கார்களுக்கான கலால் வரிச்சலுகையை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலனை!

Written By:

கடந்த பிப்ரவரி முதல் வழங்கப்பட்டு வரும் கார்களுக்கான கலால் வரிச்சலுகையை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான கலால் வரியில் சலுகை அறிவிக்கப்பட்டது.

Arun Jaitley
 

இதன்படி, சிறிய கார்களுக்கான கலால் வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், எஸ்யூவி வகை வாகனங்களுக்கா 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக குறைக்கப்பட்டது. மிட்சைஸ் கார்களுக்கு 24 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், பெரிய வகை கார்களுக்கு 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

இதேபோன்று, இருசக்கர வாகனங்களுக்கான கலால் வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பு சலுகையால் கார், பைக்குகளின் விலை கணிசமாக குறைந்தது. இந்த நிலையில், மத்தியில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இந்த வரிச்சலுகையை நீடிப்பதாக அறிவித்தது.

வரும் 31ந் தேதியுடன் இந்த வரிச்சலுகைக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது. இந்தநிலையில், வாகன விற்பனை மந்தநிலையில் இருப்பதை காரணம் காட்டி, வரிச்சலுகையை நீடிக்குமாறு வாகன நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் செய்தியாளர்கள் வினவியபோது, வரும் 31ந் தேதி வரை பொறுத்திருங்கள்," என்று கூறினார்.

இந்த நிலையில், வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீடிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். ஒருவேளை வரிச்சலுகை நீடிக்கப்பட்டால், புத்தாண்டில் கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று நிம்மதி தரும் விஷயமாக அமையும்.

மேலும், கார் நிறுவனங்களுக்கும் விற்பனையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக அமையும். ஏனெனில், ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதாக பெரும்பாலான கார் நிறுவனங்கள் அறிவித்துவிட்டநிலையில், வரிச்சலுகை நீக்கப்பட்டால் அது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை வழங்கும் என்பதோடு, கார் விற்பனையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

English summary
The Union Finance Ministry of India might extend the excise duty cuts given to the automobile industry beyond the deadline of December 31st, as sales are still weak.
Story first published: Saturday, December 27, 2014, 12:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark