நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மாருதி பலேனோ கார்...!!

Written By: Krishna

என்னதான் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டாலும், சில சமயங்களில் நம்மையும் மீறி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம்தான் கேரள மாநிலம் கொச்சியில் அண்மையில் நடந்தது.

வாங்கி இரண்டு மாதங்களே ஆன மாருதி பலேனாேவில், நவ்சத் என்ற தொழிலதிபரும், அவரது மகனும் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர், தனது மகனை பள்ளியில் விடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

மாருதி பலேனோ கார்

அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் சுதாரித்து இறங்கியதால் காயங்கள் ஏதும் இன்றி உயிர்தப்பினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

காலை 8 மணி.... வேலைக்குச் செல்வோர் பரபரப்பாக சாலையில் பயணித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்தத் தருணத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் தீப்பிடித்ததை முதலில் பார்த்தது அதன் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர்தான். முன்பக்கத்தில் இருந்து புகை வருவதைப் பார்த்த அவர், உடனடியாக நவ்சத்திடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்தார். சுதாரித்துக் கொண்ட அந்த தொழிலதிபர், காரை நிறுத்திவிட்டு தனது மகனுடன் கீழே இறங்கிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் மளமளவென காரில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

மாருதி பலேனோ காரில் தீ

உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விரைவாக அந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனம் வந்து சேர இயலவில்லை. சுமார் 8.30 மணியளிவில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.

அதன் பிறகு அந்த மாருதி பலேனோ கார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப்பிடிக்கத் தொடங்கிய போது காரில் ஏசி ஆன் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள், நமது உள்ளுணர்வில் எச்சரிக்கை மணி கட்டுகின்றன. பாதுகாப்பான பயணத்துக்காக நாமும் கூடுதல் கவனமாக இருப்போம்...

English summary
Talgo Train completes Delhi-Mumbai train journey in Just 12 hours.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark