உற்பத்தி செலவு அதிகரிப்பு... கார்களின் விலை உயர்கிறது...!

Written By: Krishna

சர்வதேச அளவில் பொருளாதார நிலை மந்தமடைந்து வந்தாலும், இந்தியாவில் தொழில் உற்பத்தி வளர்ச்சியடைந்து கொண்டேதான் வருகிறது என்று நாள்தோறும் மத்திய அரசு பெருமிதம் தெரிவித்து வருகிறது.

உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்ட சுணக்கம் நம்மை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு தாக்கம் கார் உற்பத்தித் துறையிலும் எதிரொலிக்கப் போகிறது. புரியவில்லையா?... கார்களின் விலையை உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறதாம்.

கார் விலை உயர்கிறது

அதற்குக் காரணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூலப்பொருள்களின் விலை உயர்ந்ததுதானாம். அதி நவீனத் தொழில்நுட்பத்திலான காராக இருந்தாலும் சரி, ஆரம்ப நிலை காராக இருந்தாலும் சரி, அவற்றை உற்பத்தி செய்ய முக்கியமாகத் தேவைப்படும் மூலப்பொருள்கள் உருக்கு (ஸ்டீல்), ரப்பர், அலுமினியம் மற்றும் செம்பு ஆகியவைதான்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் ஸ்டீல் விலை 36 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர, மூன்று ஆண்டுகளாக குறைவாக இருந்த ரப்பர் பொருள்களின் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் விர்ரென உயர்ந்துள்ளது.

செம்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்டவையும் சராசரி விலை அளவைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கார்களை உருவாக்குதற்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாம்.

அதை ஈடுகட்டுவதற்காக பண்டிகைக் காலத்தைக் காரணம் காட்டி கார்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாம் சில நிறுவனங்கள்.

இந்த விலை உயர்வு கடைசியாக வாடிக்கையாளர்கள் தலையில்தான் வந்து விடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், கூடுமான வரையில் மூலப்பொருள் விலையேற்ற சுமைகளை ஏற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே கார்களை விற்க முயல்வோம் என்று ஹுண்டாய் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விற்பனைப் பிரிவு) ராகேஷ் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.

பழைய விலையிலேயே கார்களே விற்பது சற்று சவாலான காரியம்தான் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோல், மஹிந்திரா கம்பெனி கார்களின் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் பிரவீண் ஷா, மூலப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால் வேறு வழியின்றி கார்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வதை நினைத்துப் பார்த்தால், நடுத்தர வர்க்க மக்களின் கார் வாங்கும் ஆசைகள், வெறும் கனவாய்ப் போய் விடுமோ என்ற ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.

English summary
Car Prices Set To Rise By Festive Season.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark