விற்பனையில் டாப் - 10 கார்கள்... க்விட் விஸ்வரூபத்தில் அடங்கிய ஆல்ட்டோ விற்பனை!

Written By:

கடந்த மாத விற்பனை நிலவரப்படி, புதிய மாடல்களின் வரவால் சந்தையில் நீண்ட காலமாக சாதித்து வந்த கார் மாடல்களின் விற்பனை ஆட்டம் கண்டிருக்கிறது. குறிப்பாக, மாருதி கார்களின் விற்பனையில் சரிவு காணப்பட்டது.

பராமரிப்புப் பணிகளுக்காகவும், தனது ஆலைக்கு அருகிலிருந்த ஆலையில் தீப்பிடித்த சம்பவத்தாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக மாருதி தெரிவித்த போதிலும், மார்க்கெட்டுக்கு புதிதாக வந்த சில மாடல்களின் விற்பனை மாருதி கார் மாடல்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த மாத விற்பனை நிலவரத்தை ஸ்லைடரில் காணலாம் வாருங்கள்.

 10. மாருதி பலேனோ

10. மாருதி பலேனோ

கடந்த மே மாதம் ஹூண்டாய் எலைட் ஐ20 காரை விற்பனையில் வீழ்த்திய மாருதி பலேனோ காரின் விற்பனை கடந்த ஜூனில் சரிந்தது. கடந்த மாதத்தில் 6,967 பலேனோ கார்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், சிறப்பம்சங்கள், வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக மாறியிருக்கும் பலேனோ கார் மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா என்பது இந்த மாத விற்பனை பட்டியல் வந்தவுடன் தெரிந்துவிடும்.

09. ஹூண்டாய் க்ரெட்டா

09. ஹூண்டாய் க்ரெட்டா

போட்டியாளர்களை பற்றி அலட்டிக் கொள்ளாமல் மாதா மாதம் மிகச் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 7,700 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அருமையான டிசைனை வைத்து வாடிக்கையாளர்களை வசியம் செய்து வருகிறது.

08. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

08. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

பழைய மாடலைவிட புதிய இன்னோவா காரின் விலை சில லட்சங்கள் கூடுதலாக இருந்தாலும், டிசைன், சிறப்பம்சங்கள், இடவசதி என அனைத்திலும் தன்னிறவை தருகிறது. எனவே, டொயோட்டா நிறுவனத்தின் எதிர்பார்ப்பை விஞ்சிய விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 8,171 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் பெட்ரோல் மாடல் வந்தவுடன், டெல்லி உள்ளிட்ட NCR பிராந்தியத்திலும் விற்பனைக்கு வரும்போது, எண்ணிக்கை கூடுதலாகும் வாய்ப்பும் உள்ளது.

07. ஹூண்டாய் எலைட் ஐ20

07. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதத்தில் 8,990 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அறிமுகம் செய்யப்பட்டது முதலே மாதா மாதம் மிகச் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த காரின் டிசைனும், வசதிகளும் இதற்கு வலு சேர்க்கின்றன.

06. மாருதி ஸ்விஃப்ட்

06. மாருதி ஸ்விஃப்ட்

சராசரியாக 15,000 கார்களுக்கு மேல் இருந்த மாருதி ஸ்விஃப்ட் விற்பனை கடந்த மாதம் 9,033 என்ற மிக குறைவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் மூன்று இடங்களில் இருந்த ஸ்விஃப்ட் திடீரென 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது, அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. மீண்டு எழும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தியை ஸ்விஃப்ட் கொடுக்கும் என நம்பலாம்.

05. ரெனோ க்விட்

05. ரெனோ க்விட்

மார்க்கெட்டின் ப்ளாக் பஸ்டர் மாடலாக மாறியிருக்கிறது ரெனோ க்விட். முன்பதிவில் மாருதி தயாரிப்புகளையே விஞ்சி நிற்கிறது. மினி எஸ்யூவி போன்ற டிசைன், மிக குறைவான விலை, நவீன சிறப்பம்சங்கள் இந்த காரின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட காரணமாகியிருக்கிறது. கடந்த மாதத்தில் 9,459 க்விட் கார்கள் விற்பனையாகியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, முன்பதிவு ஒன்றரை லட்சத்தை தாண்டியிருப்பதால், அடுத்த சில மாதங்கள் வரை க்விட் காரின் விற்பனை மிகச் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்யும் என நம்பலாம்.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

தனது ஆஸ்தான 4ம் இடத்திலேயே அமர்ந்து, மாருதிக்கு ஆறுதல் தருகிறது மாருதி வேகன் ஆர் கார். குறைவான பராமரிப்பு செலவு, சரியான விலை கொண்ட நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற மாடல் என்பதே இதன் சிறப்பு. கடந்த மாதத்தில் 11,962 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

03. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

03. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல் என பெயரெடுத்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மூன்றாவது இடத்தை பிடித்துவிட்டது. அதாவது, ஸ்விஃப்ட் வைத்திருந்த இடத்தை தன் வசமாக்கிக் கொண்டது. கடந்த மாதத்தில் 12,678 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதம் 15,560 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. விற்பனை குறைந்தாலும் போட்டியாளர்கள் எட்ட முடியாத இடத்தில் இந்த கார் இருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட அதிக மைலேஜ் தரும் செடான் கார் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை தடாலடியாக குறைந்தது. உற்பத்தி பாதிக்கப்பட்டதாக மாருதி தெரிவித்தாலும், ரெனோ க்விட் காரின் நெருக்கடியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாருதியின் மீதான நம்பகத்தன்மை இந்த காரின் மார்க்கெட்டை ஸ்திரமாக கொண்டு செல்கிறது. கடந்த மாதத்தில் 15,750 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

English summary
Top 10 Best Selling Cars in June 2016.
Story first published: Saturday, July 9, 2016, 16:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark