புதியதோர் புரட்சியைப் படைக்க வரும் தானியங்கி கார்கள்...!!

Written By: Krishna

ஆதாம், ஏவாளாக ஆரம்பித்த மானுட வாழ்க்கை இன்று பல பரிணாமங்களைத் தாண்டி ஆலியா பட், டாம் க்ரூஸ்களாக மாறி நிற்கிறது. இந்தத் தலைமுறையிலிருந்து சற்றே பின்னோக்கிப் பார்த்தால், அறிவியல் தொழில்நுட்பம் கடந்துவந்த பாதை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும். சிக்கி முக்கி கல்லைக் கொண்டு நெருப்பைக் கண்டறிந்த மனிதன், நிலவுக்குச் சென்று மண் அள்ளி வருகிறான். அந்த அளவுக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி விசாலமடைந்திருக்கிறது.

வாகனப் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், அது கடந்து வந்திருக்கும் வளர்ச்சியும் சர்வ சாதாரணமல்ல. சைக்கிள் டயரைப் போன்ற சக்கரங்களைக் கொண்ட வாகனம்தான் கார் என்ற பெயரில் இந்த உலகுக்கு முதன் முதலில் அறிமுகமானது. அதைத் தொடர்ந்து அதில் பல்வேறு மாற்றங்கள், தொழில்நுட்பங்கள் வந்தன. தற்போது அனைத்துக்கும் உட்சமாக, தானாகவே இயங்கும் ஆட்டோமேடிக் கார்கள் வரப்போகின்றன.

டிரைவர்லெஸ் கார்

தானியங்கி கார்களை வடிவமைக்கும் பணிகளில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஃபோர்டு நிறுவனம் சீனக் கம்பெனியான பாய்டுவுடன் இணைந்து அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. சுமார் 150 மில்லியன் டாலர் செலவில் தானியங்கி கார்களை அந்நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன. ரேடார், லைடார், ஜிபிஎஸ் சிஸ்டம், உயர் பாதுகாப்பு அம்சங்கள் என பல வசதிகளுடன் அவை தயாராகி வருகின்றன.

இதைத் தவிர ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனமும் பக்காவான பாதுகாப்பு டெக்னாலஜியுடன் தானியங்கி காரை வடிவமைத்து வருகிறது. டிரைவரைக் காட்டிலும் அதிக கவனமாக வாகனத்தை இயக்கும் வகையில் அந்த டெக்னாலஜி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சமதளப் பரப்பான சாலைகளில் மட்டுமல்ல, கரடு முரடனா காட்டு வழிப் பாதை, மலைச் சரிவுகளில் கூட தானியங்கி கார் உங்களைப் பத்திரமாக கூட்டிச் செல்லும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறது ஜாகுவார்.

வெறுமனே ஒரு சில அம்சங்களை மட்டும் சேர்த்து அரை குறை தானியங்கி காராக உருவாகாமால், 360 டிகிரி கோணத்திலும் சாலையைக் கண்காணித்து வாகனத்தை இயக்கும் வகையிலான தொழில்நுட்பமாக இது அமைந்துள்ளது.

இதேபோல, ஜப்பானின் டிஎன்ஏ என்ற மொபைல் இன்டர்நெட் நிறுவனம் தானாக இயங்கும் ரோபோ பஸ்ஸைக் கண்டுபிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தானியங்கி மோட்டார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

13 அடி நீளம் கொண்ட அந்த பஸ்ஸில் ஒரே நேரத்தில் 12 பேர் பயணிக்கலாம். 40 கிலோ மீட்டர் வரை அந்த பஸ் தானாகவே இயங்கும் திறன் கொண்டது.

கிட்டத்தட்ட அதன் வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பஸ்ஸை பெரிய பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், பிரம்மாண்ட வளாகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த டிஎன்ஏ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல், விரைவில் அறிமுகமாகவுள்ள அடுத்த தலைமுறை ஆடி ஏ-8 லிமோ மாடல் செடான் காரும் முழுக்க, முழுக்க தானியங்கி வசதியுடன் வரப் போகிறது. இதைத் தவிர கூகுள், ஆப்பிள், உபேர், டெஸ்லா என பல நிறுவனங்கள் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருகின்றன.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அடுத்த சில ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை புதியதொரு உச்சத்தை எட்டும் என்பது தெளிவாகிறது.

English summary
Driverless Car Technology Creating A Wave Of Revolution In Transportation Industry.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark