புதிய டாடா ஸீக்கா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

By Saravana

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமம் என்ற பெருமைக்குரிய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவில் தடுமாறி வருவது அறிந்ததே. தரம் சரியில்லை, டிசைன் சரியில்லை, சேவை சரியில்லை என்ற பல சரியில்லை பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

அதன் விளைவாக, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஸெஸ்ட் மற்றும் போல்ட கார்கள் டிசைன், தரம் போன்றவற்றில் வாங்கிய வாடிக்கையாளர்களை குறை சொல்ல வைக்காமல், நிறைவை தந்திருக்கிறது.

தற்போது, அதே வரிசையில் டாடா ஸீ்க்கா கார் விரைவில் களமிறக்கப்பட உள்ளது. இந்த காரை கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், இந்த காரில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டாடா ஸீக்கா டெஸ்ட் டிரைவ்

டாடா ஸீக்கா டெஸ்ட் டிரைவ்

டாடா ஸீக்கா காரின் பெட்ரோல், டீசல் என இரு மாடல்களின் டாப் வேரியண்ட்டுகளை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அதில், இந்த காரில் நாம் கவனித்த விஷயங்களை தொடர்ந்து காணலாம்.

முகப்பு டிசைன்

முகப்பு டிசைன்

சந்தேகத்துக்கு இடமின்றி டிசைனில் பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறது டாடா ஸீக்கா. முதல் பார்வையிலேயே வசீகரிக்கும். தேன்கூடு வடிவிலான முகப்பு க்ரில் அமைப்பு, ஏர்டேம், பனிவிளக்குகள், ஸ்மோக்டு ஹெட்லைட்டுகள் அனைத்தும் கனக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஹெட்லைட்டும், ஹனிகோம்ப் க்ரில் அமைப்பும் மிக சிறப்பாக பொருத்தியிருக்கிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பொதுவாக டாடா கார்கள் பக்கவாட்டில் வளைவு, நெளிவுகள் அற்றதாக வெறுமையாக இருக்கும் என்ற குறையுண்டு. இந்த குறையை போக்கும் விதத்தில், மிக கூர்மையான ஷோல்டர் லைன், சரியான விகிதத்தில் வளைவுகளுடன் கூடிய வீல் ஆர்ச்சுகள், அழகான டிசைன் கொண்ட 14 இன்ச் சக்கரங்கள் காரின் தோற்றத்தின் மதிப்பை கூட்டுகின்றனர். கருப்பு நிற பி பில்ல், இன்டிகேட்டர்களுடன் கூடிய சைடு மிரர்களும் வலு சேர்க்கும் அம்சங்கள்.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பெரும்பாலும் பின்புற டிசைன்தான் பல கார்களில் சொதப்பிவிடும். ஆனால், அதனை கவனமாக கையாண்டு மிகவும் ஸ்போர்ட்டியாக இருக்கும் விதத்தில் வடிவமைத்துள்ளனர் டாடா டிசைனர்கள். கூரையுடன் இயைந்த ரியர் ஸ்பாய்லர், கச்சிதமான டெயில்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பரில் கருப்பு நிற பிளாஸ்டிக் பாகம் என அசத்துகிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களிலான டேஷ்போர்டு அலங்காரமும், டிசைனும் ஒரு பிரிமியமான கார் என்ற உணர்வை தருகிறது. ஆனால், அந்த சாம்பல் நிறம் டல்லடிக்கிறது. டேஷ்போர்டில் இரு மருங்கிலும் உள்ள ஏசி வென்ட்டுகள் காரின் வண்ணத்திற்கு ஏற்ப வண்ண அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, கவனத்தை அப்படியே, சென்டர் கன்சோல் பக்கம் கண்களை திருப்பினால், மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டிருப்பதால், உள்ளத்திற்கு உற்சாகத்தை தருகிறது.

அலங்கார வேலைப்பாடுகள்

அலங்கார வேலைப்பாடுகள்

ஸ்டீயரிங்கில் அலுமினிய அலங்காரத்தோடு காட்சி தருவதோடு, கன்ட்ரோல் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரட்டை டயல்களுக்கு நடுவில் மல்டி இன்ஃபர்மேஷன் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த பட்ஜெட் காரின் மதிப்பை உயர்த்துவதாக இருக்கிறது. இருக்கைகளின் தரமும், சொகுசும் சிறப்பாக இருக்கிறது. கதவுகளில் க்ரோம் பூச்சு கைப்பிடிகள், மர வேலைப்பாட்டு அலங்காரம் ஆகியவை வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். எல்லாம் சரி, ஒரு குறையில்லாவிடில் அது டாடா கார் ஆகுமா? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

ஏசி கட்டுப்பாட்டு அமைப்பு

ஏசி கட்டுப்பாட்டு அமைப்பு

சென்டர் கன்சோலுக்கு கீழே ஏசி.,யை கட்டுப்படுத்துவதற்கான திருகுகள் தாழ்வாக இருப்பதால், கார் ஓட்டும்போது எளிதாக இயக்க முடியவில்லை. அத்துடன், அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தரம் மிக மோசமாக இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

சென்டர் கன்சோலில் சிறிய டிஜிட்டல் திரையுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு நேவிகேஷன் வசதி, பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். இதன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒரு 20 லட்ச ரூபாய் மதிப்பிலான காரில் இருக்கும் மியூசிக் சிஸ்டத்தின் அளவுக்கு மிக தரமான, துல்லியமான இசையை இதன் மியூசிக் சிஸ்டம் வழங்குகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் புளுடூத் இணைப்பு வசதிகள் உள்ளன.

நேவிகேஷன் வசதி

நேவிகேஷன் வசதி

இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக டர்ன்-பை-டர்ன் மேப் மை இந்தியா நேவிகேஷன் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு மொபைல்போன் வாடிக்கையாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மேப் மை இந்தியாவின் நேவிமேப் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொண்டால், காரின் நேவிகேஷன் அப்ளிகேஷனுடன் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருட்களுக்கான வசதி

பொருட்களுக்கான வசதி

டோல் பூத் டிக்கெட்டுகள், நாணயங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஆவணங்களை வைப்பதற்கு என 22 இடங்களில் ஸ்டோரேஜ் வசதியை டாடா ஸீக்கா காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது நிச்சயம் ஒவ்வொரு பயணத்தின்போது பயணிகளுக்கும், ஓட்டுபவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

கார் ஜூக் ஆப்

கார் ஜூக் ஆப்

இதுவும் இந்த செகமென்ட்டில் முதல்முறையான வசதி. இந்த அப்ளிகேஷன் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 10 ஸ்மார்ட்போன்களை ஒரே சமயத்தில் இணைத்துக் கொள்ள முடியும். இதன்மூலமாக, வெவ்வேறு ஸ்மார்ட்போன்களிலிருந்து, பாடல்களை எடுத்து ஒரு பொதுவான ப்ளே லிஸ்ட்டை உருவாக்கிக் கொள்ள ஏதுவாகும். பயணிக்கும் அனைவருக்கும் விருப்பமான பாடல்களை தேர்வு செய்து கேட்பதற்கு இந்த அப்ளிகேஷன் உதவுகிறது.

இடவசதி

இடவசதி

காரின் உள்ளே நுழைந்தவுடன், பிற டாடா கார்களை போன்றே ஓர் விசாலமான இடவசதியை உணர முடிகிறது. ஏனெனில், டாடா மோட்டார்ஸ் கார்களை உள்பகுதியிலிருந்து வடிவமைக்க துவங்குவதாக ஆட்டோமொபைல் துறையினர் ஸ்லாகித்து கூறுவதுண்டு. இடவசதி மட்டும் என்றில்லை, பிற அம்சங்களிலும் டாடா ஸீக்கா மிகச்சிறப்பான தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடலில் புதிய அலுமினிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 3 சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 85 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில், கொடுக்கப்பட்டிருக்கும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மென்மையாக இருப்பதும் ஆச்சரியமே. பொதுவாக, 3 சிலிண்டர் எஞ்சின் என்றாலே சற்று அதிர்வுகள் அதிகமிருக்கும் என்ற கூற்றை சற்றே உடைத்தெறிந்துள்ளது. அதேபோன்று, உட்புறத்தில் சப்த அளவும் மிக குறைவாக இருக்கிறது.

 பெட்ரோல் மாடல் செயல்திறன்

பெட்ரோல் மாடல் செயல்திறன்

நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினாலும், நெடுஞ்சாலையில் வேகம் அதிகரிக்கும்போது எஞ்சின் அதிர்வுகளும் சற்றே மிக அதிகமாக இருப்பதால், ஓட்டும்போது உற்சாகத்தை குறைப்பதாக உள்ளது. அதேநேரத்தில், 1,800 ஆர்பிஎம் முதல் 3,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவிரி சிறப்பாக இருப்பதால், எளிதாக ஓவர்டேக் செய்ய முடிகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

டாடாவின் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.4 லிட்டர் டீசல் எஞ்சினிலிருந்து உருவாக்கப்பட்ட புதிய 3 சிலிண்டர்கள் கொண்ட ரெவோடார்க் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடலிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இயக்குவதற்கு மிக எளிதாக இருக்கிறது.

டீசல் செயல்திறன்

டீசல் செயல்திறன்

இதன் டர்போசார்ஜர் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. எனவே, 1,800 ஆர்பிஎம் வரையிலான ஆரம்ப வேகத்தில் டர்போலேக் மிக குறைவாக தெரிவதுடன், பிக்கப் அருமையாக இருக்கிறது. ஆனால், அதற்கு மேல், அதனை தக்க வைத்துக் கொள்ள கியரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இது டீசல் மாடலின் மிகப்பெரிய குறை.

டிரைவிங் ஆப்ஷன்கள்

டிரைவிங் ஆப்ஷன்கள்

டாடா ஸீக்கா காரின் பெட்ரோல், டீசல் என இரு மாடல்களும் Eco மற்றும் City என இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்களில் வைத்து ஓட்டுவதற்கான வசதியை பெற்றிருக்கின்றன. ஈக்கோ மோடில் சீரான பவர் டெலிவிரி மூலமாக கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். சிட்டி மோடில் வைத்தால், எஞ்சின் பவர் டெலிவிரி சற்று கூடுதலாகும்.

மைலேஜ்

மைலேஜ்

டாடா ஸீக்கா காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் என இரண்டையும் குறைவான கால அவகாசத்தில் குறைந்த தூரமே டெஸ்ட் டிரைவ் செய்ததால், உண்மையான மைலேஜ் விபரங்களை அளிக்க முடியவில்லை.

டிரைவிங் பொசிஷன்

டிரைவிங் பொசிஷன்

ஓட்டுனர் இருக்கையிலிருந்து சாலையை தெளிவாக பார்க்கும் அளவுக்கு ஏ பில்லர் மிகச்சிறப்பாக பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், சென்டர் கன்சோலை இயக்குவதற்கும், ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளை இயக்குவதும் மிக எளிதாக இருக்கிறது. தாவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஸ்டீயரிங் வீல் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இல்லை என்பது மிகப்பெரிய குறை.

கையாளுமை

கையாளுமை

இதன் ரகத்தில் மிகச்சிறப்பான கையாளுமையை கொண்ட மாடலாக வருகிறது. குறிப்பாக, வளைவுகளில் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு காரை ரோல் ஓவர் ஆகாத அளவுக்கு தாங்கிப் பிடித்து நிலைத்தன்மையுடன் செலுத்துகிறது. கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டமும் பாதுகாப்பை அதிகரிக்கிறது. லைட்டாக தெரிந்தாலும், இதன் ஸ்டீயரிங் வீல், உடனடி ரெஸ்பான்ஸ் தருவதால், நம்பகமாக காரை செலுத்த உதவுகிறது. அதற்காக, ஃபியட் புன்ட்டோ காருடன் ஒப்பிடக் கூடாது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

பிரேக் பவரை வீல்களுக்கு சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி., தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரேக் பெடல்கள் மிதிக்கும்போது மிகவும் மென்மையாக தெரிந்தாலும், சிறப்பான செயல்திறனை காட்டுகிறது. நம்பகத்தன்மையுடன் ஓட்டலாம்.

சஸ்பென்ஷன் சிஸ்டம்

சஸ்பென்ஷன் சிஸ்டம்

பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடல் 20கிலோ கூடுதல் எடை கொண்டிருப்பதால், சற்று வலுவான ஸ்பிரிங்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், சொகுசாகவே தெரிகிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

உட்புறத்தில் இடவசியுடைய ஹேட்ச்பேக் காரில் பூட்ரூம் மிக குறைவாக இருக்கும். ஆனால், டாடா ஸீக்கா காரில் 242 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது. சிறிய குடும்பத்தினருக்கான தேவையை கச்சிதமாக பூர்த்தி செய்யும்.

 சாதக விஷயங்கள்

சாதக விஷயங்கள்

  • சிறப்பான செயல்திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின்
  • மென்மையான 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்
  • இடவசதி
  • அருமையான ஏசி
  • ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • டிஜிட்டல் திரையுடன் கூடிய ரியர் பார்க்கிங் சென்சார் சிஸ்டம்
  • க்ளட்ச் லாக்[க்ளட்ச் பெடலை சற்று அழுத்தினால்தான் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும்.]
  • அதிர்வுகள், சப்தம் குறைவான கேபின்
  •  பாதக அம்சங்கள்

    பாதக அம்சங்கள்

    கட்டுமானத் தரம்.

    ஏசி வென்ட்டுகளை முழுமையாக மூட இயலாதது.

    ஸ்டீயரிங் வீல் அட்ஜெஸ்ட் வசதி இல்லை.

    தெறிக்கவிடுமா?

    தெறிக்கவிடுமா?

    ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த காரின் புத்தம் புதிய டிசைன், வசதிகள், இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின், மைலேஜ் என அனைத்திலும் தன்னிறைவான மாடலாகவே கூறலாம். டாடா ஸீக்கா பெட்ரோல் மாடல் நிச்சயம் மாருதி செலிரியோ மற்றும் ஹூண்டாய் ஐ10 கார்களுக்கு கடும் போட்டியை தரும். ஆனால், போட்டியாளர்களான மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களின் விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, டாடா பிராண்டு காரை வாங்குவதில், இன்னமும் தயக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதில், டாடா மோட்டார்ஸ் கூடுதல் கவனம் செலுத்தினால் ம்டடுமே, இதுபோன்ற தயாரிப்புகள் மார்க்கெட்டில் முன்னிலை பெறும்.

    சமூக வலைதள பக்கங்கள்

    டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

    டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

    டிரைவ்ஸ்பார்க் டீம்

    டிரைவ்ஸ்பார்க் டீம்

    டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா

    படங்கள்: ராஜ்கமல்

    தமிழில்: சரவணராஜன்

    புதிய டாடா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

    படம் எடுக்கறதுக்குள்ள பாதி புல்லை காணோம்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X