உலகின் முழுமையான முதல் தானியங்கி கார் மாடலாக வரும் புதிய ஆடி ஏ8 கார்!

Written By: Krishna

பெங்களூரின் எலெக்ட்ரானிக் சிட்டி, கே.ஆர்.புரம், மடிவாலா உள்ளிட்ட பகுதிகளிலும் சரி... சென்னையில் தி.நகர், நுங்கம்பாக்கம் (ஜெமினி பாலம்), போரூர் சிக்னல் உள்ளிட்ட இடங்களிலும் சரி... காரை எடுத்துக் கொண்டு சென்றால் கூடவே சுற்றுலாக்கு கிளம்புவதைப் போல சாப்பாட்டையும் கட்டிக் கொண்டுதான் போக வேண்டும்.

அங்குள்ள போக்குவரத்து நெரிசல், நமது கழுத்தையும் சேர்த்தே நெரிக்கும். அந்தப் பகுதிகளைக் கடந்து செல்வதற்குள் நமக்கு ப்ளட் பிரஷர் எகிறி விடும் என்பது உறுதி. அதுபோன்ற டிராஃபிக்கான இடங்களில் நமது கார் தானாகவே இயங்கி, அப்பகுதியை விட்டு பாதுகாப்பாக கடந்து சென்றால் எப்படி இருக்கும்? வெறும் கற்பனை என நினைக்காதீர்கள்.

ஆடி கார்

விரைவில் அறிமுகமாகவுள்ள அடுத்த தலைமுறை ஆடி ஏ-8 லிமோ மாடல் செடான் காரில் இந்த வசதிகள் உள்ளன. முழுக்க, முழுக்க தானியங்கி வசதியுடன் அறிமுகமாகும் முதல் கார் என்று பெருமை இதற்கு உள்ளது.

மூன்றாம் நிலை தானியங்கி வசதியாக, அதாவது லெவல் 3 ஆட்டோமேடிக் சிஸ்டமாக ஆடி ஏ-8 மாடல் வரவுள்ளது. அடுத்த ஆண்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தானியங்கி வசதியை இயக்கிவிட்டு சாலையை கவனிக்காமல் தூங்கக் கூடச் செய்யலாமாம்... அந்த அளவுக்கு இந்த கார் சமயோஜிதமாகச் செயல்படும் ஆற்றல் கொண்டது என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதி நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆடி ஏ-8 காரானது, நெரிசல் மிக்க சாலைகளில் கூட லாவகமாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.

ஓட்டுநரின் கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் இந்த மாடல் கார் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாம் அலுவலகத்துக்கோ அல்லது வேறு பகுதிகளுக்கோ செல்லும்போது, அந்த வழியைக் கண்காணித்து நேவிகேஷன் சிஸ்டத்தில் தானாகவே சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியும் ஆடி ஏ-8 மாடலில் உள்ளது.

இதன் மூலம் நமது உதவியின்றி, தானாகவே அந்த இடத்துக்கு நம்மை பத்திரமாக ஆடி ஏ-8 கார் கொண்டுபோய் சேர்த்துவிடும். ஐ போன் செயலி (அப்ளிகேஷன்) வழியாக ரிமோட் மூலம் இந்தக் காரை பார்க்கிங் செய்யவும் முடியுமாம்.

இத்தனை அம்சங்களுடன் தானாக இயங்கும் கார் சாலையில் வந்தால் அதைப் பார்த்து பிரம்மிக்காத கண்கள் இருக்காது.

English summary
The next generation of German carmaker Audi's flagship A8 sedan is due to hit the streets in 2017.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark