புதிய ஸ்கோடா ரேபிட் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தனது கார்களை புதுப்பொலிவுடன் இந்தியாவில் களமிறக்கி வருகிறது செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம். ஸ்கோடா ஆக்டாவியா, சூப்பர்ப் உள்ளிட்ட கார்களை தொடர்ந்து அண்மையில் ரேபிட் காரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதிய ரேபிட் கார் வந்துள்ளது. இந்த புதிய காரின் பெட்ரோல், டீசல் மாடல்களை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசவுரியில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது இந்த கார் பற்றிய கிடைத்த சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

ரேபிட் காரின் தோற்றம் பலரையும் கவர்ந்தது. அந்த தோற்றக் கவர்ச்சியை மேலும் கூட்டியிருக்கின்றனர் ஸ்கோடா டிசைனர்கள். குறிப்பாக, முகப்பில் மிக அசத்தலான பட்டர்ஃப்ளை க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. அதனை சுற்றி கொடுக்கப்பட்டிருக்கும் சில்வர் பீடிங்கும் வசீகரத்தை கூட்டுகிறது.

கவர்ச்சிகர முகப்பு

அதேபோன்று, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளும் புதிய ஸ்கோடா ரேபிட் காரில் சேர்க்கப்பட்டிருக்கும் மிக முக்கிய அம்சங்கள். ஹெட்லைட் வடிவமைப்பும் மாறியிருக்கிறது. அதேபோன்று புதிய பனி விளக்குகள், தேன்கூடு வடிவ க்ரில் கொண்ட ஏர்டேம் பகுதி, புதிய பம்பர் அமைப்பு உள்ளிட்டவையும் கவர்ச்சியை கூட்டும் அம்சங்கள்.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் வலிமையான தோற்றத்தை தரும் பாடி லைன்கள், ஹெட்லைட்டிலிருந்து டெயில் லைட் வரையிலான ஷோல்டர் லைன் ஆகியவை நவநாகரீக காலத்துக்கான கார் மாடலாக காட்டுகிறது. புதிய 15 இன்ச் அலாய் வீல்களும், சிறப்பான தோற்ற வசீகரத்தை தருகின்றன.

பின்புற தோற்றம்

பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய பூட் ரூம் மூடியும், டெயில் லைட் க்ளஸ்ட்டரின் சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் கருப்பு வண்ணமும் புதிது. மொத்தத்தில் சிறப்பாக மெருகு கூட்டப்பட்டு இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக மாறியிருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டு மாடல்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், டீசல் மாடலின் டிஎஸ்ஜி கியர்பாக்ஸை டிரிப்டோனிக் கியர் லிவர் மூலமாக மேனுவலாகவும் கியர் மாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், பேடில் ஷிஃப் வசதி கிடையாது.

மைலேஜ் விபரம்

பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 15.41 கிமீ மைலேஜையும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 14.84 கிமீ மைலேஜையும் தரும் என ஸ்கோடா தெரிவிக்கிறது. அதேபோல, டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.13 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.72 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஓட்டுதல் தரம்

ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல் மாடலை ஓட்டும்போது டீசல் மாடல் போன்று சற்று சப்தம் அதிகமாக தெரிந்தது. ஆனால், இந்த காரின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஆரம்பத்தில் மந்தமாக தெரிந்தாலும், 3,000 ஆர்பிஎம் தாண்டும்போது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. எனவே, நகர்ப்புற பயன்பாட்டைவிட நெடுஞ்சாலையில் பயன்படுத்துவதற்கு சிறப்பாக இருக்கும்.

உற்சாகம்

ரேபிட் டீசல் காரின் மேனுவல் மாடல் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகிறது. பிக்கப் சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் அதற்கு நேர் மாறாக உள்ளது. அதாவது, 2,000 ஆர்பிஎம் வரையிலான ஆரம்ப நிலையில் மிகவும் மந்தமாக இருக்கிறது. 2,500 முதல் 4,000 ஆர்பிஎம்.,மில் ஓட்டுவதற்கு மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

தடுமாற்றம்

அதேபோன்று, வேகத்தை கூட்டும்போது கியர்மாற்றம் சிறப்பாக இருக்கிறது. வேகத்தை குறைக்கும்போது தடுமாற்றமான உணர்வை தருகிறது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கார்களில் க்ளட்ச் பெடல் இல்லாமல், மின்னணு கருவியின் உதவியுடன் க்ளட்ச் இயக்கப்பட்டு மேனுவலாக கியர் மாற்றம் நடக்கிறது. இந்த தடுமாற்றம் ஏற்படுவதாக கருதலாம்.

 டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் சிறப்பு

டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட கார்களை முழுமையான ஆட்டோமேட்டிக் கார் போலவும், ட்ரிப்டோனிக் கியர் லிவர் அல்லது பேடில் ஷிஃப்டர்கள் மூலமாக கியரை கூட்டிக் குறைக்க முடியும் என்பது இதன் சிறப்பாக இருக்கிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்கள் மைலேஜ் குறைவாக இருக்கும். ஆனால், டிஎஸ்ஜி கார்கள் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை வழங்கும்.

கையாளுமை

ஸ்கோடா ரேபிட் கட்டுமானத்தில் மட்டுமல்ல, கையாளுமையிலும் ஜோராக இருக்கிறது. வளைவுகளில் நம்பிக்கையுடன் திருப்ப முடிவதுடன், ஸ்டீயரிங் சிஸ்டத்தின் ரெஸ்பான்ஸ் மிகச் சிறப்பாக இருப்பதால், காரை வெகு எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது. வளைவுகள் அதிகம் கொண்ட சாலைகளில் கூட எளிதாக ஓட்ட முடிகிறது.

 இன்டீரியர் அமைப்பு

ஸ்கோடா ரேபிட் காரின் இன்டீரியர் தரம் பற்றி அதிகம் கூறவேண்டியதில்லை. கருப்பு மற்றும் பீஜ் வண்ணக் கலவையிலான இன்டீரியர் கவர்கிறது. இன்டீரியர் வடிவமைப்பும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன. அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹெட்ரெஸ்ட்டுகளும், தரமான லெதர் இருக்கைகளும் சிறப்பானதாக இருக்கின்றன.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 6.5 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை உங்களது ஸ்மார்ட்போனுடன் எளிதாக இணைத்துக் கொள்வதற்கான மிரர்லிங்க் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

கார்டு ஹோல்டர்

ஸ்கோடா ரேபிட் காரில் ஏசி வென்ட்டுகளுக்கு கீழே கிரெடிட், டெபிட் கார்டுகளையும், டோல்கேட் ஸ்மார்ட் கார்டுகளை வைப்பதற்கான இடவசதி இருப்பது சுவாரஸ்யமான விஷயம். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு இது சிறப்பான வசதியாக இருக்கும்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த காரில் வேகத்தை காட்டுவதற்கும், ஆர்பிம் மீட்டருக்கும் அனலாக் டயல்களும், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் அளவு உள்ளிட்டவை டிஜிட்டல் திரை மூலமாக தகவல் பெறும் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

முக்கிய வசதிகள்

இரவு நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியை பிரதிபலிக்காமல் உள்வாங்கிக் கொள்ளும் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர்கள், ஸ்டீயரிங் வீலை வசதியாக அமைத்துக் கொள்வதற்கான அட்ஜெஸ்ட் வசதியும் உள்ளன.

நவீன பவர் விண்டோஸ்

தவிரவும், பின்புற பயணிகளுக்கு குளிர்ச்சியை வேகமாக வழங்குவதற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ரியர் ஏசி வென்ட்டுகள், முன்புறத்திலும், பின்புறத்திலும் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான போதுமான ஹோல்டர்கள் இருப்பது நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக இருக்கும்.

 முன் இருக்கை அமைப்பு

முன் இருக்கைகள் மிக சவுகரியமாக இருக்கின்றன. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி இருப்பதும் நீண்ட தூரம் ஓட்டும்போது சவுகரியமான உணர்வை தரும். சென்டர் கன்சோலில் இருக்கும் பட்டன்களை இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது.

 பின் இருக்கை

அதேபோன்று பின் இருக்கையில் சராசரி உயரம் கொண்டவர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். பின் இருக்கையில் கை வைத்துக் கொள்வதற்கான ஆர்ம் ரெஸ்ட் இருப்பதும் நீண்ட தூர பிராயணத்தின்போது அலுப்பை குறைக்கும். மூன்று பேர் அமர்ந்தால் சற்று நெருக்கடியாக இருக்கிறது. இரண்டு பேர் மிக சொகுசாக அமர்ந்து பயணிக்கலாம்.

 பூட் ரூம்

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 460 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்களையும், உடைமைகளையும் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி உள்ளது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி கார்களில் 510 லிட்டர் கொள்திறன் இடவசதியும், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 494 லிட்டர் கொள்திறன் இடவசதியும், ஹூண்டாய் வெர்னா காரில் 464 லிட்டர் கொள்திறன் இடவசதியும் உள்ளன.

 ஏமாற்றம்

அந்த வகையில், மிட்சைஸ் மார்க்கெட்டில் குறைவான கொள்திறன் கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கிறது. அதேநேரத்தில், 5 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தினர் வார இறுதி பயணங்கள் செல்லும்போது போதுமான உடைமைகளை வைத்து எடுத்துச் செல்லலாம். அதேபோன்று, ஸ்பேர் வீலும், பஞ்சர் ஒட்டுவதற்கான டூல்ஸ் போன்றவையும் டிக்கியில் இருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள்

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு உயிர் காக்கும் காற்றுப் பைகள், சக்கரங்களில் பிரேக்குகள் பூட்டுதலில்லா நிறுத்த திறனை வழங்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் நிலைகுலையாமல் காத்தருளும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சீட் பெல்ட்டுகள் ஆகிய வசதிகள் உள்ளன.

இதர பாதுகாப்பு அம்சங்கள்

பின்புறம் காரை நகர்த்தும்போது பொருட்கள் இருப்பது குறித்து எச்சரிக்கும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் சிஸ்டம், சரிவான மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி நகராமல் தடுக்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

 வண்ணங்கள்

பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கேபுசினோ பீஜ், கார்பன் ஸ்டீல், சில்க் புளூ மற்ரும் ஃப்ளாஷ் ரெட் என விருப்பம்போல் தேர்வு செய்வதற்கான 6 கவர்ச்சிகர வண்ணங்களில் கிடைக்கிறது.

எமது அபிப்ராயம்

நீண்ட தூர பயணங்கள் அடிக்கடி செல்வோருக்கு புதிய ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல், டீசல் மாடல்களின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் நல்ல தேர்வாக அமையும். உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை பெற விரும்புவோர்க்கும், நகர்ப்புற பயன்பாட்டிற்கும் ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் சரியான தேர்வாக இருக்கும்.

போட்டியாளர்கள்

மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் தனது பங்காளி ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட கார்களுடன் நேரடியாக போட்டி போடுகிறது. போட்டியாளர்களை சமாளிக்க தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஸ்கோடா ரேபிட் கார் நிச்சயம் வரவேற்கத்தக்க மாடலாகவே இருக்கிறது. இது நிச்சயம் விற்பனையில் ஸ்கோடாவுக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

விலை விபரம்- பெட்ரோல்

விலை விபரம்- பெட்ரோல்

ஆக்டிவ்: ரூ. 8,34,906

ஆம்பிஷன்: ரூ.9,26,728

ஆம்பிஷன் (ஆட்டோமேட்டிக்): ரூ.10,38,841

ஸ்டைல்: ரூ.10,44, 163

ஸ்டைல் (ஆட்டோமேட்டிக்): ரூ.11,46,187

 விலை விபரம் - டீசல் மாடல்

விலை விபரம் - டீசல் மாடல்

ஆக்டிவ்: ரூ.9,57,335

ஆம்பிஷன்: ரூ.10,49,157

ஆம்பிஷன் (ஆட்டோமேட்டிக்): ரூ.11,71,471

ஸ்டைல்: ரூ.11,66,590

ஸ்டைல் (ஆட்டோமேட்டிக்): ரூ.12,78,590

வித்தியாசம்

பழைய மற்றும் புதிய ஸ்கோடா ரேபிட் கார்களின் முகப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தோம். அதனை இந்த படத்தின் மூலமாக எளிதாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

புதிய டாடா ஹெக்ஸா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்!

ரெனோ க்விட் ஏஎம்டி Vs மாருதி வேகன் ஆர் ஏஎம்டி: ஒப்பீடு!

English summary
Read our exclusive review of the new Skoda Rapid, as we put the diesel and the petrol variants through its paces.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark