விபத்துகளைத் தவிர்க்க ரேடார் டெக்னாலஜி பாதுகாப்பு..... வால்வோ காரில் புதிய வசதி

Written By: Krishna

சொகுசு கார்களில் முக்கிய பிராண்டாக இருக்கும் வால்வோ, இந்தியாவில் புதிய விஷயம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

காரின் பாதுகாப்பு அம்சங்களை ரேடார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொண்டு அதில் பயணிப்போரை அரண் போல் காக்கும் முயற்சியில் இறங்கவுள்ளது அந்நிறுவனம். புரியவில்லையா? காரில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென பாதசாரிகள் சாலையைக் கடப்பார்கள். சைக்கிள், ஆட்டோக்கள் சரமாரியாக குறுக்கே வந்து நம்மை எரிச்சலூட்டும்.

ரேடார் தொழில்நுட்பத்துடன் வால்வோ கார்

இதைத்தவிர வெளிச்சமில்லாத சாலைகளில் செல்லும் போது எதிரில் வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாமல் திக்கு முக்காடிப் போகும் அனுபவமும் நமக்கு வாய்க்கிறது. இத்தகைய அவதிகளிலிருந்து விடுபட ரேடார் அலைவரிசை அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்களை காரில் பொருத்த வால்வோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விரைவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள எஸ் 90 எஸ்யூவி மாடல் காரில் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் சாலைக்கு குறுக்கே வரும் வாகனங்களையும், பாதசாரிகளையும் ரேடார் சாதனம் முன்கூட்டியே நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதாவது நமக்கு எச்சரிக்கை வழங்கிவிடும். அதன் அடிப்படையில் விபத்துகள் நேராமல் நாம் தவிர்த்து விடலாம்.

சர்வதேச மார்க்கெட்டில் வால்வோ நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களில் இந்த வசதிகள் உள்ளன. குறிப்பிட்ட அலைவரிசையிலான ரேடார் சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால் இந்தியாவில் மட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு முன்வந்ததைத் தொடர்ந்து ரேடார் அலைவரிசை அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவுக்கும் வரவுள்ளன.

வால்வோ எக்ஸ்சி 90 மாடலில் ஏற்கெனவே அந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், அவை ரேடார் தொழில்நுட்ப அடிப்படையில் வடிவமைக்கப்படாமல் இருந்தன. தற்போது அவற்றையும் ரேடார் டெக்னாலஜியில் மேம்படுத்த வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அலைவரிசைப் பயன்பாட்டு அனுமதி தொடர்பாக மத்திய அரசுடன் வால்வோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அனுமதி கிடைத்த பிறகு விரைவில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

இந்தத் தகவலை வால்வோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வோன் போன்ஸ்டோர்ஃப் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுபோன்ற பாதுகாப்புக்கான நவீன வசதிகள் அனைத்து வாகனங்களிலும் இருந்தால், இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும்.

English summary
Volvo To Enable Radar Based Safety Features In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark