விற்பனையில் உலகின் டாப் 10 கார்கள்... நம்பர்-1 யார் தெரியுமா?

Written By:

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் விபரங்களை மாதாமாதம் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படித்து வருகிறீர்கள். அந்த விஷயங்கள் புதிய கார் வாங்குவோர் காரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் உலக அளவில் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருக்கும் டாப் 10 கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணப் போகிறீர்கள்.

ஒவ்வொரு நாட்டு வாடிக்கையாளர்களின் டேஸ்ட் மாறுபடும் என்றாலும், உலக அளவில் வாடிக்கையாளர்களிடம் அதிக ஆதரவை பெற்றிருக்கும் கார் மாடல்களை இங்கே பார்க்கப் போகிறோம். இதில் இடம்பிடித்திருக்கும் சில மாடல்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுவதால், புதிய கார் வாங்கும்போது இந்த புள்ளிவிபரமும் உங்களது தேர்வுக்கு துணையாக இருக்கும் என நம்புகிறோம்.

10. செவர்லே சில்வரடோ

10. செவர்லே சில்வரடோ

ஜனவரி முதல் ஜூன் வரையிலான இந்த ஆண்டின் முதல் அரையாண்டு விற்பனை நிலவரப்படி, உலக அளவில் செவர்லே சில்வரடோ பிக்கப் டிரக் 10வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 3,07,845 சில்வர்டோ பிக்கப் டிரக்குகள் விற்பனை செய்யப்படிருக்கின்றன. ஜிஎம்சி சியரா பிக்கப் டிரக்கின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் இது. தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனையில் உள்ளது. மொத்தம் 11 முறை சிறந்த பிக்கப் டிரக்கிற்கான விருதை வென்றிருக்கிறது.

09. ஹோண்டா சிஆர்வி

09. ஹோண்டா சிஆர்வி

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு விற்பனையின்படி, உலக அளவில் 9வது இடத்தை ஹோண்டா சிஆர்வி கார் பிடித்திருக்கிறது. நம்மூரில் டொயோட்டா ஃபார்ச்சூனரும், ஃபோர்டு எண்டெவரும் இந்த செக்மென்ட்டை ஆட்டுவித்து வரும் நிலையில், உலக அளவில் இந்த செக்மென்ட்டில் கிங் ஹோண்டா சிஆர்வி என்பது இதன் மூலமாக தெரியவருகிறது. ஜனவரி - ஜூன் இடையிலான முதல் அரையாண்டில் 3,33,597 ஹோண்டா சிஆர்வி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

08. டொயோட்டா கேம்ரி

08. டொயோட்டா கேம்ரி

ஜனவரி- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் 3,39,611 டொயோட்டா கேம்ரி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. நம் நாட்டிலும் டொயோட்டா கேம்ரியின் ஹைபிரிட் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

07. டொயோட்டா ஆர்ஏவி4

07. டொயோட்டா ஆர்ஏவி4

டொயோட்டா நிறுவனத்தின் ஆர்ஏவி4 எஸ்யூவி 7வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் உலக அளவில் 3,46,791 டொயோட்ட ஆர்ஏவி4 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

06. ஃபோக்ஸ்வேகன் போலோ

06. ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ சிறந்த கார் என்று நாம் பலமுறை எழுதி வந்திருக்கிறோம். இந்திய மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகனின் விற்பனைக்கு பிந்தைய சேவை, சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கை போன்றவற்றால்தான் இந்த கார் விற்பனையில் பின்தங்கி நிற்கிறது. ஆனால், உலக அளவில் அதிகம் விற்பனையாகும் 6வது சிறந்த கார் மாடலாக விளங்குகிறது. ஜனவரி- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் 3,58,602 ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

05. ஹூண்டாய் எலான்ட்ரா

05. ஹூண்டாய் எலான்ட்ரா

ஹூண்டாய் எலான்ட்ரா கார் 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சொல்லிக்கொள்ளும்படி விற்பனையில்லை என்றாலும், உலக அளவில் சிறந்த காராக இருக்கிறது. 2016ல் முதல் அரையாண்டு காலத்தில் 3,63,490 எலான்ட்ரா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

 04. ஃபோர்டு ஃபோகஸ்

04. ஃபோர்டு ஃபோகஸ்

ஃபோர்டு ஃபோகஸ் கார் 4வது இடத்தை பிடித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 3,67,479 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தைவிட தற்போது விற்பனை 16.4 சதவீதம் குறைந்துவிட்டது ஃபோர்டு நிறுவனத்துக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

03. ஃபோர்டு எஃப் சீரிஸ்

03. ஃபோர்டு எஃப் சீரிஸ்

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பிக்கப் டிரக் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஜனவரி- ஜூன் இடையிலான முதல் ஆறு மாதங்களில் 4,78,384 ஃபோர்டு எஃப் சீரிஸ் பிக்கப் டிரக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. மேலும், கடந்த ஆண்டு முதல் அரையாண்டு கால விற்பனையுடன் ஒப்பிடும்போது, தற்போது 12.6 சதவீதம் விற்பனை கூடியிருக்கிறது.

 02. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

02. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

விற்பனையில் தொடர்ந்து உலக அளவில் முன்னிலை வகிக்கும் மாடலாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் விளங்குகிறது. கடந்த ஜனவரி - ஜூன் இடையிலான காலத்தில் 5,00,630 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மாசு பிரச்னையில் சிக்கி தவித்தாலும், கோல்ஃப், போலோ கார்களின் விற்பனை அந்த நிறுவனத்துக்கு தெம்பை ஊட்டி வருகிறது.

 01. டொயோட்டா கரொல்லா

01. டொயோட்டா கரொல்லா

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில், விற்பனையில் உலகின் நம்பர்-1 கார் மாடல் என்ற பெருமையை டொயோட்ட கரொல்லா பெற்றிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் உலக அளவில் 6,34,298 கரொல்லா கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த கார் மாடலாக டொயோட்டா கரொல்லா விளங்குகிறது.

மொத்த விற்பனை

மொத்த விற்பனை

கார் மற்றும் இலகு ரக தனி நபர் பயன்பாட்டு ரக யுட்டிலிட்டி வாகனங்கள் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது. ஜனவரி - ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் உலக அளவில் இந்த பிரிவில் மட்டும் 48.5 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தைவிட தற்போது 3 சதவீதம் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

 
English summary
world’s best-selling cars in H1 2016 .
Story first published: Monday, August 8, 2016, 11:33 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos