ஃபோக்ஸ்வேகன் டீசல் எஞ்சின் முறைகேடு.... வாடிக்கையாளர்களுக்கு 1,000 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க வாய்ப்பு

Written By: Krishna

டீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாட்டு விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக 1,000 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67,000 கோடி) வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் தயாரித்த கார்களை வைத்திருந்தாலே கௌரவம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் அந்தக் கார்களின் டீசல் எஞ்சினை மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தியதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

ஃபோக்ஸ்வேகன்

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்றொரு முகம் அந்த சோதனையில் வெளிப்பட்டது.

அதாவது, எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் ஃபோக்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பல்வேறு சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானது வோக்ஸ்வேகன் கார் நிறுவனம்.

மேலும், சர்வதேச அளவில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை பாதிக்கப்பட்டதுடன், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.6 சதவீதம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் இந்த கார்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டதுடன், அதுதொடர்பான வழக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வரும் ஜூலை 17-ஆம் தேதி இழப்பீடு வழங்குவது தொடர்பான இறுதி விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், டீசல் எஞ்சின் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்களுக்கு 1,000 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்கலாம் எனத் தெரிகிறது.

சராசரியாக வாடிக்கையாளர்களுக்கு தலா 5,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.4 லட்சம்) இழப்பீடு வழங்கப்படலாம் என்றும், அமெரிக்காவில் விற்பனையான 5 லட்சம் கார்களை திரும்பப் பெறக்கூடும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைத் தவிர சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக 400 கோடி டாலர்கள் அபராதமும் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உள்ளது.

கறைகளைத் துடைத்தெறிந்து மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எத்தகைய அதிரடி முயற்சிகளை எடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
VW Could Pay 10+ Billion Dollars As Compensation For Diesel Gate

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark