இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு சொந்த வாகனம் இல்லையாம்... இதுக்கே ரோடு தாங்கலியேப்பா...!!

Written By: Krishna

இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும்... புகை மண்டலங்களும்... இப்படி ஒரு கொடுமையான விளம்பரத்தைப் போட்டுவிட்டுதான் தியேட்டர்களில் படம் திரையிடுவார்கள். புகை மண்டலம் என்றவுடன் ஞாபகம் வருகிறது... சர்வேதச அளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னணியில் இருப்பதாக சமீபத்திய சர்வே ஒன்று கூறியுள்ளது.

அந்தக் காலத்துல எல்லாம் இப்படி இல்லைங்க... இப்பதான் இவ்வளவு வண்டி ரோட்டுல ஓடுது... அதான் காத்து கருப்பு நிறமாயிடுச்சு என வயதானவர்களின் ஆதங்கக் குரல்கள் ஆங்காங்கே ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள். அப்படி புலம்பித் தள்ளும் பழைய தலைமுறையினருக்கும், இதை எதையுமே காதில் போட்டுக் கொள்ளாத புதிய தலைமுறையினருக்கும் ஒரு அதிர்ச்சியான விஷயம் காத்திருக்கிறது.

கார்

சாலையில் போகும் வாகனங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டதாக எண்ணுகிறோம். ஆனால், அண்மையில் மத்திய அரசு எடுத்துள்ள ஓர் ஆய்வின் முடிவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு எந்த விதமான வாகனமும் சொந்தமாக இல்லையாம். அதேபோல் மொத்த வாகனங்களில் வெறும் 1 சதவீத அளவில்தான் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பஸ்கள் உள்ளனவாம். இதுதான் அந்த சர்வே முடிவில் வெளிவந்துள்ள உண்மை.

இது என்னங்க... புதுக் கதையாக இருக்கு என நினைக்க வேண்டாம். நாட்டின் மொத்த மக்கள் தொகையயும், வாகனங்களின் எண்ணிக்கையயும் ஒப்பிட்டுப் பார்த்தால் 90 சதவீத மக்களுக்கு சொந்தமாக வண்டி இல்லை என்பது தெளிவாகப் புரியும்.

18.64 கோடி வாகனங்கள் (இரு சக்கர வாகனங்களையும் சேர்த்து) இந்தியாவில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் இருந்து ஒரு முடிவுக்கு வரலாம்.. நாட்டில் பெரும்பாலான மக்கள், போக்குவரத்து வசதிக்கு அரசு பஸ்களை நம்பியே இருக்கிறார்கள் என்பதுதான் அது.

ஆனால், அப்படித்தான் அரசுக்குச் சொந்தமான பஸ்கள் போதுமான அளவு உள்ளனவா? என்றால் அதுவும் இல்லை. மொத்தம் 18 லட்சம் பேருந்துகளில் மாநில அரசுகளுக்குச் சொந்தமாக வெறும் 1.8 லட்சம் பஸ்கள் மட்டுமே இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்தியர்களுக்கு சுயமாக வாகனமும் இல்லை, அரசு பேருந்துகளும் பற்றாக்குறை நிலை.... இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், அரசு பேருந்துகளை அதிகரிப்பதற்கான வழிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல கட்டாயமும் கூட...

English summary
You Will Be Surprised To Know How Many Indians Own A Vehicle.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark