ஜூலையில் 10,000 விட்டாரா பிரேஸா கார்கள் விற்பனை... மாருதிடா...!!

Written By: Krishna

இந்திய ஆட்டோ மொபைல் மார்க்கெட்டின் சூப்பர் ஸ்டார் மாருதி நிறுவனம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். விற்பனையில் மற்ற எந்த நிறுவனமும் கிட்ட நெருங்க இயலாத வகையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கின்றன மாருதி நிறுவன கார்கள்.

புதிதாக எந்த மாடலை அந்நிறுவனம் களமிறக்கினாலும் சரி... மக்கள் கவனம் மாருதி பக்கம் திரும்பி விடுகிறது. அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராய் போல இன்னும் இளமையாகவும், புதுமையாகவும் அந்நிறுவன கார்கள் இருப்பதுதான்.

மாருதி பிரெஸ்ஸா

கடந்த மார்ச் மாதத்தில் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான விட்டாரா பிரேஸா காரை அறிமுகப்படுத்தியது மாருதி. சும்மா சொல்லக் கூடாது... இந்த மாடலும் வந்தவுடனேயே செம பிக் - அப் ஆனது. கடந்த மாதத்தில் மட்டும் 10,000 பிரேஸா கார்கள் விற்பனையாகியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...

அறிமுகமான 5 மாதங்களுக்குள் 1 லட்சம் புக்கிங்குகள் விட்டாரா பிரேஸாவுக்கு வந்துள்ளது. இதையடுத்து உற்பத்தியை அதிகரிக்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் இக்னிஸ் மாடலைக் கூட மார்க்கெட்டில் தற்போது அறிமுகப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது மாருதி. தற்போது விட்டாரா பிரேஸாவை புக் செய்தால் குறைந்தது 6-இலிருந்து 8 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாம். அந்த அளவுக்கு பிரேஸாவுக்கு டிமாண்ட் உருவாகியுள்ளது. அப்படி என்னதான் அந்த மாடலில் உள்ளது என்பதை அறிய இதோ உங்களுக்காக ஒரு சிறிய அறிமுகம்....

விடாரா பிரேஸா மாடலில் உள்ள சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், அதன் தோற்றம்தான் முதலில் கண் முன்னே வந்து நிற்கிறது. காம்பேக்ட் காராக அல்லாமல் பார்க்க பிரம்மாண்டமான எஸ்யூவி மாடலைப் போன்றதொரு லுக்கைத் தருகிறது.

அடுத்தது விலை. இந்த செக்மெண்ட் கார்களில் சற்று குறைந்த விலை காராக மாருதி விடாரா பிரேஸா உள்ளது (ரூ.6.99 லட்சத்திலிருந்து ஆரம்பம்). உள்புறத்தில் இரண்டு டோன் கலர்களில் இன்டீரியர் செய்திருப்பது, விலாசமான இருக்கை வசதி, குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான இட வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாடலின் ஹைலைட்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாமாக இயங்கும் முகப்பு விளக்குகள், சாவி இன்றி வாகனம் இயக்கும் வசதி, ஆட்டோமேடிக் வின்ட்ஷீல்டு வைப்பர் (முகப்புக் கண்ணாடி துடைப்பான்), தானியங்கி வெப்பநிலை மாற்ற வசதி உள்ளிட்டவை விடாரா பிரேஸாவின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் சிறப்பு அம்சங்கள்.

1.3 லிட்டர் டிடிஐஎஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 89 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட எஞ்சின் அது. மைலேஜைப் பொருத்தவரை லிட்டருக்கு 24.3 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என்றும் மாருதி நிறுவனம் உறுதி அளிக்கிறது.

மொத்தத்தில் குடும்பத்துடன் பயணிக்க வல்ல சிறப்பான காராக பிரேஸா இருக்கிறது என்பது அதற்கு கிடைத்து வரும் வரவேற்பில் இருந்தே தெரிகிறது.

English summary
Maruti Vitara Brezza 10,000 Units Sold In July 2016 Pan India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark