விட்டாரா பிரேஸாவை விற்பனையில் பின்னுக்குத் தள்ளிய கிரீட்டா

Written By: Krishna

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் நிறுவனமாக விளங்குவது ஹுண்டாய்தான். வெர்னா, ஐ-10, ஐ-20 என பல மாடல்கள் ஹுண்டாய் தயாரிப்பில் வெளியாகி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன.

என்னதான் இருந்தாலும், மாருதி நிறுவனம்தானே கார் மார்க்கெட்டில் கிங். அதை முறியடிக்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால், மாருதியைக் காட்டிலும் கூடுதலாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ஹுண்டாய் நிறுவனம்.

க்ரெட்டா

காம்பேக்ட் எஸ்யூவி மாடலான கிரீட்டாதான் விற்பனையில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதே செக்மெண்டில் யூவி மாடலான மாருதி விட்டாரா பிரேஸாவின் விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது கிரீட்டா.

கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 13,429 ஹுண்டாய் கிரீட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. அதேவேளையில், மாருதியின் விட்டாரா பிரேஸா 10,000 கார்கள் மட்டுமே விற்பனையாகின.

கிட்டத்தட்ட 3500 கார்கள் கூடுதலாக விற்பனை செய்துள்ளது ஹுண்டாய் நிறுவனம். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஹுண்டாய் கிரீட்டாவின் விற்பனை எவ்வளவு தெரியுமா? வெறும் 6,783 மட்டும்தான். இந்த நிலையில் ஒரே ஆண்டில் விற்பனையை இரு மடங்காக்கி புதிய உச்சத்தை எட்டியுள்ளது அந்த மாடல்.

இதுவரை 80,000 கிரீட்டா கார்கள் விற்பனையாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது ஹுண்டாய் நிறுவனம்.

கிரீட்டாவில் மொத்தம் 3 எஞ்சின் மாடல்கள் உள்ளன. 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்கள் உள்ளன. இதைத்தவிர புதிதாக ஆட்டோமேடிக் கியருடன் 1.6 லி்ட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு கிரீட்டா பிளஸ் என்ற புதிய மாடல் ஒன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, 126 பிஎச்பி மற்றும் 256 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

கிரீட்டா ப்ளஸ் மாடலில் மொத்தம் 6 கியர்கள் ஆட்டோ மேடிக் கியர் ஆப்ஷனுடன் உள்ளன. லெதர் சீட், வாய்ஸ் கன்ட்ரோல் நேவிகேஷன், ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம் (ஏபிஎஸ்), தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் பேக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் ஹுண்டாய் கிரீட்டா எஸ் பிளஸ் மாடலில் உள்ளன.

விலை ரூ.9.16 லட்சத்திலிருந்து ரூ.14.50 லட்சம் வரையாக உள்ளது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

ஹுண்டாய் நிறுவனம் தொடர்ந்து இந்த சாதனை விற்பனையைத் தக்கவைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Hyundai Creta Muscles Out Maruti Vittara Brezza in July.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark