
பெரும் ஆவலைத் தூண்டிய புதிய லம்போர்கினி சூப்பர் எஸ்யூவி கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மும்பையில் நடந்து வரும் அறிமுக விழாவிலிருந்து டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மும்பை நிருபர் புரோமித் கோஷ் தரும் கூடுதல் தகவல்களையும், பிரத்யேக படங்களையும் தொடர்ந்து காணலாம்.
கடந்த மாதம் 4ந் தேதி லம்போர்கினி உரஸ் எஸ்யூவி இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சர்வதேச அறிமுகத்திற்கு ஒரு மாதத்தில் இந்தியாவில் இந்த புத்தம் புதிய சூப்பர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
சூப்பர் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் 25 ஆண்டுகள் கழித்து அறிமுகம் செய்த புதிய எஸ்யூவி ரக மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை பொய்க்காத அளவுக்கு மிரட்டலான டிசைனில் இந்த எஸ்யூவி வந்துள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரிலிருந்து வார்த்தெடுத்த எஸ்யூவி மாடல் போன்று தோற்றமளிக்கிறது உரஸ் எஸ்யூவி. இன்டீரியரும் லம்போர்கினி கார்களுக்குரிய தனித்துவ டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.
பென்ட்லி பென்டைகா, ஆடி க்யூ7, போர்ஷே கேயென் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டூரக் உள்ளிட்ட உயர்ரக எஸ்யூவி கார்கள் உருவாக்கப்பட்ட அதே ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி எவோ என்ற கட்டமைப்பில்தான் இந்த புதிய லம்போர்கினி நிறுவனத்தின் உரஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
Trending On Drivespark Tamil:
கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் சில குறிப்புகள்!
இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்... மெர்சிடிஸ் பென்ஸ் ஹேட்ரிக் வெற்றி..!!
இந்த எஸ்யூவி 5,112மிமீ நீளமும், 2,016 மிமீ அகலமும், 1,638மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 3,003மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூப்பர் எஸ்யூவி 2.2 டன் எடை கொண்டது.
இந்த எஸ்யூவியில் 21 அங்குல சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 22 மற்றும் 23 அங்குல அலாய் சக்கரங்களை ஆப்ஷனலாக பெறலாம். இந்த எஸ்யூவிக்கெனி விசேஷமான பைரெல்லி டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
புதிய லம்போர்கினி சூப்பர் எஸ்யூவியில் இரண்டு டிஎஃப்டி திரைகள் கொண்ட சாதனங்கள் மேலும், கீழுமாக பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேல் உள்ள சாதனம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக பயன்படும்.
இந்த சூப்பர் எஸ்யூவியில் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.
புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி 0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை வெறும் 12.8 வினாடிகளிலும் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 306 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.
லம்போர்கினி உரஸ் எஸ்யூவியில் 6 விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில், மூன்று சாலைகளிலும், மூன்று ஆஃப் ரோடுகளில் செல்லும்போதும் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.
பிற லம்போர்கினி சூப்பர் கார்களை போல அல்லாமல் நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது. பிற லம்போர்கினி சூப்பர் கார்களை இந்திய சாலைகளில் மிக கவனமாக ஓட்ட வேண்டியிருக்கும். ஆனால், இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால் சிரமமில்லாமல் ஓட்டலாம்.
மேலும், இந்த எஸ்யூவியில் 616 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு சிறப்பான விஷயமாக கருத முடியும். இதன் பூட்ரூம் மூடியை சிரமமில்லாமல் திறக்கும் வசதியும் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
அடுத்து, இந்த கார் 5 பேர் செல்லும் இருக்கை வசதியை பெற்றிருப்பதும் கூடுதல் சிறப்பு. அறிமுக விழாவில் மஞ்சள், சிவப்பு, நீல வண்ண உரஸ் எஸ்யூவியை கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், வெள்ளை வண்ண உரஸ் எஸ்யூவி நிறுத்தப்பட்டது சற்றே ஏமாற்றம்.
ரூ.3 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய சூப்பர் கார் பிரியர்களின் கவனத்தை இந்த எஸ்யூவி வெகுவாக ஈர்க்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது. விரைவில் பெரும் பணக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள் வீட்டை இந்த கார் அலங்கரிக்கும் என்று நம்பலாம்.
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark