டெஸ்லா மாடல் 3 கார்: இந்தியாவில் விலை எவ்வளவு, டெலிவிரி எப்போது?

Written By:

கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு கூடுதலாக முன்பதிவு எண்ணிக்கை இருப்பதால், அந்த நிறுவனம் திக்கமுக்காடி நிற்கிறது.

உலக அளவில் முன்பதிவு பெறப்படுவதால், இந்தியாவிலிருந்தும் பலர் ஆன்லைன் மூலமாக இந்த காரை புக்கிங் செய்துள்ளனர். இந்தநிலையில், இந்தியாவில் இந்த கார் என்ன விலைக்கு வரும், எப்போது டெலிவிரி கிடைக்கும் போன்ற விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை குறைவு

விலை குறைவு

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும் வெற்றியை பெற்ற டெஸ்லா மாடல் எஸ் காரைவிட தற்போது அறிமுகமாகியிருக்கும் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் விலை பாதிக்கு பாதி குறைவு. இதுதான் அமோக வரவேற்புக்கு காரணம்.

பயண தூரம்

பயண தூரம்

நம் நாட்டில் எலக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வம் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், குறைவான தூரம் பயணிக்கும் என்பதே. அதிக முதலீடு செய்து வாங்கினால் கூட நீண்ட தூர பயணங்களுக்கு ஒத்துவராது. ஆனால், டெஸ்லா மாடல் 3 காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 402 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

செயல்திறனிலும்...

செயல்திறனிலும்...

எலக்ட்ரிக் கார்கள் என்றாலே, செயல்திறன் குறைவு என்ற கொள்கையையும் டெஸ்லா கார்கள் உடைத்து வருகின்றன. அந்த வகையில், டெஸ்லா மாடல் 3 கார் 0 - 96 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டது. பல ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார்களே இந்த காரிடம் பொறாமை கொள்ள வேண்டும்.

சார்ஜ் நிலையங்கள்

சார்ஜ் நிலையங்கள்

இந்தியாவில் தனது காரை அறிமுகம் செய்வது மட்டுமின்றி, பேட்டரியை சார்ஜ் செய்தவதற்கான கட்டமைப்பு வசதிகளையும் அமைத்து தருவதற்கு டெஸ்லா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்திய மார்க்கெட்டில் வலுவாக கால் ஊன்ற டெஸ்லா திட்டமிட்டிருப்பது புலனாகிறது. இதற்கு இந்திய அரசின் கொள்கையும் முக்கிய காரணம்.

 மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு திட்டம்

வரும் 2030ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் 100 சதவீதம் மின்சார கார்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின்படி, மின்சார கார்களை முன்பணம் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான திட்டத்தையும் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால், மின்சார கார்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளதையும் டெஸ்லா மனதில் கொண்டு களமிறங்குகிறது.

 இந்தியர்கள் ஆர்வம்

இந்தியர்கள் ஆர்வம்

டெஸ்லா மாடல் 3 காரை வாங்குவதற்கு ஏராளமான இந்தியர்களும் முன்பதிவு செய்துள்ளனர். பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, வென்ச்சர் கேபிட்டலிஸ்ட் நிறுவனத்தின் மகேஷ் மூர்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் டெஸ்லா மாடல் 3 மின்சார காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

முன்பணம்

முன்பணம்

டெஸ்லா மாடல் 3 காருக்கு 1,000 டாலர் முன்பணமாக பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது. இதன்படி, தற்போது 2.76 லட்சம் பேர் டெஸ்லா மாடல் 3 காருக்கு முன்பதிவு செய்துள்ளதை வைத்து பார்க்கும்போது கிட்டத்தட்ட 276 மில்லியன் டாலர்களை டெஸ்லா நிறுவனம் முன்பணமாக பெற்றுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், இதுவரை ஒரு கார் கூட உற்பத்தி செய்யப்படாத நிலையில், இந்த பெரும் முதலீட்டை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.

 இந்திய மதிப்பு

இந்திய மதிப்பு

35,000 அமெரிக்க டாலர் விலையில் டெஸ்லா மாடல் 3 அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் விலையில் கிடைக்கும். ஆனால், தற்போது இருக்கும் இந்தியாவின் இறக்குமதி வரியை வைத்து பார்க்கும்போது ரூ.40 லட்சம் கொடுத்து இந்த காரை இந்திய வாடிக்கையாளர்கள் டெலிவிரி பெற வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் இறக்குமதி வரி உயர்த்தினால், இன்னும் விலை அதிகரிக்கும்.

இந்தியாவில் டெலிவிரி

இந்தியாவில் டெலிவிரி

விலை, விபரங்கள் அறிவிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு பிற்பகுதியில்தான் முதல் டெஸ்லா மாடல் 3 கார் டெலிவிரி கொடுக்கப்படும். அதன்படி, தற்போதைய முன்பதிவு எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது இன்னும் 2019ம் ஆண்டு அல்லது 2020ம் ஆண்டில்தான் இந்தியாவில் இந்த டெஸ்லா மாடல் 3 கார் டெலிவிரி கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், இந்தியாவில் முதல் டெஸ்லா கார் தடம் பதிக்க குறைந்தது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகலாம்.

எல்ஜி நிறுவனத்துக்கு ஜாக்பாட் ஆர்டர்

எல்ஜி நிறுவனத்துக்கு ஜாக்பாட் ஆர்டர்

டெஸ்லா மாடல் 3 மின்சார காரின் டேஷ்போர்டில் கொடுக்கப்பட இருக்கும் மிகப்பெரிய திரையை சப்ளை செய்யும் ஆர்டரை தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனம் பெற்றிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்காக, 250 மில்லியன் டாலர் வரை எல்ஜி நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும், இந்த ஆர்டர் மூலமாக ஆட்டோமொபைல் துறையிலும் எல்ஜி நிறுவனத்திற்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
English summary
Tesla Motors' Model 3 Car's Expected Price In India.
Story first published: Wednesday, April 6, 2016, 12:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark