கார் உற்பத்தியில் மஹிந்திராவைப் பின்னுக்குத் தள்ளும் ரெனோ - நிஸான் கூட்டணி... !!

Written By: Krishna

ரெனோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி விற்பனையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் மாடல் க்விட். வித்தியாசமான வடிவமைப்பு, சிறப்பம்சங்களுடன் கூடிய ஆரம்ப நிலை கார் என்பதால் அதற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு. நிஸான் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவியிருக்கிறது ரெனோ நிறுவனம்.

இந்தத் தொழிற்சாலையில் ரெனோ, டட்ஸன், நிஸான் ஆகிய மூன்று நிறுவனங்களின் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விஷயம் என்னவென்றால், சமீபகாலமாக அந்த நிறுவனத்தின் மாடல்கள் எல்லாம் ஹிட்டடித்ததால், உற்பத்தி அளவு எகிறிப் போயிருக்கிறது.

ரெனோ க்விட் கார்

இதில் திக்குமுக்காடியுள்ளன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கார் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தை விரைவில் பின்னுக்குத் தள்ளப்போகிறதாம் ரெனோ-நிஸான் கூட்டணி.

தளபதி பட ரஜினி - மம்முட்டி மாதிரி தோளோடு தோள் நின்று அனைத்து எதிரிகளையும் முட்டித் தள்ளிக் கொண்டிருக்கின்றன இந்தக் கூட்டணி.

அறிமுகமான சில மாதங்களிலேயே ரெனோ க்விட்டின் விற்பனை பருப்பு விலை மாதிரி சர்ரென உயர்ந்ததுதான அதற்கு முக்கியக் காரணம். ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் அடுத்த நிதியாண்டுக்குள் உற்பத்தி அளவை 70 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது ரெனோ-நிஸான் கூட்டணி.

ரெனோ நிறுவன கார்களுக்கு இதுவரை 1.5 லட்சம் புக்கிங்குகள் வந்துள்ளதாம். இதனால் இந்த நிதியாண்டில் அதன் விற்பனை விகிதத்தை மூன்று மடங்கு உயர்த்தவும் வியூகம் வகுத்துள்ளதாம் அந்நிறுவனம்.

அதேபோல் ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகமான டட்சன் ரெடி கோ மாடலையும் வாடிக்கையாளர்கள் இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். சில வாரங்களுக்குள் அந்த மாடலுக்கு 10,000 புக்கிங்குகள் வந்திருப்பதே அதற்கு சாட்சி. அதன் விற்பனை எண்ணிக்கை விரைவில் 65 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை விகிதம் அதிகரித்திருப்பது, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மார்க்கெட்டில் நிஸான் - ரெனோ நிறுவனக் கார்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவைத் தொடர்ந்து குறைந்த விலையில் மேலும் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

எது எப்படியோ, நிறுவனங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான தொழில் போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு பலன்கள் கிடைத்தால் நல்லதுதான்.

English summary
Renault-Nissan Alliance To Dislodge Mahindra As Third Largest Carmaker.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark