கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு... குவாட்ரிசைக்கிளை அனுமதிப்பதில் அரசுக்கு சிக்கல்!!

Posted By:

கார் நிறுவனங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி தருவதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. எனவே, குவாட்ரிசைக்கிள்கள் மார்க்கெட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்டோரிக்ஷாவைவிட பெரியதாகவும், கார்களைவிட சிறியதாகவுமான புதிய நான்கு சக்கர பயணிகள் வாகனங்களை குவாட்ரிசைக்கிள் என்றழைக்கப்படுகின்றன.  பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ60 என்ற பெயரில் முதல் குவாட்ரிசைக்கிளை தயாரித்துள்ளது.

 

இந்த புதிய ரக வாகனத்தை சாலையில் இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தது. குவாட்ரிசைக்கிள்களை சாலையில் இயக்குவதற்கான பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை நிபுணர் குழுவை அமைத்து மத்திய அரசு தயாரித்தது.

இதன்படி, தயாரிக்கப்படும் குவாட்ரிசைக்கிள் வாகனங்களை அக்டோபர் முதல் இயக்குவதற்கு அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி தருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களின் உயரதிகாரிகள் நேற்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னான்டசையும் சந்தித்து பேசினர். அப்போது, குவாட்ரிசைக்கிள் வாகனங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் மிக குறைவான குவாட்ரிசைக்கிள்களால் அதிக விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த குவாட்ரிசைக்கிள் வாகனங்களை தயாரிக்க 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தங்களுக்கு கால அவகாசமும் கேட்டுள்ளன.

கார் நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக குவாட்ரிசைக்கிள்கள் வருவதில் கால தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

Latest Photos