புதிதாக 50 ஷோ ரூம்களைத் தொடங்குகிறது ரெனால்ட்....!!

By Meena

இந்தியாவில் கால் பதித்து 5 ஆண்டுகள் மட்டுமே ஆன கார் நிறுவனம் ரெனால்ட். இருந்தபோதிலும், காலங்காலமாக கொடி நாட்டிய நிறுவனங்களையெல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டு முன்னுக்கு வந்துள்ளது இந்நிறுவனம். அதன் பல மாடல்கள் மார்க்கெட்டில் ஹிட். காம்பேக்ட் எஸ்யூவியில் டஸ்டர் கார் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது என்றால், அண்மையில் அறிமுகமான க்விட் மாடலோ, விற்பனையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஆல்ட்டோவை பின்னுக்குத் தள்ளிவிட்டு படுவேகமாக பந்தயத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது க்விட் மாடல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அறிமுகமான புதிதில் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காத அந்தக் கார், அதன் பிறகு படிப்படியாக அசுர வளர்ச்சி எடுத்தது. பதுங்கிக் காத்திருந்த சிறுத்தை சீறிப் பாயும்போது என்ன ஒரு வேகம் வெளிப்படுமோ, அப்படி ஒரு வேகம் க்விட் மாடலின் விற்பனையிலும்.

ரெனோ கார் நிறுவனம்

கடந்த 7 மாதங்களில் மட்டும் 74,000 கார்களை விற்பனை செய்து விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த மாடல். அந்த அளவுக்கு ரெனால்ட் தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.

இப்படியாக அந்நிறுவனத்தின் காட்டில் ஆலங்கட்டி மழை பெய்து கொண்டிருக்க, தனது விற்பனையை மேலும் அதிகரிக்க புதிய வியூகம் வகுத்துள்ளது ரெனால்ட். அதாவது நாடு முழுவதும் தற்போது 220 ஷோ ரூம்களைக் கொண்டுள்ள அந்நிறுவனம், அதை இந்த ஆண்டு இறுதிக்குள் 270-ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ரெனால்ட் கார்கள் சென்றடையும் என நம்புகிறது அந்நிறுவனம். அதற்கு ஏதுவாக, சிறிய நகரங்களில் புதிய ஷோ ரூம்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்கான பிரத்யேக சர்வீஸ் சென்டர்களையும் புதிதாகத் தொடங்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் தங்களது நிறுவன கார்களின் விற்பனை கணிசமாக உயரும் என ரெனால்ட் நிர்வாகிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறு நகரங்களில் ஷோ ரூம்களைத் திறப்பதன் மூலமாக நிச்சயம் க்விட் மாடலின் விற்பனை மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில், செடான், எம்யூவி செக்மெண்ட்களில் லாட்ஜி, ஸ்கேலா, பல்ஸ் உள்ளிட்ட கார்களின் விற்பனை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க இயலாது.

புதிதாக 50 ஷோ ரூம்களை இன்னும் 4 மாதங்களுக்குள் தொடங்குவது என்பது வரவேற்கத்தக்க முயற்சிதான் என்றாலும், க்விட்டையும் டஸ்டரையும் தாண்டி மற்ற கார்களின் விற்பனையை அதிகரிப்பது ரெனால்ட் நிறுவனத்துக்கு சவாலான விஷயமாகவே இருக்கும்.

Most Read Articles
English summary
Renault Will Have 270 Dealerships Pan India Within 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X