டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பெட்ரோல் மாடலின் விபரங்கள் வெளியானது... முன்பதிவும் ஆரம்பம்!

By Saravana Rajan

கடந்த மே மாதம் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு விதமான டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்றும் டொயோட்டா தெரிவித்தது. எனினும், புதிய இன்னோவா வாடிக்கையாளர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், விரைவில் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டிருப்பதுடன், விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

 பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

டீசல் கார் விற்பனை தடாலடியாக குறைந்து வரும் நிலையில், பெட்ரோல் மாடல் மிக அவசியமாக கருதப்படுகிறது. ஏனெனில், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 2,000சிசி.,க்கும் மேல் திறன் கொண்ட டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், டீசல் கார்களை வாங்குவோரிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில், பெட்ரோல் மாடல்களை வாங்குவதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே, டொயோட்டாவும் பெட்ரோல் இன்னோவா காரை அறிமுகம் செய்வதில் வியப்பேதுமில்லை. தவிரவும், நாட்டிலேயே அதிக கார்கள் விற்பனையாகும் மார்க்கெட்டாக கருதப்படும் டெல்லியை உள்ளடக்கிய NCR மண்டலத்தில் இன்னும் புதிய இன்னோவா கார் விற்பனைக்கு செல்லவில்லை. இந்த நிலையில், பெட்ரோல் மாடலுடன் NCR பிராந்தியத்தில் அடியெடுத்து வைக்க உள்ளது புதிய இன்னோவா கார்.

சக்திவாய்ந்த எஞ்சின்

சக்திவாய்ந்த எஞ்சின்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிய 2.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக வருவதால், மிக சக்திவாய்ந்த எம்பிவி கார் மாடலாக வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம். 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

பழைய இன்னோவா காரை தேர்வு செய்ய செல்லும்போது எக்கச்சக்க வேரியண்ட்டுகள் இருந்ததால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், புதிய பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மூன்றே வேரியண்ட்டுகளில் வருவது சற்று குழுப்பத்தை குறைக்கும். புதிய இன்னோவா காரின் பெட்ரோல் மாடல் G,V மற்றும் Z ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் இடம்பெற இருக்கும் முக்கிய வசதிகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

இன்னோவா பெட்ரோல் - ஜி வேரியண்ட்

இன்னோவா பெட்ரோல் - ஜி வேரியண்ட்

இன்னோவா பெட்ரோல் மாடலின் பேஸ் மாடலாக விற்பனைக்கு வருகிறது. இந்த வேரியண்ட்டில், 7 பேர் மற்றும் 8 பேர் செல்வதற்கான இரண்டு விதமான இருக்கை வசதிகளில் கிடைக்கும். அதேபோன்று, இந்த வேரியண்ட்டை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 205/65R 16 அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். முக்கிய பாதுகாப்பு அம்சமாக மூன்று ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். டச்ஸ்கிரீன் இல்லை. மல்டி இன்ஃபர்மேஷன் திரை, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இன்னோவா பெட்ரோல் - வி வேரியண்ட்

இன்னோவா பெட்ரோல் - வி வேரியண்ட்

இது நடுத்தர வகை வேரியண்ட். இந்த மாடலில் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் மட்டுமே கிடைக்கும் என்பதோடு, மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே தேர்வு செய்ய இயலும் என்பதையும் இப்போதே மனதில் இறுத்திக் கொள்ளுங்கள். 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 205/65R 16 அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உண்டு. ஆட்டோமேட்டிக் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகள் இதன் முக்கிய சிறப்பம்சங்கள். சாவி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கார் அருகில் சென்றாலே, கார் கதவுகள் திறந்து கொள்ளும் கீ லெஸ் என்ட்ரி வசதியுடன் ஸ்மார்ட் சாவியும் வழங்கப்படும். இதுதவிர, டிரைவர் இருக்கை உயரத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும், நான்கு ஜன்னல் கண்ணாடிகளும் பொத்தானை ஒருமுறை அழுத்தினாலே, தானாக மேலே ஏறவும், இறங்கவும் செய்யும் வசதியும் இருக்கும்.

இன்னோவா பெட்ரோல் - இசட் வேரியண்ட்

இன்னோவா பெட்ரோல் - இசட் வேரியண்ட்

இதுதான் பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட். இந்த மாடலும் 7 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கும் என்பதுடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே தேர்வு செய்யலாம். இந்த டாப் வேரியணட்டில் முக்கிய அம்சம், 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 215/55R 17 அளவுடைய டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது காரின் வசீகரித்தை வெகுவாக உயர்த்தும். சேட்டிலைட் நேவிகேஷன் வசதியுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகளுடன் வருகிறது. நெடுஞ்சாலையில் ஆக்சிலரேட்டரை மிதிக்காமல் குறிப்பிட்ட சீரான வேகத்தில் காரை செலுத்துவதற்கான க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் இந்த மாடலில் இருக்கிறது. இதுதவிர, 7 ஏர்பேக்குகள், காரை நிலையாக செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் மலைச் சாலைகளில் செல்லும்போது, கார் பின்னோக்கி நகராமல் தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.13 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடலைவிட ரூ.60,000 குறைவான விலையில்பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.1 லட்சம் முன்பணத்தை செலுத்தி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டா பெட்ரோல் காரின் டெலிவிரி துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டீசல் மாடலின் முழு விபரம்!

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டீசல் மாடலின் முழு விபரம்!

Most Read Articles
English summary
Toyota Innova Crysta Petrol Variants Revealed, Bookings Open.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X