மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் 5 - ஆம் தலைமுறை மாடல்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல் இ க்ளாஸ் சொகுசு செடான் கார். இந்தநிலையில், கால மாற்றத்துக்கு தக்கவாறு வடிவமைப்பு, தொழில்நுட்பங்கள், வசதிகளில் தற்போது 5 ஆம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பிலும், நவீன தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் போட்டியாளர்களைவிட பல படிகள் முன்னே நிற்கும் என்று கூறலாம். இலகு எடை கட்டுமானம், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புத்தம் புதிய டீசல் எஞ்சின், மல்டி சேம்பர் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆகியவை, பயணிகளுக்கு உன்னத பயண அனுபவத்தை வழங்கும் என நம்பலாம்.
குறிப்பாக, இந்த கார் டிரைவரின் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பழைய மாடலைவிட வீல் பேஸ் 43 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், தற்போது இன்னும் சிறப்பான இடவசதியை வழங்கும். இன்டீரியரை பொறுத்தவரை முற்றிலும் புதிய அத்தியாதத்திற்கு செல்ல இருக்கிறது.
பெரும்பாலும் டச் சென்சிட்டிவ் கன்ட்ரோல் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன் தொடுதிரை போன்றே இயக்கும் வசதியை கொண்டிருக்கும். இதனால், ஓட்டுனர் மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும். மேலும், இந்த திரை கையெழுத்துக்களை உணர்ந்து செயல்படும் திறன் கொண்டது.
இந்த காரில் வரும் லிங்குவாட்ரோனிக் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக, இதிலுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சாதனத்தை வாய்மொழி உத்தரவுகள் மூலமாக எளிதாக கடுப்படுத்தலாம். அதிக இரைச்சல் உள்ள நேரத்தில் கூட இது மிகச்சிறப்பாக செயல்படும்.
மேலும், உட்புறத்தை மர வேலைப்பாடுகளும் அழகுறச் செய்திருக்கும். இந்த காரின் இன்டீரியரில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் 64 வண்ணங்களில் ஒளிரும். பர்ம்ஸ்டெர் 3டி சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது.
பெரும்பாலும் இந்த ரக சொகுசு கார்களில் உரிமையாளர்கள் பின்புறத்தில் அமர்ந்து செல்வதால், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படி, மிகச்சிறப்பான வடிவமைப்பு மற்றும் சாய்மான வசதி கொண்ட இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2017 மாடலாக வரும் புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட புதிய பெட்ரோல்[E200] எஞ்சின் மற்றும் புதிய டீசல் எஞ்சின் [E220d] பயன்படுத்தப்பட இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 279 எச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் 150 எச்பி பவரையும், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் 258 எச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும்.
மேலும், இந்த காரில் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாடலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் இருக்கும் பேட்டரியில் மட்டும் 30 கிமீ தூரம் பயணிக்க முடியும். மற்றொரு 6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 333 எச்பி பவரையும், 480 என்எம் டார்க்கையும் வழங்கும் ஆற்றல் வாய்ந்ததாக வருகிறது.
அனைத்து எஞ்சின் மாடல்களும் ஸ்டாப்- ஸ்டார்ட் சிஸ்டத்துடன் வருகிறது. அத்துடன் அனைத்து மாடல்களிலும் 9 ஸ்பீடு 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த காரில் வரும் ஆட்டோனாமஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக, கார் 210 கிமீ வேகம் வரை தானியங்கி முறையில் செலுத்தும் வசதியுடன் வருகிறது. முன்னால், பின்னால் வரும் வாகனங்களுடன் சரியான இடைவெளியில் காரை செலுத்தவும் உதவும். அத்துடன், பாதுாப்பான பயணத்தையும் உறுதி செய்யும். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் அதிகப்படியான பாதுகாப்பை உறுதி செய்யும்.
ஆக்டிவ் பிரேக் சிஸ்டம் மூலமாக விபத்து அபாயம் குறித்து ஓட்டுனரை எச்சரிப்பதுடன், அவசர காலங்களில் திடீரென பிரேக் பிடிக்கும்போது, சக்கரங்களுக்கு சரியான அளவில் பிரேக் பவரை செலுத்தி காரை பாதுகாப்பாக நிறுத்த உதவும்.
மல்டிபீம் ஹெட்லைட் சிஸ்டம், ரிமோட் பார்க்கிங் பைலட் சிஸ்டம் என்று நவீன தொழில்நுட்ப அம்சங்களின் சங்கமமாக வருகிறது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார். இந்த காரின் தகவல்களை பார்த்துவிட்டீர்கள். இப்போது, புதிய மாடல் எவ்வாறு இருக்கும் என்பதை கேலரியில் சென்று பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications












































