டெல்லியில், டீசல் கார்கள் மீதான தடை நீக்கம்: கார் நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு

Written By:

டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பகுதியில் 2,000சிசி.,க்கும் அதிக திறன் கொண்ட டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. இதற்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 16ந் தேதி 2,000சிசி.,க்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் கார்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. இதனால், கார் நிறுவனங்களின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

டீசல் தடை
  

மெர்சிடிஸ் பென்ஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் டொயோட்டா உள்ளிட்ட கார் நிறுவனங்களின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தடையை விலக்கக் கோரி கார் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், தடை காலத்தையும் நீடித்தது.

இந்தநிலையில், டீசல் கார்கள் மீது பசுமை வரி செலுத்த தயாராக இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்த பசுமை வரி யோசனையை ஏற்று, டீசல் கார்கள் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், 2,000சிசி திறனுக்கும் அதிகமான டீசல் கார்களின் எக்ஸ்ஷோரூம் விலை மீது ஒரு சதவீதம் பசுமை வரி விதிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரத்யேக வங்கிக் கணக்கை துவங்கி, அதன் மூலமாக பசுமை வரியை வசூலிக்குமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.

வங்கியில் பசுமை வரி செலுத்தியதற்கான ரசீது இருந்தால், ஆர்டிஓ அலுவலங்களில் 2,000சிசி திறனுக்கும் அதிகமான புதிய டீசல் கார்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. சிறிய ரக டீசல் கார்களுக்கும் இந்த பசுமை வரியை விதிப்பது குறித்து பின்னர் முடிவு செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பசுமை வரி மூலமாக கிடைக்கும் தொகையை, மாசுக் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தடை நீக்க உத்தரவு கார் நிறுவனங்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், தடை உத்தரவால் பல்லாயிரம் கோடி இழப்பை கார் நிறுவனங்கள் சந்தித்தன.

அத்துடன், வாகன உற்பத்தி துறை வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதுடன், புதிய முதலீடுகளை செய்ய கார் நிறுவனங்கள் தயக்கம் காட்டியதால், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த தடை உத்தரவு கார் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதுடன், புதிய முதலீடுகளை செய்யவும் வழிவகுத்துள்ளது.

தவிரவும், நாடு முழுவதும் டீசல் கார்களை வைத்திருந்த வாடிக்கையாளர் மத்தியில் ஒருவித அச்ச உணர்வும் இருந்தது. அதுவும் நீங்கியிருப்பதுடன், டீசல் கார்களின் மதிப்பும் தக்கவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Supreme Court allows registration of diesel vehicles of over 2000 cc in Delhi-NCR.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark