திரிபுராவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300!!

Written By: Krishna

இயற்கைக்கு முன்னால் நாம் எதுவுமே இல்லை என்பது அடிக்கடி நாம் உணரும் உண்மை. சென்னை வெள்ளத்தாலும், சுனாமியாலும் தமிழகம் முழுவதும் இயற்கைப் பேரிடரின் கோரத் தாண்டவம் மோசமாக உணரப்பட்டது. குடிக்க நீரும், உணவும் இன்றி மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வாரிக் கொடுத்த இயற்கை அன்னைதான், தன் மக்களையே வாரிச் சுருட்டிக் கொண்டு போகிறாள். இது உலகம் முழுவதிலும் நாம் கண்கூடாகப் பார்க்கக் கூடிய முரண். இப்படி ஒரு நிலைதான் தற்போது திரிபுரா மாநிலத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை

நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான திரிபுராவில் அண்மைக் காலமாக பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் திரிபுரா மாநிலத்துக்குள் கொண்டு வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இயற்கையின் பேரிடரால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. இந்த நிலையில், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.300-க்கும், டீசல் லிட்டர் ரூ.150-க்கும் அங்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாமானிய மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விலையில் அத்தியவாசியப் பொருள்கள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி ஒரு அவலத்துக்கு அந்த மாநில மக்கள் ஆளாகியுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை பதுக்கி வைக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

கைக்கு எட்டாத விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதால், பெட்ரோல் மற்றும் டீசலை மக்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் வழங்குவதற்கான நிலைக்கு அந்த மாநிலம் தள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு ஒற்றைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டும் நகரில் செல்ல வேண்டும் என்றும் மறு நாள் இரட்டைப் படை வாகனங்கள் செல்ல வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி காய்கறி, பருப்பு வகைகள், பால், குடிநீர், ரொட்டி உள்ளிட்டவற்றுக்கும் திரிபுராவில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின்றன.

இதனிடையே, அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யத் தவறிய மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

திரிபுரா மாநில மக்கள், இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு வர வேண்டும் எனப் பிரார்த்திப்போம். நம்மால் இயன்ற உதவிகளையும் செய்வோம்...

English summary
Petrol Rates Skyrocket In Tripura; A Litre Sells For Rs. 300.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark