ஃபோர்டு காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்... வியக்க வைக்கும் தொழில்நுட்பம்...!

Written By: Krishna

உலகின் முதல் காரை கண்டுபிடித்த கார்ல் பென்ஸ், அதற்காக பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்க வேண்டியிருந்ததாம். ஆனால், இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒரே நாளில் பல நூறு கார்களை உருவாக்கும் வகையில் இந்த மாய உலகம் மாறிவிட்டது.

நாள்தோறும் உதயமாகும் புது புதுத் தொழில்நுட்பங்கள் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. அப்படியான ஓர் ஆச்சரியத்தை தற்போது ஃபோர்டு நிறுவனம் அரங்கேற்றியுள்ளது.

ரோபோ

கார் உற்பத்தி செய்ய பல தொழிலாளர்கள், நாள் கணக்கில் உழைக்க வேண்டிய இடத்தில் ரோபோக்களைக் களமிறக்கி வேலையை எளிமையாக்கியிருக்கிறது ஃபோர்டு நிறுவனம். ஜெர்மனியில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில்தான் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணியாளர்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் சமயோஜிதமாக இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்காக எந்திரன் பட கிளைமேக்ஸில் வருகிற மாதிரி பல நூறு ரோபோக்கள் ரஜினி மாதிரி வந்து நிற்கும் என எதிர்பார்க்காதீர்கள். அது கற்பனை காட்சி. நிஜத்தில் அப்படி சாத்தியமல்லை. ஃபோர்டு நிறுவனத்தில் கைகளைப் போன்ற வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் பணிக்கமர்த்தப்பட்டு உள்ளன.

தொழிலாளர்கள் சிரமப்பட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அசால்ட்டாக மூலை முடுக்குகளுக்குச் சென்று மேற்கொண்டு விடுமாம் இந்த ரோபோக்கள். சென்சார் தொழில்நுட்பத்துடன் இவை மேம்படுத்தப்பட்டிருப்பதால், அதன் குறுக்கே ஏதேனும் தொழிலாளர்கள் கைகளைக் குறுக்கிட்டால், உடனடியாக தனது செயல்பாட்டை ரோபோ நிறுத்திவிடும். இதனால், தேவையற்ற விபத்துகள் நேரமால் தவிர்க்க முடியும் என்கிறது ஃபோர்டு நிறுவனம்.

இந்த ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்து அங்கு பணியாற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்ட பிறகே ரோபோக்கள் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

வேலை நேரத்தைத் தவிர, தொழிலாளர்களுடன் கை குலுக்குவது, காபி அருந்தும்போது சீயர்ஸ் சொல்வது, தட்டிக் கொடுப்பது என கம்பெனி பாஸ் ரேஞ்சுக்கு எல்லா செயல்களையும் இந்த ரோபோக்கள் செய்யுமாம்.

கைபடாமல் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி அல்வாவைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது ஃபோர்டு கார்களுக்கும் அதுபோன்றே தயாராகி வருவது ஆச்சரியமளிக்கிறது. தெறி காட்டிக் கொண்டிருக்கும் ஃபோர்டு ரோபோக்கள், இந்தியாவுக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சியடையலாம்.

English summary
Ford Tests Robots In German Car Plant.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark