வாகனங்களில் ஹாரன் அடிப்பதால் ரூ.245 கோடி இழப்பு: அதிர்ச்சி தரும் சர்வே முடிவு

Posted By: Meena

பரபரப்பான காலை நேரம்.... ஆஃபிஸுக்கு போக இன்னும் குறைந்த அவகாசமே உள்ளது.... அடித்துப் பிடித்து வண்டியை (அது காரோ அல்லது பைக்கோ) எடுத்து ரோட்டுக்கு வந்தால், நமக்கு முன்னால் எறும்பு சாரை போல நூற்றுக்கணக்கான வண்டிகள் அணிவகுத்து நிற்கும்....

கடுப்பாகி ஹாரனில் கையை வைக்கப் போனால், அதற்கு முன்னரே, அங்கிருக்கும் பெரும்பாலான வாகனங்களில் இருந்து வெளியாகும் ஹாரன் ஒலி காதைக் கிழித்தெடுக்கும். பேய் பங்களாவுக்குள் ஆயிரம் வௌவால்கள் நம்மைச் சுற்றி ஒ.....வென சத்தமிட்டபடி சுற்றுவதைப் போன்ற பிரம்மை நம்முள் வந்துபோகும் தருணம் அது. ரண வேதனை என்று நொந்தபடி லேட்டாக ஆஃபிஸுக்குப் போய் டோஸ் வாங்கிவிட்டு சீட்டில் அமர்ந்த பிறகும் ஹாரன் ஒலி நம்மை வட்டமடித்துக் கொண்டிருக்கும். நாள் முழுவதும் பயங்கரமான தலை வலிக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன அந்தப் பேரிரைச்சல்கள்...

ஹாரன் அடிப்பதால் இழப்பு

ஆனால், அதில் ஒளிந்திருந்திருக்கும் இன்னொரு அதிர்ச்சியூட்டும் உண்மை என்ன தெரியுமா? வண்டிகளில் நாம் ஹாரன் அடிப்பதால் ஆண்டுக்கு ரூ.245 கோடி செலவாகிறது என ஒரு கணக்கீடு நமக்கு கூறுகிறது.

நீங்கள் ஹாரனில் மட்டும் கை வைக்காமல் இருந்தால் போதும், அந்தத் தொகையைக் கொண்டு நாட்டில் உள்ள 55 லட்சம் ஏழைகளுக்கு ஒரு மாதம் உணவளிக்க முடியும் எனக் கூறுகிறது அந்த சர்வே.

எஸ்.கே.படேல் என்ற வாகனப் பொறியாளர் ஒருவர்தான் இதைக் கணக்கிட்டுக் கூறியிருக்கிறார்.

பைக், கார், லாரி, பஸ் என நம் நாட்டில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75 கோடி. ஒரு முறை ஹாரன் அடித்தால் 0.00003125 வாட் மின்சாரம் செலவாகிறதாம். நிமிடத்துக்கு ஆறு முறை வீதம் 8 மணி நேரத்துக்கு வாகனங்களில் ஒலி எழுப்பப்படுகிறது என வைத்துக் கொண்டால், மொத்தம் 11,20,500 வாட் மின்சாரம் நாளொன்றுக்கு செலவாகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.245 கோடி மதிப்பிலான மின் எரிசக்தி இழப்பாகிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ஹாரன்தானே என நாம் காட்டும் அலட்சியம் எத்தனை கோடி மதிப்புடையது என்பதைப் பாருங்கள். அடுத்த முறை ஹாரனில் நீங்கள் கை வைக்கும் முன்பு அது 55 லட்சம் ஏழைகளின் உணவுக்கான செலவு என்பதை மறக்காதீர்கள்.

English summary
Did You Know: Study Shows Honking Costs Rs. 245 Crore Per Year?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark