ரெனோ க்விட்டுக்கு 'கவுன்ட்டர்' கொடுக்க வரும் மாருதி ஆல்ட்டோ 800 டீசல்!!

Written By:

ரெனோ க்விட் காருக்கான வரவேற்பு மாருதி நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது. குறிப்பாக, மாருதி ஆல்ட்டோ 800 காரின் விற்பனையை ரெனோ க்விட் கார் தகர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் சராசரியாக 20,000 என்ற அளவில் இருக்கும் மாருதி ஆல்ட்டோ கார் மாடல்களின் விற்பனை தடாலடியாக குறைந்தால், அது மாருதியின் வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நெருக்கடியை உடனடியாக போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் மாருதி இறங்கியிருக்கிறது. அதற்காக, ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடலை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

தற்போது மாருதி ஆல்ட்டோ 800 கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ரெனோ க்விட் காரின் அழுத்தத்தை சமாளிக்க டீசல் மாடலை களமிறக்குவதே, தற்காலிகமான நிவாரணமாக அமையும் என்று மாருதி முடிவு செய்து அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

மாருதி செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 793சிசி எஞ்சினை ஆல்ட்டோ 800 காரிலும் பயன்படுத்த இருக்கிறது மாருதி. இரட்டை சிலிண்டர்கள் கொண்ட இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி செலிரியோ காரில் இருக்கும் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தரும் நிலையில், மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் இதைவிட கூடுதல் மைலேஜ் தரும் வகையில் இருக்கும். அதாவது, லிட்டருக்கு 28 கிமீ முதல் 30 கிமீ வரை மைலேஜ் தரும் வகையில், எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்களின் கவனம் நிச்சயம் மாருதி ஆல்ட்டோ 800 டீசல் மாடல் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அடுத்த மாதம் மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இல்லாதபட்சத்தில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் குறைவான விலை டீசல் கார் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

பலமான வரவேற்பு

பலமான வரவேற்பு

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இந்தியாவின் குறைவான விலை கொண்ட டீசல் காராகவும், அதிக மைலேஜ் தரும் காராகவும் இருக்கும். எனவே, நிச்சயமாக வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. ரெனோ க்விட் காரின் நெருக்கடியிலிருந்து ஆல்ட்டோ 800 காரை காப்பாற்ற மாருதிக்கு இருக்கும் ஒரே வழி இப்போதைக்கு இதுதான்...!!

 
English summary
According to reports, Maruti is planning to launch the diesel version of Alto 800 in India soon. It will become the country's most affordable diesel car.
Story first published: Saturday, November 14, 2015, 10:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark