எஸ்யூவி ரகத்தில் 3 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஸ்கோடா...!!

Written By: Krishna

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது செக் குடியரசு. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வர்த்தகம் ஆகியவை வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் அளவுக்கு உள்ளன.

செக் குடியரசைச் சேர்ந்த ஸ்கோடா கார் நிறுவனமும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் அதிமுக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்தது ஸ்கோடா நிறுவனம். வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை இரு மடங்காக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்கோடா தெரிவித்தது.

ஸ்கோடா ஆட்டோ

அந்த இலக்கைப் பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய முயற்சிகளை அரங்கேற்றி வருகிறது அந்நிறுவனம். அதன் ஒரு பகுதியாக ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வெய்க்கிள் எனப்படும் எஸ்யூவி ரகத்தில் 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஸ்கோடா நிறுவனம்.

ஏற்கெனவே உள்ள யெட்டி எஸ்யூவி மாடலை மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கான காராக அறிமுகப்படுத்தப் போகிறது. மேலும், தனது தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனுடன் இணைந்து காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றையும் களமிறக்கவுள்ளது ஸ்கோடா நிறுவனம்.

இதைத் தவிர, 7 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட எஸ்யூவி மாடலான கொடியாக் காரையும் மார்க்கெட்டில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ஸ்கோடாவும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யேட்டி மாடலைப் பொருத்தவரை, அதன் வடிவமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மற்றொரு தயாரிப்பான ஸீட் ஏடிகாவை ஒத்த வடிமைப்பிலும் புதிய யேட்டி இருக்க வாய்ப்புள்ளது.

கொடியாக் மாடலைப் பொருத்தவரை இந்த ஆண்டு அக்டோபரில் பாரீஸ் மோட்டார் ஷோவில் அது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியாவில் அந்த மாடலின் விலை ரூ.23 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சன் என இருவேறு மாடல்களில் கொடியாக் கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 6 மேனுவல் கியர்கள் அல்லது 7 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் அதில் உள்ளன.

ஸ்கோடாவின் எஸ்யூவி கார்கள் இந்திய சாலைகளில் இறக்கை கட்டிப் பறக்கக் காத்திருக்கின்றன. நாமும் காத்திருக்கலாம் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய....

English summary
Skoda Planning 3 New SUVs for India.
Please Wait while comments are loading...

Latest Photos