பாதசாரிகளை காவு வாங்கும் கார்கள்.... வடிவமைப்பை மாற்றுமாறு மத்திய அரசு அதிரடி உத்தரவு

By: Meena

காரில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க பல புதிய தொழில்நுட்பத்திலான சாதனங்கள் வந்துவிட்டன. ஏர் பேக்-களில் கூட பாதுகாப்பு அம்சங்கள் பல அடுக்குகள் மேம்படுத்துவிட்டன.

இது எல்லாமுமே காருக்குள் இருப்பவர்களுக்கு மட்டும்தான். எதிரே வந்து விபத்துக்குள்ளாகுபவர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டைத் (தேர்ட் பார்ட்டி இன்ஷுரன்ஸ்) தவிர வேறு எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லை.

பாதுகாப்பு அம்சங்கள்

பெரும்பாலும் பாதசாரிகள்தான் இதுபோன்ற விபத்துகளில் சிக்குகின்றனர். அவர்களில் எண்ணற்றோர் உயிரிழப்பது துரதிருஷ்டவசமானது. சாலை விபத்துகளில் சிக்கி 14,000 பாதசாரிகள் உயிரிழந்திருப்பதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஒரு ரிப்போர்டில் பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க, வண்டியின் முகப்பு வடிவமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது பம்பர், பேனட், முகப்பு வளைவுகள் ஆகியவைதான் பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

எனவே, அதைத் தவிர்க்கும் பொருட்டு முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சாதனங்களை இலகுவாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை அமலில் இருந்தாலும், இந்தியாவில் அது பின்பற்றப்படாதது வருத்தத்துக்குரியது.

அவ்வாறு மாற்றங்களைச் செய்தால் மட்டுமே வாகனங்களுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சர்வதேச மற்றும் தேசிய கார் செயல்பாடுகளை மதிப்பிட அண்மையில் மேற்கொண்ட சோதனையில், இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள் ஒரு மதிப்பெண்ணைக் கூட பெறவில்லையாம்.

இந்த நிலையில்தான் காரின் முகப்புகளை மாற்றியமைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அதற்கான காலக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகமாகும் கார்கள் விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 64 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் இயக்கப்பட்டு செயற்கையாக விபத்துக்குள்ளாக்கி சோதனை மேற்கொள்ளப்படும். அதில் தேர்வாகும் மாடல்களுக்கு மட்டுமே பாதுகாப்புக்கான நற்சான்று வழங்கப்படும் என்று அரசு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சொகுசு வசதிகளுக்கும், சிறப்பம்சங்களுக்கும் கார் நிறுவனங்கள் தரும் முக்கியத்துவத்தை எதிரே வரும் வாகனங்களின் பாதுகாப்புக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை. இனிமேலாவது இந்த விஷயத்தில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு.

English summary
Your Future Car To Come With Frontal Protection System.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark