ரெனால்ட் லாட்ஜி ரூ.1 லட்சம் வரை விலை குறைப்பு.... அதிரடி ஆஃபர் அறிவிப்பு....!!

By: Meena

எம்யூவி மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட மாடல் ரெனால்ட் லாட்ஜி. அந்த செக்மெண்டில் செம பிக்-அப் ஆன டொயேட்டா இன்னோவாவுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு லாட்ஜி இருக்கும் என நம்பப்பட்டது.

மேலும், இன்னோவாவின் விற்பனையை முறியடிக்கும் நோக்கத்தில் லாட்ஜிக்கு அதிக விளம்பரம் செய்தது ரெனால்ட் நிறுவனம். ஆனால், அதற்கு எந்த பலனும் ஏற்படாமல் ரெனால்ட் நிறுவனம் கையை சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்.

ரெனோ லாட்ஜி

எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை. மேலும், இன்னோவாவின் விற்பனைக்குப் பக்கத்தில் கூட லாட்ஜியால் நெருங்க முடியவில்லை. என்ன செய்யலாம் என ரூம் போட்டு யோசித்த ரெனால்ட் நிறுவனம், திடீரென அதிரடி விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அண்மையில் லாட்ஜி மாடலில் 730 கார்கள் விற்பனையானதும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும்தான் அந்நிறுவனத்தை இந்த முடிவுக்கு வரவைத்துள்ளது. எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? என்பதை அறிவதற்கு முன்னால் லாட்ஜி மாடலைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைப் பார்த்துவிடலாம்....

முதலில் அவுட்டர் லுக்கை எடுத்துக்கொண்டால், வேனைப் போன்ற டிசைனில் அந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்க்க பெரியதாகவும், பாக்ஸ் வடிவிலும் லாட்ஜியின் வெளிப்புறக் கட்டமைப்பு இருக்கிறது.

இந்த மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள் இரு வகையாக உள்ளன. ஒன்று 108 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கையும், மற்றொன்று 84 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. இரண்டிலும் 6 கியர்கள் உள்ளன.

2 ஏர் பேக்-கள், ஆடியோ சிஸ்டம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

விலையை எடுத்துக் கொண்டால், ரூ. 7.5 லட்சம் முதல் ரூ.12.6 லட்சம் வரை மாடல் மற்றும் வசதிக்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போது எவ்வளவு விலை குறைக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம்.

லாட்ஜி - 84 பிஎச்பி எஞ்சின் மாடல், ஸ்டேண்டர்டு - ரூ.7.59 லட்சம் (ரூ.96,000 விலை குறைப்பு)

லாட்ஜி - 84 பிஎச்பி எஞ்சின் மாடல், ஆர்எக்ஸ்இ - ரூ.8.57 லட்சம் (ரூ.80,000 விலை குறைப்பு)

லாட்ஜி - 84 பிஎச்பி எஞ்சின் மாடல், ஆர்எக்ஸ்எல் - ரூ.9.44 லட்சம் (ரூ.55,000 விலை குறைப்பு)

லாட்ஜி - 84 பிஎச்பி எஞ்சின் மாடல், ஆர்எக்ஸ்இஸட் - ரூ.10.99 லட்சம் (ரூ.34,000 விலை குறைப்பு)

மேற்கூறிய அனைத்துமே தில்லி எக்ஸ் ஷோ ரூமின் விலையாகும். மொத்தத்தில் விற்பனையை அதிகரிக்க ரூ.1 லட்சம் வரை விலையைக் குறைக்க ரெனால்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்த முயற்சியும் பலிக்கவில்லை என்றால், அதிரடி ஆடி தள்ளுபடி விற்பனையில் லாட்ஜியும் வரும் என எதிர்பார்க்கலாம்...

English summary
Renault Reduces The Price Of Its Lodgy By Almost Rs. One Lakh.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark