இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா-1 கார் பந்தயம் வருவதற்கான வாய்ப்பு!
ஃபார்முலா-1 கார் பந்தயம் மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் துளிர் விட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவில், மீண்டும் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 2011ம் ஆண்டு முதல்முறையாக ஃபார்முலா-1 எனப்படும் உலகின் முதல் தர கார் பந்தயம் இந்தியாவில் நடந்தன. டெல்லி அருகே நொய்டாவில் அமைக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த பந்தயங்கள் விமரிசையாக நடந்தன.

கார் பிரியர்களையும், மோட்டார் பந்தய பிரியர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த பந்தயம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயத்திற்கு விதிக்கப்பட்ட வரிகள் மிக அதிகமாக இருப்பதாக ஃபார்முலா-1 அமைப்பு புகார் தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய அரசிடம் போட்டியை நடத்திய ஜேபி இன்டர்நேஷனல் குழுமம் மேற்கொண்ட பேச்சுகளும், முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதனால், இந்தியாவிலிருந்து ஃபார்முலா-1 கார் பந்தயம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது கார் பந்தய பிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், ஃபார்முலா-1 பந்தயம் நடத்துவதற்கான தரத்தில், பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டும் ஃபார்முலா-1 போட்டிகள் களை இழந்தது. தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், ஃபார்முலா-1 போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மீண்டும் துளிர்விட்டுள்ளன. ஆம். ஃபார்முலா-1 போட்டி நடத்தும் அமைப்பு அண்மையில் கைமாறியது. ஃபார்முலா-1 அமைப்பை வாங்கியிருக்கும் லிபர்டி மீடியாவின் உரிமையாளர் சேஸ் கரே இப்போட்டியை விரிவுப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

அதன்படி, பல புதிய இடங்களில் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஃபார்முலா-1 போட்டிக்கு இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு 21 போட்டிகளை நடத்த லிபர்டி மீடியா திட்டமிட்டுள்ளது. அப்போது, ஃபார்முலா-1 போட்டிகளை நடத்துவதற்கு புதிய நாடுகள் சேர்க்கப்படும். அந்த வகையில், மீண்டும் இந்தியாவில் ஃபார்முலா-1 போட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த செய்தி கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








