இந்தியாவில் கால் பதிக்கக் காத்திருக்கும் கியா கார் நிறுவனம்...!!

Written By: Krishna

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல ஆட்டோ மொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ், தனது புதிய உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க ஆயத்தமாகி வருவதாக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா கம்பெனியின் தாய் நிறுவனமான ஹுண்டாய், இந்தியாவில் கணிசமான மார்க்கெட்டைப் பிடித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் கிரீட்டா உள்ளிட்ட மாடல்கள் செக்மெண்ட் லீடராகவும் உள்ளன.

கியா மோட்டார்ஸ்

மொத்த விற்பனைப் பங்கில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கியா நிறுவனம் இந்தியாவுக்குள் தடம் பதிக்க ஹுண்டாய் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

உற்பத்தித் தொழிற்சாலைக்கான சரியான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. எந்த இடத்தில் தொழிற்சாலை தொடங்கப் போகிறோம் என்பதை கியா நிறுவனம் அடுத்த மாதம் பகிரங்கமாக அறிவிக்கும் என யூகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அவ்வாறு இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டால், எதிர் வரும் 2019-ஆம் ஆண்டு முதல் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் செயல்படத் தொடங்க வாய்ப்புள்ளது.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை இங்கு உற்பத்தி செய்ய கேஐஏ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இந்தியாவை கியா கார்களுக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதைத் தவிர, இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவன கார்களுக்கான டிமாண்டை உருவாக்குவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த மாடல் கார்களை இந்தியாவில் தயாரிக்கப் போகிறோம் என்பதை அந்நிறுவனம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

அதேவேளையில், இந்திய சாலைகள் மற்றும் மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் சில மாடல்களை உற்பத்தி செய்து இங்கு களமிறக்கக் காத்திருக்கிறது கியா நிறுவனம். ஹுண்டாய் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மொத்தம் 10 லட்சம் ஐ-10 ஹேட்ச்பேக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை, அந்நிறுவனம் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் சற்றே குறைவான அளவுதான். அந்த விற்பனை இலக்கை விரைவில் எட்டிப் பிடிக்கும் ஹுண்டாய் நிறுவனம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேவேளையில், தனது கிளை நிறுவனமான கியா ஆட்டோமொபைல் லிமிடெட் கம்பெனியையும், இந்திய மார்க்கெட்டுக்குள் களமிறக்கி விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது ஹுண்டாய்.

மொத்தத்தில் மார்க்கெட் லீடராக உருவெடுக்க வேண்டும் என்பதில் திடமாகச் செயல்பட்டு வருகிறது அந்நிறுவனம்... பொறுத்திருந்து பார்ப்போம், ஹுண்டாயின் கனவு பலிக்குமா என்று...

English summary
KIA Motors On The Lookout For Setting Up New Facility In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark