புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுக விபரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த கார் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில், வரும் மே மாதம் புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வர இருப்பதாக ஹோண்டா டீலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூ.21,000 முன்பணத்துடன் புதிய ஹோண்டா அமேஸ் கார் முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர்த்து புதிய ஹோண்டா அமேஸ் காரின் எஞ்சின் குறித்தும் டீலர் வட்டாரங்கள் உறுதியான தகவலை அளித்தனர். தற்போது பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய ஹோண்டா அமேஸ் காரிலும் இடம்பெற இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.
டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.
ஹோண்டா சிட்டி காரின் பல டிசைன் தாத்பரியங்கள் புதிய ஹோண்டா அமேஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஹெட்லைட் அமைப்பு, உயர்த்தப்பட்ட பானட் அமைப்பு, க்ரில் அமைப்பு ஆகியவை மிகச் சிறப்பான தோற்றத்தை தருகிறது.
தற்போதைய மாடலில் 14 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், புதிய ஹோண்டா அமேஸ் காரில் 15 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றது. புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டரும் சிறப்பானதாக இருக்கிறது.
புதிய ஹோண்டா அமேஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியுடன் வருகிறது.
பழைய மாடலைவிட அதிக கம்பீரத்துடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஹோண்டா அமேஸ் கார் வருவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் டெலிவிரி துவங்கும் என்று டீலர் வட்டாரங்கள் கூறுகின்றன.
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark