கார் டயர் வெடிக்காமல் இருக்க புதிய டெக்னாலஜி.... காப்புரிமைக்கு காத்திருக்கிறது டெய்ம்லர் நிறுவனம்

Written By: Krishna

பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி. அந்த அடிப்படையில் பார்த்தால் தொழில்நுட்பங்களின் உதவியால் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

கார்களை எடுத்துக் கொண்டால், உலகின் முதல் காரின் வடிவம் கிட்டத்தட்ட சைக்கிள் ரிக்ஷா மாதிரி இருந்தது. 1807-ஆம் ஆண்டு ஐசக் டி ரிவாஸ் என்பவர் அந்த காரை வடிவமைத்தார்.

கார் தொழில்நுட்பம்

இன்றைக்கு அந்தக் காரைப் பார்த்தால், இதுவா கார்? என்று அனைவரும் சிரிப்பார்கள். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒரு பிரம்மாண்டப் போக்குவரத்துக்கான சொகுசு வாகனம்.

அதன் பிறகுதான் கார்கள் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து இன்று பல மாடல்களில் வடிவமைக்கப்படுகிறது. தற்போதைய பரிணாம வளர்ச்சியால் காரில் ஏறி அமர்ந்தால், அதுவே வாகனத்தை இயக்கும் அளவுக்கு செம டெக்னாலஜிகள் வந்துவிட்டன.

அந்த வரிசையில் புதியதொரு முயற்சியாக செமயாக ஒரு டெக்னாலஜியை உருவாக்கி வருகிறது மெர்சடைஸ் பென்ஸின் தாய் நிறுவனமான டெய்ம்லர் கம்பெனி. அப்படியென்ன விசேஷமான டெக்னாலஜி என்கிறீர்களா?

காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருக்கும்போது, டயர் வெப்பமடைந்து திடீரென வெடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் பல விபத்துகள் நிகழ்கின்றன. பல உயிர்களைக் காவு வாங்குவது டயர்கள்தான். அதன் வெப்பநிலை மாற்றமடைந்து சூடாகும்போது இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.

அதைத் தடுக்கும் வகையில், டயர்களின் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தொழில்நுட்பத்தை டெய்ம்லர் கண்டறிந்துள்ளது.

முகப்பு மற்றும் பின்புறமுள்ள கண்ணாடிகளில் (விண்ட்ஷீல்டு) தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் தானியங்கி தெளிப்பான்கள் (ஸ்பிரே) உள்ளன. அவற்றின் மூலமாக டயர்கள் சூடாகும்போது தண்ணீரைத் தெளித்து குளிர்விக்கும் முறைதான் இது.

சென்சார் கருவிகள் மூலம் டயர்கள் சூடாவதை அறிந்து கொண்டு, தானாகவே ஸ்பிரேயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும்.

ஒருவேளை மிகுந்த குளிர் பிரதேசத்தில் போகும் டயர்கள் மிகக் குறைந்த குளிர் நிலைக்குச் சென்றுவிட்டாலும் ஆபத்துதான். அதுபோன்ற சமயங்களில் வெதுவெதுப்பான நீரை பீய்ச்சியடிக்கும் வகையில் இந்த டெக்னாலஜி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் சூட்டில் அந்த நீரை வெது வெதுப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு முறையும் நீரை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. கார்களைக் கழுவும் போதும், மழையின் போதும், தானாகவே இதற்கான தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளப்படும்.

இந்த டெக்னாலஜிக்கு காப்புரிமை பெறுவதற்காக அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் டெய்ம்லர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. தற்போது அந்த டெக்னாலஜி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பென்ஸ் கார்களில் அந்த சாதனம் பொருத்தப்படும் என்றும் டெய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து கார்களிலும் இதுபோன்றதொரு பாதுகாப்பு சாதனம் பொருத்தப்படுவதுதான், குடும்பத்துடன் பயணம் மேற்கொள்பவருக்கு பெரிய நிம்மதியாக இருக்க முடியும்.

English summary
Daimler Registers Patent For Tyre Temperature Control System.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark