ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்குள் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டுகள்...

By: Meena

எஸ்டிஆர் என்று மக்களால் அன்போடு (?) அழைக்கப்படும் சிம்புவும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதே மாதிரி பாலிவுட் ஷைனிங் ஸ்டார் சல்மான் கானுக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

அவர்கள் இருவருமே ஃபோக்ஸ்வேகன் கார் வைத்திருக்கிறார்கள், அதுவே அந்த ஒற்றுமை என்கிறீர்ளா? அதுதான் இல்லை. விஷயம் வேறு...

ஃபோக்ஸ்வேகன் மோசடி

சிம்பு, சல்மான் என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது சர்ச்சைகள்தான். ஏதாவது ஒரு சர்ச்சைக்குள் வம்படியாக இருவரும் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வார்கள். அதுமாதிரித்தான் ஆகி விட்டது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நிலைமையும்.

டீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாடு முறைகேடு விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கி பல்பு வாங்கிய அந்நிறுவனம், தற்போது இன்னொரு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

இந்த முறை தவறு அவர்களுடையது அல்ல. அது ஒரு வரலாற்றுப் பிழை. ஒன்றும் புரியவில்லையா?

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் தலைமை அலுவலகத்தில் மீது எறியப்பட்ட குண்டுகளில், வெடிக்காமல் இருக்கும் சிலவற்றை நிபுணர்கள் தேடி வருகின்றனர். இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அப்போதைய ஜெர்மனி மீது பிற நாடுகள் வான்வழித் தாக்குதலை நடத்தின.

ஜெர்மனியின் வோல்ஃப்ஸ்பெர்க் நகரில் ஃபோக்ஸ்வேகன் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தை நாஜி அரசு அப்போது தொடங்கியது. அதன் மீதும் குண்டு மழை பொழிந்தது.

அந்த காலகட்டத்தில் வீசப்பட்டு வெடிக்காமல் போன பல குண்டுகள் சமீபத்தில் கண்டறியப்பட்டன. அதன் படி, குண்டு போன்ற உலோகம் ஃபோக்ஸ்வேகன் நிறுவன வளாகத்திலும் கிடந்ததாக கட்டுமான ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கு குண்டுகள் இருப்பது கண்டறி்யப்படும் பட்சத்தில் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போரை பத்திரமாக வெளியேற்றிவிட்டு, குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தற்போது உள்ள அதி நவீன தொழில்நுட்பம் வாயிலாக எப்பேர்பட்ட குண்டுகளையும், நிமிடப் பொழுதில் செயலிழக்கச் செய்துவிடலாம்.

அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை ஊட்டியுள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

எது எப்படியோ, இதனால் உற்பத்தியோ விற்பனையோ பாதிக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் ஃபோக்ஸ்வேகன் பெயரைக் கேட்டாலே இப்போதெல்லாம் படபடப்பில் கை கால்களெல்லாம் சும்மா உதறுது...

English summary
Volkswagen Headquarters Being Searched For World War II Bombs.
Please Wait while comments are loading...

Latest Photos