மும்பை விமான நிலையத்தில் ஷோ ரூமைத் திறந்த டிசி கார் நிறுவனம்....

Written By: Krishna

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ் பெற்ற கார் வடிவமைப்பு நிறுவனம் டிசி டிசைன் லிமிடெட். ஸ்போர்ட் கார் வடிவமைப்பில் கைதேர்ந்த நிறுவனமான டிசி லிமிடெட், மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் தனது புதிய ஷோ ரூமை அண்மையில் திறந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளாக இருந்தாலும் சரி, இங்குள்ள கார் பிரியர்களானாலும் சரி.. ஏதாவது ஒரு முறையாவது மும்பை விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால் வர்த்தகத் துறையின் மையமாக விளங்குவது மும்பை சிட்டி.

டிசி டிசைன்ஸ்

அதைக் கருத்தில் கொண்டுதான் அங்கு ஒரு ஷோ ரூமைத் தொடக்கியுள்ள டிசி டிசைன் நிறுவனம். டிசி அவந்தி எனப்படும் முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட் கார் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

இதைத் தவிர டிசி டிசைன் வடிவமைத்த தன்னிகரற்ற கார் மாடல்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்பவர்கள் நிச்சயம் வியப்பில் ஆழ்ந்து விடுவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறது டிசி நிறுவனம்.

இதைத் தவிர அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் விஷேச வடிவமைப்புகள் ஆகியவையும் மும்பை ஷோ ரூமில் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவந்தி மாடலைப் பொருத்தவரை, அது 2.0 லிட்டர் திறன் மற்றும் 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மாடல் ஸ்போர்ட் காராகும். இந்த எஞ்சினானது 248 பிஎச்பி முறுக்கு விசையையும், 340 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

டிசி அவந்தி மாடல் காரில் மொத்தம் 6 கியர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதுவும் மேனுவல் கியர் ஆப்ஷனாக மட்டுமே உள்ளது.

பின்புறம் உள்ள வீல்களின் பவரில் இயங்குவதற்கான வசதிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஸ்போர்ட் ரைடிங் பிரியர்களுக்கு உற்சாகமான பயணத்தை அவந்தி தரும் என டிசி நிறுவனம் உறுதியளிக்கிறது.

மும்பை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷோ ரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டிசி வடிவமைத்த கார்களை விளக்கிக் கூறுவதற்கும், அதன் சிறப்பம்சங்களை எடுத்துரைப்பதற்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில், விமான நிலையத்துக்கு வருபவர்களை வசப்படுத்த வசியம் வைத்துக் காத்திருக்கிறது டிசி நிறுவனம்.. அதன் முயற்சி பலிக்குமா? என்று காத்திருந்து பார்ப்போம்...

English summary
DC Design Inaugurates Mumbai Dealership At T2 Airport Terminal.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark