 2,600 மி.மீட்டராகவும் உள்ளன.

சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி (கிரவுண்ட் கிளியரன்ஸ்) 165 மி.மீட்டராக இருக்கிறது. இதைத்தவிர உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான பூட்ஸ்பேஸ் வசதி 510 லிட்டராக உள்ளது.

விலையை எடுத்துக் கொண்டால், சிட்டி மாடலைப் பொருத்தவரை பெட்ரோல் கார் ரூ.8.75 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையும், டீசல் கார், ரூ.9.90 லட்சம் முதல் ரூ.12.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இவை அனைத்துமே சிட்டி மாடலில் உள்ள ஹைலைட்டான விஷயங்கள்...

சிட்டி கார்
 

குறைகள்...

சரி இத்தனை நிறைகள் இருக்கும்பட்சத்தில் ஒரு சில குறைகள் அனைத்து மாடல் கார்களிலும் இருப்பது இயல்புதானே... அதற்கு ஹோண்டா சிட்டியும் விதி விலக்கு இல்லை. அதையும் பார்க்கலாம் வாருங்கள்...

சிட்டியில் பெட்ரோல், டீசல் என இருவேறு எஞ்சின் மாடல்கள் உள்ளன. அமேஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு செடான் கிளாஸான சிட்டி மாடலிலும் டீசல் எஞ்சின் கார்களை மார்க்கெட்டுக்குக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் ஹோண்டாவுக்கு ஏற்பட்டது.

ஏனென்றால் ஹோண்டாவின் போட்டி நிறுவனங்கள் அனைத்தும் டீசல் மாடல்களில் கணிசமான விற்பனையைக் கொண்டுள்ளன.

இதையடுத்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சிட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் உற்பத்தித் திறன் உள்ளது. இந்த ரக கார்களுடன் போட்டி போடும் வகையிலான எஞ்சினாக இது இல்லை. வெர்னா, வெண்ட்டோ, ரேபிட் உள்ளிட்ட மாடல் கார்களைப் போல அதிக செயல்திறன் மிக்க எஞ்சின்கள் ஹோண்டாவிலும் பொருத்தப்பட வேண்டும் என்பது பெரும்பலானோரது எதிர்பார்ப்பு.

சிட்டியின் பெட்ரோல் எஞ்சினை எடுத்துக் கொண்டால், அது 1.5 லிட்டர் திறன் உடையது. அது 117 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க்கை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

பின்புறம் உள்ள இருக்கைகள் உயரமானவர்கள் அமர்வதற்கு ஏற்றவகையில் இல்லை. மேற்கூரைக்கும் (ரூஃப்), இருக்கைக்கும் இடையேயான உயரம் குறைவாக இருப்பதே அதற்குக் காரணம். சிட்டி மாடலில் இது ஒரு குறையாகக் கருதப்படுகிறது.

ஸ்டீயரிங் மிகவும் இலகுவாக இருக்கிறது என்பதும் வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் மற்றொரு விஷயம். நெடுஞ்சாலைகளில் வேகமாகப் பயணிக்கும்போது அதில் அதிர்வுகளை உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயரத்துக்குத் தகுந்தவாறு சரி செய்ய முடியாத சீட் பெல்ட்கள், மடக்க இயலாத பின்புற இருக்கைகள் ஆகியவையும் சிட்டி மாடலின் சில குறைபாடுகள்.

மொத்ததில் ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும், மார்க்கெட்டில் மாஸான காராகவே வலம் வருகிறது ஹோண்டா சிட்டி. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சில திருத்தங்களைச் செய்தால், அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

English summary
Passion Running High For The Honda City? A Quick Overview Of Pros & Cons.
Story first published: Monday, August 1, 2016, 7:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark