டெல்லியில் டீசல் வாகனங்களுக்கான தடை மரண தண்டனைக்கு சமம்: டொயோட்டா

Written By: Krishna

தலைநகராம் தில்லியில், ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு தலை வலிகளை உருவாக்கும் வகையிலான பல அதிரடி அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 2,000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, அந்தத் திறன் எஞ்சின் கொண்ட வாகனங்களை தில்லியில் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் தன் பங்குக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

டொயோட்டா கார்

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உத்தரவுகளுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்களின் டீசல் வாகன விற்பனை தில்லியில் சர்ரென சரிந்து மண்ணோடு மண்ணாகியிருக்கிறது.

நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து டொயோட்டா நிறுவனம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டீசல் வாகனங்களுக்கு தடை விதித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முற்றிலும் நியாயமானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட உச்சமாக, இந்த தடை உத்தரவு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு ஒப்பானது என்றும் தனது கோபத்தை மனு வாயிலாகக் காட்டியுள்ளது டொயோட்டா நிறுவனம்.

அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளோம்...

பொதுவாக, ஒரு வாகனம் வெளியேற்றும் மாசுவின் அளவுக்கும், அதன் எஞ்சின் திறனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வாகனங்கள் அளவுக்கு அதிகமாக மாசை உமிழும் பட்சத்தில், எஞ்சின்தான் அதற்கு காரணம் என்று கருத வேண்டிய கட்டாயமில்லை என இந்திய மோட்டார் வாகனச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறினால் தடை விதிப்பதோ அல்லது தண்டனை தருவதோ நியாயம். ஆனால், எந்த விதமான விதிமீறல்களும் இல்லாத பட்சத்தில் பொத்தாம் பொதுவாக 2,000 சிசி டீசல் எஞ்சின் வாகனங்களுக்குத் தடை விதித்தது சரியான உத்தரவு அல்ல.

இது, ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் செயல்பாட்டையே முடக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தத் துறையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது என்று அந்த மனுவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது டொயோட்டா நிறுவனம்.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதேந்தர் குமார் முன்பு இந்த மனு, விசாரணைக்கு வந்தது. அதைப் பரிசீலித்த அவர், மனுவின் மீதான அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மொத்தத்தில், தில்லிக்குள் மீண்டும் 2,000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களை உலவ வைக்க பெரு முயற்சி எடுத்து வருகின்றன ஆட்டோ மொபைல் நிறுவனங்கள். சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுத்து விடாப்பிடியாக நிற்கிறது பசுமைத் தீர்ப்பாயம்.

இறுதியில் என்னதான் நடக்கப் போகிறது? என்பதை அறிய கொஞ்ச காலம் காத்திருப்போம்....

English summary
Toyota Tells NGT That Diesel vehicle Ban Impacts Company's Existence.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark