ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மார்க்கெட்டுக்கு வராததற்கு காரணம் என்ன?

Written By: Krishna

என்னதான் பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டாலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கும் மவுசு அப்படியேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை.

டீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாடு விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை இழந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதிலிருந்து மீண்டு வர பல உத்திகளை சமீப காலமாக கையாண்டு வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் கார்களின் டீசல் எஞ்சினை மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தியதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்றொரு முகம் அந்த சோதனையில் வெளிப்பட்டது.

அதாவது, எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் ஃபோக்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பல்வேறு சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானது வோக்ஸ்வேகன் கார் நிறுவனம்.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடலான டிகுவான் காரை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஆனால், டிகுவான் மாடலை இப்போதைக்கு களமிறக்காமல், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் டிகுவான் மாடல் கணிசமான விற்பனையைப் பெற்றிருந்தாலும், இந்தியாவில் மார்க்கெட் நிலவரம் எப்படி? என்பது குறித்து முழுமையாக ஆராய்வதற்காகவே அந்த மாடலை அறிமுகப்படுத்தாமல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் காலந்தாழ்த்தி வருவதாகத் தெரிகிறது.

இதைத்தவிர, அண்மையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய காம்பேக்ட் செடான் மாடலான அமியோ காரின் விற்பனை செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாடலில் டீசல் எஞ்சின் கார்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன் அடிப்படையில்தான் அடுத்த மாடலை களமிறக்குவது குறித்து திட்டமிடப்படும் எனத் தெரிகிறது.

மேலும், அமியோ, போலோ ஜிடிஐ, பஸாட் உள்ளிட்ட மாடல் கார்களின் உற்பத்தி அதிக அளவில் இருப்பதால், அதற்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் டிகுவான் அறிமுகம் தள்ளிப் போகிறது என்று அந்நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

English summary
Tiguan SUV Launch Pushed Back To 2017 By Volkswagen India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark