விஸ்வரூபம் எடுக்கும் மாருதி சியாஸ்.... விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது

Written By: Krishna

மிடில் கிளாஸ் மற்றும் அதை விடக் குறைவான வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கான பெஸ்ட் சாய்ஸ் பைக்காக எப்படி டிவிஎஸ் நிறுவன தயாரிப்புகள் இருக்கிறதோ? அதைப்போல மாருதி என்றாலே நடுத்தர வர்க்கத்தினருக்கான கார் கம்பெனி என்ற கருத்து உள்ளது.

பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் மிடில் கிளாஸ் மக்கள் கார் வாங்க நினைத்தால், அவர்கள் கண் முன்னால் பளிச்சென வந்து நிற்பது மாருதி கார்கள்தான். மாருதி 800 தொடங்கி ஆல்ட்டோ, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட் என கைக்கு அடக்கமான விலையில் பல கார்களை அறிமுகப்படுத்தியிருப்பது அந்நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டி.

Maruti Ciaz

ஆனால், மாருதி அதோடு நின்று விடவில்லை. பிரீமியம் மாடல் கார் மார்க்கெட்டிலும் கால் வைத்து ஒரு முன்னோட்டம் பார்த்தது. கிசாஷி, கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட பிரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த முயற்சியால் மாருதி நிறுவனம் சூடு போட்டுக் கொண்டதுதான் மிச்சம்.

அந்த இரண்டு மாடல்களுமே பக்கா ஃபெயிலியர். விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து மீண்டும் கோதாவில் குதித்தது மாருதி நிறுவனம்.

இந்த முறை சியாஸ் என்ற பெயரில் பிரீமியம் காரை அறிமுகப்படுத்தியது. அந்த செக்மெண்டில் தனி சாம்ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கும் ஹோண்டா சிட்டிக்கு எதிராக சியாஸ் மாடல் கடந்த 2014-ஆம் ஆண்டு களமிறக்கப்பட்டது.

இதுவும் தோல்வியில் முடியலாம் என நினைத்திருந்த நிலையில், மெதுவாக பிரீமியம் கார் செக்மெண்டில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மாருதி சியாஸ், தற்போது விஸ்வரூபம் எடுத்து விற்பனையில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஆமாங்க... இதுவரை 1 லட்சம் கார்களுக்கு மேல் மாருதி சியாஸ் மாடல் விற்பனையாகியுள்ளன. செடான் கிளாஸ் கார் மார்க்கெட்டில் புதிய அத்தியாயம் படைத்ததுடன், விற்பனையில் முதலிடத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது சியாஸ்.

கடந்த மாதத்தில் மொத்தம் 5,188 சியாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா சிட்டி 3,305 கார்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த இரு ஆண்டுகளில் மொத்தம் 18,000 சியாஸ் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் மாருதிக்கு புதிய எனர்ஜியைக் கொடுத்துள்ளது.

ஹோண்டா சிட்டியின் விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிய அவதாரத்தை சியாஸ் எடுத்திருப்பதுதான் ஆட்டோமொபைல் உலகின் இப்போதைய ஹாட் டாபிக்.

English summary
Ciaz Touches 1 Lakh Units; Is This The New Sedan Segment Leader?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark