சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... மாருதி நிறுவனம் குமுறல்....

Written By: Krishna

தெறிக்க விடலாமா... என வேதாளம் அஜித் ரேஞ்சுக்கு மாஸ் காட்டிக் கொண்டிருந்த மாருதி நிறுவனத்துக்கு இது கொஞ்சம் போதாத காலம்தான் போலிருக்கிறது. ஆல்ட்டோ, வேகன் ஆர், ரிட்ஸ், ஸ்விஃப்ட் என ஆரம்ப நிலை மாடல்களை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கி விற்பனை செய்து கொண்டிருந்தது மாருதி.

ஆரம்ப நிலை கார் ஒன்று வாங்க வேண்டும் என முடிவு செய்தாலே அது ஆல்ட்டோவாகத்தான் இருந்தது. வேறு சாய்ஸும் இல்லை. மற்ற நிறுவனங்கள் மேல் இந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை என்ற நிலை இருந்தது. ஆல்ட்டோவுக்கு போட்டியாக ரெனால்ட் க்விட் வந்ததோ இல்லையோ மக்களின் பார்வை எல்லாம் அதன் மேல் விழுந்தது. விற்பனையில் மாருதியை விஞ்சிக் கொண்டிருக்கிறது க்விட். இதனால் செம டென்ஷனாக இருந்த மாருதி நிறுவனத்துக்கு மேலும், பி.பி.யை ஏற்றும் வகையில் மற்றொரு ஷாக் நியூஸ் வந்திருக்கிறது.

கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்தியாவில் தனது ஆலையைத் தொடங்குகிறது என்பதுதான் அந்த செய்தி. இந்தத் தகவலால் வசூல் ராஜா எம்பிபிஎஸ் பிரகாஷ் ராஜ் போல ஏக டென்ஷனில் இருக்கிறார்களாம் மாருதி நிறுவன நிர்வாகிகள்.

கியா கம்பெனியின் தாய் நிறுவனமான ஹுண்டாய், இந்தியாவில் கணிசமான மார்க்கெட்டைப் பிடித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் கிரீட்டா உள்ளிட்ட மாடல்கள் செக்மெண்ட் லீடராகவும் உள்ளன.

மொத்த விற்பனைப் பங்கில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கியா நிறுவனம் இந்தியாவுக்குள் தடம் பதிக்க ஹுண்டாய் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உற்பத்தித் தொழிற்சாலைக்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் ஹைதராபாதில் புதிய ஆலைக்கான இடத்தை கேஐஏ நிறுவனம் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டால், எதிர் வரும் 2019-ஆம் ஆண்டு முதல் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் செயல்படத் தொடங்க வாய்ப்புள்ளது.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை இங்கு உற்பத்தி செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இந்தியாவை கேஐஏ கார்களுக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதைத் தவிர, இந்திய மார்க்கெட்டில் கேஐஏ நிறுவன கார்களுக்கான டிமாண்டை உருவாக்குவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த மாடல் கார்களை இந்தியாவில் தயாரிக்கப் போகிறோம் என்பதை கேஐஏ நிறுவனம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

அதேவேளையில், இந்திய சாலைகள் மற்றும் மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் சில மாடல்களை உற்பத்தி செய்து இங்கு களமிறக்கக் காத்திருக்கிறது கியா நிறுவனம்.

மொத்தத்தில் மார்க்கெட் லீடராக உருவெடுக்க வேண்டும் என்பதில் திடமாகச் செயல்பட்டு வருகின்றன ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள்...

இந்தச் சவால்களில் இருந்து எப்படி மீண்டுவரப் போகிறது மாருதி? பொறுத்திருந்து பார்ப்போம்...

English summary
Will Maruti Suzuki Face A New Threat Soon From The South Koreans?
Please Wait while comments are loading...

Latest Photos