பதற்ற பூமியை பந்தயக் களமாக்கிய மாருதி... ஜம்முவில் களை கட்டிய முகல் ரேலி....

Written By: Krishna

இந்தியர்களின் மனங்களில் நம்பிக்கைக்குரிய கார் நிறுவனமாக திகழ்வது மாருதிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருபுறம் விற்பனை, புதிய மாடல்கள் அறிமுகம், சமூகப் பங்களிப்பு எனப் பல்வேறு ஏரியாக்களில் அந்நிறுவனம் பட்டையைக் கிளப்புகிறது. அதேநேரத்தில் மோட்டார் ஸ்போர்ட்களை நிகழ்த்துவதிலும் மாருதிக்கு நிகர் மாருதிதான். அதன் எஃப்எம்எஸ்சிஐ தேசிய லீக் கார் ரேலி மிகவும் பிரசித்தம். டிடிஎஸ் எனப்படும் டைம், டிஸ்டன்ஸ் மற்றும் ஸ்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படும் கார் பந்தயம் அது.

அதாவது, குறிப்பிட்ட தூரமுடைய இலக்கை, குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைவதுதான் இந்த ரேலியின் ஹைலைட். ஆண்டுதோறும் இந்த பந்தயத்தை நடத்தி பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது மாருதி.

கார் பந்தயம்

உத்தரகண்ட், புணே மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் முதல் மூன்று சீசன் பந்தயங்கள் நடைபெற்றன. அதன் நாலாவது சீசன் கடந்த 19-ஆம் தேதியன்று ஜம்முவில் தொடங்கியது.

பல சுற்றுகளாக நடந்து வந்த இந்த ரேலி இன்றுடன் (ஆக.22) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் விஷேசம் என்னவென்றால், இந்த முறை பந்தயத்தில் பங்கேற்ற கார்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அனைவரும் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும், கூடுதல் அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் இல்லை. இதன் காரணமாக, கடந்த மூன்று சீசன்களைக் காட்டிலும் இந்த முறை அதிகப் போட்டியாளர்கள் பங்கேற்றதாக பந்தய ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஜம்முவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே இந்த ரேலி நடைபெற்றது. மொத்தம் 15 அணிகள், 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் என பந்தயக் களமே களை கட்டியது. பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்குப் பிறகு காஷ்மீர் மாநிலம் முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவுகளும் பல இடங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்த அசாதாரண சூழலிலும் ரேலியை வெற்றிகரமாக நடத்தியிருப்பதற்கு மாருதி நிறுவனத்தை வாழ்த்தியே ஆக வேண்டும். பந்தயத்தின் முடிவுகள், அடுத்தகட்ட போட்டி ஆகியவற்றைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்...

English summary
Maruti Suzuki Mughal Rally, Kicks Off From Jammu.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark